நடிகை ஷாலினி அஜித் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும், சிவாஜி கணேசன் உள்பட பல பிரபலங்களுடன் அவர் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. அவரை பின்பற்றி அவருடைய சகோதரி ஷாம்லியும் மிகக் குறைந்த வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். அதாவது நடிகை ஷாமிலி 1987 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி பிறந்தார். ஆனால் அவரது முதல் படம் விஜயகாந்த் நடித்த ’ராஜநடை’ 1989 ஆம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி ரிலீஸ் ஆனது. இரண்டே வயதில் அவர் நடிக்க வந்து விட்டார்.
இருப்பினும் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்த படம் என்றால் மூன்றாவது வயதில் நடித்த ’அஞ்சலி’ திரைப்படம் தான். இந்த படம் குழந்தை நட்சத்திரம் ஷாம்லியின் கேரக்டரை சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி ’அஞ்சலி’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் பெற்று சிறு வயதிலேயே கவனம் ஈர்த்திருந்தார். இது தவிர தமிழ்நாடு அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதும் அவருக்கு கிடைத்திருந்தது.
ஒரு மூன்று வயது குழந்தைக்கு ஒரு சின்ன கேரக்டர் கொடுத்து நடிக்க வைப்பது என்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால் ஒரு படம் முழுவதும் வரும் கேரக்டரை கொடுத்து, அதுவும் டைட்டில் கேரக்டரில் நடிக்க வைத்து, இருந்து வேலை வாங்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை. இந்த மிகப்பெரிய ரிஸ்க்கை மணிரத்னம் எடுத்து அதில் வெற்றியும் கொண்டிருந்தார்.
’அஞ்சலி’ படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து தைப்பூசம், செந்தூரா தேவி, அன்பு சங்கிலி, வாசலிலே ஒரு வெண்ணிலா, தேவர் வீட்டு பொண்ணு உள்பட பல படங்களில் நடித்தார்.
மேலும் அஜித், மம்மூட்டி, ஐஸ்வர்யாராய் நடித்த ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தில் கமலா என்ற கேரக்டரில் நடித்தார். மேலும் மலையாளத்தில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்த அவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த ’வீரசிவாஜி’ என்ற படத்தில் நாயகியாக நடிதார்.
இருப்பினும் நடிகை ஷாம்லிக்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வமில்லை. அவருக்கு பெயிண்டிங் வரைதல் மிகவும் விருப்பம். அவரது பெயிண்டிங்கள் துபாய் உள்பட பல நாடுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்பதும் பெயிண்டின் மூலம் அவருக்கு மிகப்பெரிய புகழ் கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெயிண்டிங் துறையில் சாதனை செய்ய வேண்டும் என்பதே அவரது ஆசை என்பதால் அவருடைய பெற்றோர்களும் அவரது எண்ணப்படி விட்டுவிட்டனர். திரைத்துறையில் அவரது சகோதரி ஷாலினி போல் அவர் பெரிய சாதனை செய்யவில்லை என்றாலும் பெயிண்டிங் துறையில் நிச்சயம் அவர் உலகமே போற்றும் வகையில் விரைவில் சாதனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
