தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் நடிகை ஆம்னி ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிது. ஆரம்பத்தில் திரையுலகில் மீனாட்சி என்ற பெயரில் அறிமுகமானவர் ஆம்னி. தமிழில் அவர் புதிய காற்று, ஒன்னும் தெரியாத பாப்பா, தங்கமான தங்கச்சி, இதுதாண்டா சட்டம், முதல் சீதனம் போன்ற படங்களில் அவர் மீனாட்சி என்ற பெயரில் தான் நடித்தார்.
அதன் பிறகுதான் அவருக்கு தெலுங்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு திரை உலகினர் அவருக்கு மீனாட்சி என்ற பெயரை எடுத்துவிட்டு ஆம்னி என்ற பெயர் வைத்தனர். ஆம்னி என்ற பெயரில்தான் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்தார்.

தெலுங்கு திரையுலகில் பிரபலங்களான விஷ்ணுவர்தன், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணன், கிருஷ்ணா ஜெகபதி பாபு உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்தார் ஆம்னி. மேலும் மம்முட்டி, அரவிந்த்சாமி, கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ், மலையாள பிரபலங்களுடனும் அவர் நடித்துள்ளார்.
தமிழில் மீனாட்சி என்ற பெயரில் சில படங்களில் நடித்தாலும் அவருக்கு ஆம்னி என்ற பெயர் மாற்றப்பட்ட உடன் விஜயகாந்த் நடித்த ’ஹானஸ்ட்ராஜ்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தது தான் அவரை பிரபலம் ஆக்கியது. அந்த படத்தில் அவர் கிளாமர் கலந்த நாயகியாக நடித்திருப்பார். அதன் பிறகு அவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் மற்றும் நிழல்கள் ரவி நடித்த விட்னஸ் ஆகிய படங்களில் மட்டும் தான் நடித்தார். தெலுங்கில் மீண்டும் அவர் பிசியானதால் அவர் தெலுங்கு திரையுலகிற்கு சென்று விட்டார்.
அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தெம்மாங்கு பாட்டுக்காரன் மற்றும் அரவிந்த்சாமி நடித்த புதையல் ஆகிய படங்களில் தமிழில் நடித்தார். இந்த இரண்டு படங்களை அடுத்து தமிழ் திரை உலகில் அவர் நடிக்கவே இல்லை.

இந்த நிலையில் தான் நடிகை ஆம்னி தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டார் என்று சொல்லலாம். 1997 ஆம் ஆண்டு அரவிந்த் சாமியின் புதையல் என்ற படத்தில் நடித்த பின்னர் அவர் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் நடிக்கவில்லை. அதன் பிறகு மீண்டும் தெலுங்கில் ரீஎண்ட்ரி ஆனார். இப்போது வரை அவர் அம்மா அக்கா, அண்ணி ஆகிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படத்தில் கூட அவர் நாயகியின் அம்மாவாக நடித்திருந்தார்.
நடிகை ஆம்னி திரையுலகில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற சீரியலில் அவருக்கு ரத்தினவள்ளி செந்தமிழ் செல்வன் என்ற கேரக்டர் கிடைத்தது. அந்த கேரக்டரில் அவரது நடிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் தற்போது ஆம்னி நடித்து வருகிறார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
