ஒவ்வொரு நடிகரும் தனக்கென தனி மேனரிஸத்தைப் பயன்படுத்தி ரசிகர்கள் அவர்களை என்றும் மறக்காத அளவிற்கு நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார்கள். அப்படி தமிழ் சினிமா கொடுத்த வில்லன் நடிகர்களில் தனது பேச்சாலேயே ரசிகர்களைக் கவர்ந்து மிரட்டியவர் அசோகன். இவர் இழுத்து இழுத்துப் பேசும் உச்சரிப்புக்காகவே ஸ்டைலுக்காகவே ரசிகர்கள் பலர் இருந்தனர். மேலும் இவரது பேச்சை மிமிக்ரி செய்யாத மிமிக்ரி கலைஞர்கள் மிகக் குறைவே.
இப்பேற்றபட்ட வில்லன் நடிகரின் மகன்தான் விஜய் நடித்த போக்கிரி படத்தில் வில்லனாக வந்து கெத்து காட்டிய வின்சென்ட் அசோகன். இவர் பழம்பெரும் நடிகர் அசோகனின் மகன் என்பது பலருக்கும் தெரியாத தகவல். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டவரை இவரது தந்தை படிப்பு முடித்த பின் சினிமாவிற்கு வா என்று கூற, ஆனால் விதி விளையாடியது. இவர் 12-வது படிக்கும் போதே அசோகன் இறந்து விட்டார். இருப்பினும் தந்தை விருப்பப்படியே பட்டப் படிப்பை முடித்தபின் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார் வின்சென்ட் அசோகன்.
வின்சென்ட் அசோகன் தமிழ் சினிமாவில் ஏய் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். தனது தந்தையைப் போலவே வில்லத்தனத்தில் கெத்து காட்டும் வின்சென்ட் அசோகனின் நடிப்பு ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை மிரள வைக்கும்.
ஆள் அட்ரஸ்ஸே இல்லாமல் இருந்த 80‘s காமெடி நடிகை.. விஷால் செய்த பேருதவி
ஏய் படத்தின் ஹிட்டால் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. விஜய் நடித்த போக்கிரி படத்தில் வில்லனாக இவர் நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து அஜீத் நடித்த ஆழ்வார் படத்திலும் அவருக்கு வில்லனாக நடித்தார். மேலும் விஜய்யுடன் மீண்டும் வேலாயுதம் படத்தில் இணைந்தவர் பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டியிருப்பார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிக் கொணர்ந்தார்.
வின்சென்ட் அசோகன் 2009ம் ஆண்டு வெளியான “யோகி” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததிற்காக இவருக்கு சிறந்த வில்லனுக்கான விருதினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து தந்தை அசோகனைப் போல் தனக்கென தனி பாணியைப் பின்பற்றி சினிமாவில் நிலையான இடத்தினைப் பிடிக்க பல வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திழுக்கிறார் வின்சென்ட் அசோகன்.