குணச்சித்திர கதாபாத்திரத்துக்கு இவர அடிச்சுக்க ஆளே இல்ல.. விஜயக்குமார் இப்படித்தான் சினிமாவுக்கு வந்தாரா?

By John A

Published:

ஒரு நடிகர் ஹீரோவாக நடிக்கலாம், வில்லனாக நடிக்கலாம், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கலாம். ஆனால் நடிப்பின் அத்தனை கதாபாத்திரங்களையும்  ஏற்று இன்றுவரை அந்த இடத்தினை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் அசைக்க முடியா இடத்தில் இருக்கிறார் விஜயக்குமார். தமிழ் சினிமாவில் இவர் ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.

ஆரம்பத்தில் கதாநாயகனாக, பிறகு வில்லனாக, பிறகு குணச்சித்திர நடிகராக அதன்பின் தந்தையாக, இப்போது தாத்தாவாக என தலைமுறைக்கு ஏற்றாற் போல் நடிப்பில் அசத்தி வருகிறார் விஜயக்குமார். தஞ்சை மண்ணின் வரவான விஜயக்குமாரின் இயற்பெயர் சிவக்குமார்.

சினிமா வாய்ப்புத் தேடி சொந்த ஊரில் இருந்து கிளம்பி வந்தவர் நாடகங்களில் நடித்துப்கொண்டே சினிமா வாய்ப்புத் தேடினார். கதாசிரியர் பாலமுருகன் நாடகக் குழுவில் சேர்ந்த அவருக்கு கந்தன் கருணை திரைப்படத்தில் சிவக்குமார் நடித்த முருகன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் வாய்ப்பு வந்தது. ஆனால் எதோ ஒரு காரணத்தால் அது சிவக்குமாருக்கு மாறியது. ஆனால் 1961-ல் வெளியான ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் குழந்தை முருகனாக நடித்திருந்தார் விஜயக்குமார்.

பின்னர் பழம்பெரும் இயக்குநர் மாதவன் கண்ணில் பட ராமன் எத்தனை ராமனடி படத்தில் சிவாஜி போட்டிருந்த உடைகளைக் கொடுத்துப் போடச் சொல்லியிருக்கிறார். மேலும் வசனமும் பேசிக் காட்டச் சொல்ல விஜயக்குமார் அங்கே அசத்தியிருக்கிறார். அதன்பின் அவர் இயக்கிய பொன்னுக்குத் தங்க மனசு படத்தில் இரண்டாம்  நாயகனாக  அறிமுகப்படுத்தினார்.

பாட்டாலே பரவசப்படுத்திய செந்தமிழ் தேன்மொழியாள்.. வசீகர குரலில் சொக்க வைத்த ஜமுனா ராணி..

ஆனால் விஜயக்குமாரின் இயற்பெயர் சிவக்குமார். இந்நிலையில் பொன்னுக்குத் தங்க மனசு படத்தில் நடித்த சிவக்குமார் பெயரும் ஒன்றாக இருந்ததால் சினிமாவிற்காக விஜயக்குமார் என மாற்றியிருக்கிறார் இயக்குநர் மாதவன்.

அதன்பின் மளமளவென படங்களில் நடிக்கத் தொடங்கிய விஜயக்குமார் பணியாற்றாத இயக்குநர்களே இல்லை என்னும் அளவிற்கு அத்தனை பேரிடமும் பணியாற்றியுள்ளார். இவர்இருந்தாலே படம்ஹிட் என்னும் அளவிற்கு குணச்சித்திர நடிப்பில் அசர வைத்தார். இவரது நடிப்புத் திறனுக்கு நாட்டாமை, நட்புக்காக, கிழக்குச் சீமையிலே, அவள் ஒரு தொடர்கதை, பாரதி கண்ணம்மா, நீயா போன்ற படங்களைக் கூறலாம். இன்றும் அதே எனர்ஜியுடன் நடிப்பில் அசத்தி வருகிறார் விஜயக்குமார். மேலும் சீரியல்களிலும் நடித்து இல்லத்தரசிகளின் மனதிலும் இடம்பிடித்தார் விஜயக்குமார்.