பாட்டாலே பரவசப்படுத்திய செந்தமிழ் தேன்மொழியாள்.. வசீகர குரலில் சொக்க வைத்த ஜமுனா ராணி..

தமிழ்சினிமாவின் 1950 களின் காலகட்டங்களில் இசைத்துறையில் புதிய சகாப்தமே ஏற்பட்டது. அதுவரை பாட்டும், இசையும் ஒருசேர பாடிக் கொண்டிருந்த எம்.தியாகராஜபாகவதர், பி.யூ.சின்னப்பா ஆகிய சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் புதிய இசையமைப்பாளர்கள் அறிமுகமாயினர். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றோரது இசையில் பல பாடகர்களும் அறிமுகமாயினர்.

அன்றைய காலகட்டத்தில் ஆண்குரலுக்கு சி.எஸ். ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ், திருச்சி லோகநாதன், ஏ.எம்.ராஜன் போன்ற பாடகர்கள் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்க பதிலுக்கு பெண் குரலில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, கே.பி.சுந்தராம்பாள், பி.சுசீலா, ஜிக்கி போன்றோர் கலக்கிக் கொண்டிருந்தனர்.

இவர்கள் அத்தனைபேருக்கும் சவால்வடும் விதமாக புதுவிதமாக தனது தனித்த குரலால் பாடகியாக அறிமுகமானார் ஜமுனா ராணி. ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ஜமுனாவிற்கு அவரின் அம்மா வயலின் கலைஞர் என்பதால் இயல்பாகவே சங்கீத ஞானம் தொற்றிக் கொள்ள குழந்தைப் பருவத்திலேயே தெலுங்குப் படங்களில் பாடியுள்ளார். அதன்பின் தமிழில் கல்யாணி என்ற படத்திற்காக சக்சஸ், சக்சஸ் என்ற பாடலின் மூலம் அறிமுகமானார்.

சிவாஜிகணேசனுக்கு திரையில் முதல் வசனம் எப்படி சக்சஸ் சக்சஸ் என அமைந்ததோ அதேபோல் ஜமுனாராணிக்கும் முதல் பாடலே சக்சஸ்.. சக்சஸ் என்ற பாடல் அமைந்தது. அதன்பிறகு மளமளவென பல படங்களில் பாட ஆரம்பித்தார். முன்னர் கூறிய பாடகிகளின் பாடல்களைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தவர்கள் ஜமுனாராணியின் பாடலுக்கும் அடிமையாகினர்.

தேசிய விருது, அஜீத் எடுத்த போட்டோ ஷூட் இருந்தும் திரையில் சாதிக்க போராடும் அப்புகுட்டி

தேவதாஸ் படத்தில் ஓ.. தேவதாஸ்.. ஓ.. பார்வதி..படிப்பு இதானா? என்று தொடங்கும் அந்தப் பாடல் இன்றும் பிரபலம். பழைய காதல் பாடல்கள் என்றாலே இந்தப் பாடல் நிச்சயம் ஞாபத்திற்கு வராமல் இருக்காது. இந்தப் பாடல் மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற ஜமுனாராணி அடுத்து பாசமலரில் பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் என்று பாடி அந்தக் காலத்து பெண்களின் காதல் குரலாக ஒலித்தார்.

மேலும் யாரடி நீ மோகினி என்று சிவாஜியின் உத்தம புத்திரன் படத்தில் வரும் நீ.. வேணுமா.. நான் வேணுமா.. என்று இடையில் வரும் பெண் குரலில் அசத்தியிருப்பார் ஜமுனா. எல்லாவற்றிற்கும் மேலாக செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கின்ற மலர்க்கொடியாள் என்று காலத்திற்கும் அழியாப் புகழ் பெற்ற பாடல்களைப் பாடி அசத்தியிருக்கிறார் ஜமுனா.

சந்திரபாபுவுடன் குங்குமப் பூவே.. கொஞ்சும்புறாவே பாடலும், குமுதம் படத்திற்காக மாமா..மாமா..மாமா.. என்று இன்றளவும் கேட்டாலே மனது துள்ளும் பாடல்களையும் பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார் ஜமுனா ராணி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...