தலைவா படத்திற்குப் பின் நடிகர் விஜய் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல்கள் வந்து கொண்டே இருந்தது. அதற்கு முன் விஜய் ரசிகர் மன்றமாக இருந்ததை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அடுத்து வந்த தன்னுடைய படங்களில் பஞ்ச் டயலாக் பேசுவது, அரசியல் வசனங்களைப் பேசுவது, ஆளுங்கட்சியை வம்புக்கு இழுப்பது, ஆட்சியை விமர்சிப்பது என நடிப்பில் அரசியல் போக்கைக் கடைபிடித்து வந்தார்.
கத்தி, சர்கார், மெர்சல் போன்ற படங்களும் இவரது அரசியல் வேட்கைக்குத் தீனி போடும் படங்களாக அமைந்தது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக தற்போது பல்வேறு நலத்திட்டப் பணிகளை பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்பார்வையில் நிர்வகித்து வரும் விஜய் இன்னும் சில மாதங்களில் அரசியல் கட்சியைத் துவக்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் பதவியை வேண்டாம் என உதறிய எம்.ஜி.ஆர்., அறிஞர் அண்ணாவுக்கே அதிர்ச்சி கொடுத்த புரட்சித் தலைவர்
இதற்கு அச்சாரம் போடும் விதமாக அண்மையில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் விஜய் கலந்து கொண்டு மாவட்ட செயலாளர்களிடம் அரசியல் அடித்தளம் குறித்துப் பேசியுள்ளார். அதில் ஒவ்வொரு மாவட்ட தொகுதி நிலவரம், மற்ற கட்சிகளின் ஆதரவு, ஆளுங்கட்சியினரின் தலையீடு, மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு போன்றவை குறித்து ஒவ்வொரு மாவட்டம் வாயிலாக தனித்தனியே விசாரித்துள்ளார்.
மேலும் முக்கியமான நிகழ்வான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படி வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்குவாரோ அதே போல் விஜய்யும் மாவட்டச் செயலாளர்களிடம் 20ரூ வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது அவர் நடித்து வரும் தி கோட் படப்பிடிப்பின் பணிகள் நிறைவு பெற்று படம் ரிலீஸ் ஆகும் தருவாயில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம் என விஜய் யோசனை கூறியதாகவும் தெரிகிறது.
வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தன் ஆதரவு யாருக்கு அல்லது விஜய்யுடன் கூட்டணி சேரும் கட்சி எது என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகாத நிலையில் விஜய்யின் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தாகக் கருதப்படுகிறது. ஏனெனில் வருகிற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாகக் களமிறங்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேற்கண்ட தகவலை வலைபேச்சு ஆனந்தன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.