கடந்த வருடம் இந்தியாவையே உலுக்கிய நாங்குநேரி சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த பள்ளி மாணவரும், அவரது தங்கையும் அரிவாளால் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்தார். இச்சம்பவம் தமிழ்நாடு மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கி எடுத்தது. சாதிக் கொடுமையின் வீரியம் புத்தகப் பை சுமக்க வேண்டிய கைகளில் அரிவாளைச் சுமக்க வைத்து பள்ளி மாணவர்களிடம் சாதி மனப்பான்மை எவ்வளவு தூரம் வேரூன்றி இருந்தது என்பதைக் காட்டியது.
தமிழக அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு பாதிக்கப்பட்ட மாணவனுக்கும், அவரது தங்கைக்கும் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்தது. அரிவாளால் வெட்டிய மாணவர்களைக் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தது காவல் துறை. மேலும் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை +2 படித்துக் கொண்டிருந்ததால் அவரால் பள்ளிக்கு செல்ல இயலா நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு ஆசிரியர்கள் அவரது இருப்பிடத்திற்கே சென்று பாடம் நடத்தினர்.
அதன்படி கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் +2 தேர்வுகள் நடைபெற்றது. இதனை சின்னத்துரையும் எதிர்கொண்டார். தன் வலிகளை மறந்து, கவலைகளை மறந்து படிப்பை மட்டுமே மனதில் வைத்து சிறப்பாகத் தேர்வினை எழுதினார் சின்னத்துரை. அண்மையில் +2தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சின்னத்துரை 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட இந்த இக்கட்டான நிலையிலும் கடினமாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற செய்தி ஊடகங்களில் பரவியது. இதனையடுத்து அவரிடம் நீங்கள் சிலரால் பாதிக்கப்பட்டீர்கள் அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, “ அவர்களும் என்னைப் போன்று நல்ல முறையில் படித்து முன்னேற வேண்டும்” என்று பதிலளித்தார்.
இந்தப் பதிலைக் கேட்டு அனைவரும் ஆச்சர்யமடைந்தனர். ஒரு பண்பட்ட மனநிலையில் உள்ளவரின் பேச்சு போன்று சின்னத்துரையின் பதில் இருந்தது. இவரது இந்தப் பேட்டியைக் கண்டு மெய்சிலிர்த்துப் போன தாடி பாலாஜி நேரிடையாக அவரின் இல்லத்திற்குச் சென்று சின்னத்துரையைச் சந்தித்தார். அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
சின்னத்துரையின் இந்தப் பேட்டியைக் கண்டதும் அசுரன் படத்தில் தனுஷ் சொல்லும் வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. படிப்பை மட்டும் நம்ம கிட்ட இருந்து யாராலும் எடுத்துக்கிற முடியாது சிதம்பரம்…