தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு நண்பனாக, துணையாக ஒரு காமெடி நடிகர் வருவார் என்பது எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் ஒரு வழக்கம். அந்த வகையில் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்த நடிகர் சுருளிராஜன், 42 வயதில் மறைந்து போனது தமிழ் சினிமாவில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும்.
தேனி மாவட்டத்தைச் சார்ந்த சுருளிராஜன் சிறுவயதிலேயே அம்மா, அப்பாவை இழந்து விட்டதால் அண்ணனின் உதவியுடன் வாழ்ந்து வந்தார். இதனை அடுத்து அவர் சிறு வயதிலேயே ஒரு மெக்கானிக் கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
ரஜினியின் ‘ஜானி’: இரட்டை வேடம் என்றாலே ஆள்மாறாட்ட கதை தான்.. ஆனால் இந்த படம் வித்தியாசமானது..!

இந்த நிலையில்தான் அவருக்கு நடிப்பின் மீது ஒரு ஆசை ஏற்பட்டது. எனவே அவர் சென்னை சென்றார். பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு அவர் ‘காகிதப்பூ’ என்ற நாடகத்தில் நடித்தார். கலைஞர் கருணாநிதியால் வசனம் எழுதப்பட்ட இந்த நாடகம் பெரிதும் பாராட்டப்பட்டது. சுருளிராஜனின் நடிப்பும் ரசிக்கப்பட்டது.
அந்த நாடகத்தை பார்க்க வந்த ஜெய்சங்கர் ‘இரவும் பகலும்’ என்ற படத்தில் சுருளிராஜனுக்கு நடிக்க வாய்ப்பு அளித்தார். ஜெய்சங்கரின் முதல் படமும் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடிக்கும் போது சுருளிராஜன், ஜெய்சங்கர் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்ட நிலையில் அடுத்தடுத்து படங்களில் சுருளிராஜன் நடித்தார். ஆதிபராசக்தி திரைப்படத்தில் மெட்ராஸ் பாஷை பேசிய இவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தது.
இதனை அடுத்து பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி, மீடியம் பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி காமெடி கேரக்டரா? உடனே சுருளிராஜனை கூப்பிடுங்கள் என தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கூறும் அளவுக்கு அவர் பிரபலமானார்.
குபீர் சிரிப்பு குமரிமுத்து.. தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தாத அற்புத கலைஞன்..!
அன்றைய முன்னணி நடிகர்களான சிவாஜி உள்பட பலர் சுருளிராஜனுக்கு எப்படியாவது ஒரு கேரக்டரை கொடுத்து விடுங்கள் என்று கூறுவார்களாம். இந்த நிலையில் ‘மாந்தோப்பு கிளியே’ என்ற திரைப்படம் உருவானது. இதில் சுதாகர் நாயகனாக மற்றும் தீபா நாயகியாக இருந்தாலும் சுருளிராஜனுக்காகவே இந்த படம் ஓடியது. அவரது கஞ்சத்தனம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. சிவாஜி நடித்த ‘ஹிட்லர் உமாநாத்’ என்ற படத்தில் சுருளிராஜனின் வில்லுப்பாட்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானது.

அதேபோல் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜானி திரைப்படத்திலும் இவர் குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருப்பார். ஒரே வருடத்தில் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்தவர் என்றால் அது சுருளிராஜன் மட்டுமே. கடந்த 1980ஆம் ஆண்டு இவர் ஒரே வருடத்தில் 55 திரைப்படங்கள் நடித்ததாக கூறப்படுகிறது.
சுருளிராஜனை அதிகம் பயன்படுத்திக்கொண்ட நிறுவனம் தேவர் பிலிம்ஸ் தான். தாய் மீது சத்தியம் என்ற திரைப்படத்தில் அவரது நகைச்சுவை தனித்துவமாக இருந்ததை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் முரட்டுக்காளை படத்தில் ஒரு முக்கிய கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம் என்று ஏவிஎம் நிறுவனம் பரிசீலனையில் இருந்தபோது ஜெய்சங்கர் தான் சுருளிராஜனை ஏவிஎம் நிறுவனத்திற்கு பரிந்துரை செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த படத்தில் சுருளிராஜன் நகைச்சுவை மட்டுமின்றி குணச்சித்திர நடிப்பிலும் அசத்தியிருப்பார்.
இளையராஜா பின்னணி இசை செய்ய மறுத்த ரஜினி படம்.. ஏவிஎம் செய்த புத்திசாலித்தனமான செயல்..!
தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தமிழ் சினிமாவில் ஏராளமானோர் மனங்களில் இடம்பெற்ற சுருளிராஜன் 1980ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் காலமாகி 43 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்றும் அவரது திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால்கூட அவரது நகைச்சுவையை அனைவரும் ரசிப்பார்கள்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
