தமிழ் சினிமாவின் அழகான நடிகர்களில் ஒருவர் சுரேஷ். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழில் தான் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகர் சுரேஷின் தந்தை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருந்தவர். அவரது தாத்தாவும் கூட ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்துள்ளார்.
அப்படி ஒரு சூழலில், குடும்ப சூழ்நிலை காரணமாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சுரேஷின் குடும்பத்தினர் வந்தனர். சென்னையில் தான் சுரேஷ் பள்ளி கல்லூரி படிப்பை படித்தார். பள்ளியில் படிக்கும் போது அவர் நடனம் மற்றும் நடிப்பில் ஆர்வத்துடன் இருந்தார்.
சிறு வயதிலேயே தந்தையுடன் அவர் படப்பிடிப்பை பார்க்க செல்வதும் உண்டு. அப்படி படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த அவருக்கு நடிக்கவும் ஆசை வந்தது. இந்த நிலையில் 16 வயதிலேயே அவர் தனது தந்தை இயக்கும் படங்களில் துணை இயக்குனராகவும், துணை நடன இயக்குனராகவும் பணிபுரிந்தார். அப்படி இருக்கையில் தான் சந்தானபாரதி இயக்கிய ’பன்னீர் புஷ்பங்கள்’ என்ற திரைப்படத்தில் சுரேஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ஜோடியாக சாந்தி கிருஷ்ணன் நடித்தார்.
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதன் பின் சுரேஷுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. சிவாஜி கணேசனுடன் ’துணை’ ’வெள்ளை ரோஜா’ பிரபுவுடன் ’கோழி கூவுது’ சுஜாதாவுடன் ’ஆலய தீபம்’ சிவகுமாருடன் ’உன்னை நான் சந்தித்தேன்’ ரேவதியுடன் ’ஆகாய தாமரை’ ராமநாராயணன் இயக்கத்தில் உருவான ’உரிமை’ சிவாஜி கணேசனின் ’மருமகள்’ உள்பட பல திரைப்படங்களில் நாயகனாகவும் முக்கிய கேரக்டர்களிலும் சில படங்களில் வில்லனாகவும் நடித்தார்.
திரைப்படம் மட்டுமின்றி இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். குறிப்பாக ’லட்சுமி ஸ்டோர்’ என்ற தொடரில் குஷ்புவுக்கு ஜோடியாக நடித்தார். ஒரு கட்டத்தில் தமிழில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கில் கவனம் செலுத்த தொடங்கினார். தெலுங்கில் இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்தார். அதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்டானது.
அவர் தெலுங்கில் நடித்த சூப்பர் ஹிட் படமான அம்மன் படம் தமிழில் டப் செய்யப்பட்டு அபாரமாக வசூல் செய்திருந்தது. நடிப்பு மட்டுமில்லாமல், தெலுங்கில் சில படங்களை தயாரித்து இயக்கவும் செய்துள்ளார். இதனிடையே, கடந்த 1990 ஆம் ஆண்டு அனிதா என்ற பாடகியை சுரேஷ் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உண்டு. அனிதா வெளிநாடு சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்றும் அதனால் குடும்பத்துடன் அமெரிக்கா செல்வோம் என்றும் சுரேஷிடம் கூறினார்.
ஆனால் சுரேஷ் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் அமெரிக்கா செல்ல விரும்பவில்லை. சினிமாவில் சம்பாதித்து நிறைய காசு சேர்த்து அமெரிக்கா செல்லலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் அவரது மனைவி அதற்கு ஒப்புக்கொள்ளாததால் விவாகரத்து பெற்று அமெரிக்கா சென்று விட்டதாக கூறப்படுவது உண்டு.
விவாகரத்துக்கு பிறகு இப்போதும் அவர் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். 16 வயதிலேயே தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து இன்று வரை அவர் சினிமாவில் பிசியான ஒரு நடிகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
