“ஷூட்டிங்கை நிறுத்தாதீங்க..“ அந்தக் காலத்திலேயே டூப் போடாமல் நிஜ சிறுத்தையுடன் சண்டை போட்ட லட்சிய நடிகர்..

By John A

Published:

சினிமாவில் சண்டைக் காட்சிகளிலும் சாகசக் காட்சியில் நடிக்கும் நடிகர்களுக்கு அவருக்குப் பதிலாக டூப் போடுவது வழக்கம். ஏனெனில் இதற்காகவே முறையான சண்டைப் பயிற்சி எடுத்து பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடித்து பல படங்களில் பணியாற்றி மிகுந்த அனுபவம் கொண்டிருப்பர். இதனால் அவர்களுக்கு சண்டைக்காட்சிளிலும், சாகசக் காட்சிகளிலும் நடிப்பது வெகு சுலபம்.

மேலும் இப்போதிருக்கும் தொழில்நுட்ப உதவியால் 100 மாடி கட்டிடத்தில் இருந்து கூட ஹீரோ குதிப்பதுபோல் மாற்றி விடலாம். ஆனால் பழைய தமிழ் சினிமாக்களில் டூப் என்பது குறைவாகவே இருக்கும். ஹீரோக்களே வில்லன்களுடன் மல்லுக்கட்டுவர். ஆனால் பழம்பெரும் நடிகர் ஒருவர் வில்லன்களுடன் மல்லுக்கட்டாமல் சிறுத்தையுடன் சண்டை போட்டு நடித்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் டூப் போடவில்லை. மேலும் சிறுத்தையும் நிஜமானது தான்.

லட்சிய நடிகர் என்று போற்றப்பட்ட அந்த நடிகர்தான் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மதுரை எஸ்.எஸ்.ஆர் டி.கே.எஸ். நாடக சபாவில் நடிப்புப் பயிற்சி பெற்ற எஸ்.எஸ்.ஆர் அங்குதான் தந்தை பெரியாருடனும், அறிஞர் அண்ணாவுடனும் பழகும் வாய்ப்பு எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு கிடைத்தது.

தொடர்ந்து எஸ்.எஸ்.ஆர். நாடகத்தில் நடித்து வந்தாலும் சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை தீவிரம் அடைந்தது. எனவே, நாடக கம்பெனியில் இருந்து விலகி, சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார்.

நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார், ஏவி.எம்.முடன் கூட்டு சேர்ந்து “பராசக்தி”படத்தை தயாரித்தார். கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனத்தை எழுதிய இந்தப் படத்தில் சிவாஜிகணேசனுடன், எஸ்.எஸ். ராஜேந்திரன் புதுமுகமாக அறிமுகமானார். சிவாஜிகணேசனின் அண்ணனாக “ஞானசேகரன்” என்ற வேடத் தில் எஸ்.எஸ்.ஆர். சிறப்பாக வசனம் பேசி நடித்தார்.

என் பின்னாடி இருக்க கூட்டம் சினிமாவுக்கா? அரசியலுக்கா? அப்பவே அஜீத் கொடுத்த தக் ஃலைப் பதில்

குறிப்பாக, சிவாஜிகணேசனைப் போல் தெளிவாகவும், உணர்ச்சியுட னும் வசனம் பேசும் ஆற்றல் ராஜேந் திரனுக்கு இருந்தது. எம்.ஏ.வி. பிக்சர்சார் குறைந்த செலவில் தயாரித்த “முதலாளி” படம், மாபெரும் வெற்றி பெற்று, எஸ்.எஸ்.ராஜேந்திரன் வாழ்க் கையில் திருப்புமுனை ஏற்படுத்தியது. இதில் எஸ். எஸ்.ராஜேந்திரனும், தேவிகாவும் ஜோடியாக நடித்தனர்.

“பராசக்தி”க்குப் பிறகு சிவாஜிகணேசன் – கலைஞர் கருணாநிதி பங்கேற்ற மகத் தான வெற்றிப்படம் “மனோகரா.” “ரத்தக்கண்ணீர்” படத்தில் எம்.ஆர்.ராதாவின் நண்பனாக எஸ்.எஸ்.ஆர். நடித்தார். முரசொலி மாறன் திரைக்கதை – வசனத்தில் ஏவி.எம். தயாரித்த “குல தெய்வம்” (1956) படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் நடிப்பு சிறப்பாக அமைந்தது. இந்த படம் 100 நாட்களை தாண்டி ஓடியது.

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், புராணப்படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். அதனால் “லட்சிய நடிகர்” என்று பட்டம் பெற்றார். நடிகர் பி.எஸ்.வீரப்பா தயாரித்த “பிள்ளைக் கனியமுது” படத்தில் சிறுத்தையுடன் சண்டை போடும் காட்சியில் எஸ்.எஸ்.ஆர். `டூப்’ போடாமல் நடித்தார். ஆனால் அதற்கு முன்பாக சிறுத்தையின் கால் நகம் வெட்டப்பட்டு, வாய் தைக்கப்பட்டு, அதன் பின்னர் சிறுத்தையுடன் சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டது. ஷூட்டிங்கில் சிறுத்தை காலால் உதைத்ததில், எஸ்.எஸ்.ஆர். முகத்தில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது.

இருந்தபோதிலும் படப்பிடிப்பு நடந்து கொண்டே இருந்தது. படத்தின் இயக்குனரிடம் “நான் நடிக்கும்போது பயப்படுவதுபோல நடிப்பேன். அதைப் பார்த்து சூட்டிங்கை நிறுத்திவிடா தீர்கள்” என்று எஸ்.எஸ்.ஆர். கூறி இருந்ததே இதற்கு காரணம். இந்தக்காட்சி சிறப்பாக அமைந்து அப்போதுள்ள  சண்டைக் காட்சிகளை மிஞ்சும் வகையில் அமைந்து எஸ்.எஸ்.ஆருக்கு இன்னும் புகழைத் தேடிக் கொடுத்தது எனலாம்.