இயக்கிய படங்கள் சரியா போகல.. ஈ.ராமதாஸை நடிகராக மாற வைத்த அந்த திரைப்படம்..

By Bala Siva

Published:

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் நிறைய குணச்சித்திர போலீஸ் கதாபாத்திரங்களில் பலரும் நடித்ததை நாம் பார்த்திருப்போம். அதில் குறிப்பிடத்தக்க ஒரு நடிகர் தான் மறைந்த ஈ ராமதாஸ். இவர் ஏராளமான திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், இயக்குனர் மற்றும் கதாசிரியராகவும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

ஈ ராமதாஸ் மொத்தம் ஆறு படங்களை இயக்கி உள்ளார். ஆனால் அவர் இயக்கத்தில் உருவான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் அதன் பின்னர் அவர் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர்  ஈ ராமதாஸ் விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர். சென்னை மயிலாப்பூருக்கு வந்த அவர் தமிழ் திரை உலகில் பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்தார். அவருக்கு வாய்ப்பு கிடைக்க உதவியாக இருந்தவர் தான் இயக்குனர் மனோபாலா. முதலில் அவர் இயக்குனர் பிஎஸ் நிவாஸ் என்பவரிடம் திரைக்கதை எழுதுவதற்கு உதவியாளராக பணியில் சேர்ந்தார். அதன்பின்னர் ’எனக்காக காத்திரு’ உள்பட ஒரு சில படங்களில் திரைக்கதை எழுதிய ஈ ராமதாஸ், அதன் பிறகு மணிவண்ணனிடம் கிட்டத்தட்ட ஆறு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

e ramadoss2

இதனை அடுத்து கோவை தம்பி நிறுவனத்திற்காக கதை எழுதினார். இந்த நிலையில் தான் ஈ ராமதாஸ், எல்லைச்சாமி, பொன்விலங்கு, ராஜ முத்திரை, மக்களாட்சி, ராஜாளி, அடிமை சங்கிலி போன்ற பல படங்களில் கதாசிரியராக பணிபுரிந்துள்ளார். இவற்றில் சில படங்கள் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் உருவான படங்களாகும்.

மேலும் அவர் 1986 ஆம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற திரைப்படத்தை முதல் முதலாக இயக்கினார். மோகன், சீதா நடித்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அவர் ராமராஜன் நடிப்பில் உருவான ’ராஜா ராஜா தான்’, மன்சூர் அலிகான் முக்கிய வேடத்தில் நடித்த ராவணன் மற்றும் வாழ்க ஜனநாயகம் போன்ற படங்களை இயக்கினார். கின்னஸ் சாதனைக்காக உருவாக்கப்பட்ட சுயம்வரம் என்ற திரைப்படத்தில் பணிபுரிந்த 14 இயக்குனர்களில் இவரும் ஒருவர்.

e ramadoss1

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அவர் கதாசிரியர், இயக்குனர் வேலையை விட்டுவிட்டு முழுக்க முழுக்க நடிப்பில் கவனம் செலுத்தினார். கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை பல படங்களில் நடித்த ஈ. ராமதாஸ், சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விசாரணை, விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா, நயன்தாரா நடித்த அறம், சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை, தனுஷ் நடித்த ’மாரி 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

அவரது நடிப்பில் உருவான கடைசி திரைப்படம் ’பருந்தாகுது ஊர்க் குருவி’ என்ற படமாகும். கடந்த மார்ச் மாதம் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனிடையே அந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே நடிகர்  ஈ ராமதாஸ் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தது.