சினிமாவில் வில்லானாக இருந்து “தகடு தகடு“ என்ற ஒற்றை வசனம் மூலமாக தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் சத்யராஜ். ரெங்கராஜ் என்ற தனது பெயரை சினிமாவிற்காக சத்யராஜ் என மாற்றிக்கொண்டார். தீவிர எம்.ஜி.ஆரின் விசுவாசியான சத்யராஜ் ஆரம்பத்தில் எதிர்மறைக் கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் நடித்து வந்தார்.
பின்னர் பாராதிராஜா இயக்கத்தில் உருவான கடலோரக் கவிதைகள் இவரை ஹீரோ அந்தஸ்துக்கு எடுத்துச் சென்றது. தொடர்ந்து வெகுஜனப் படங்களில் நடித்து பெயர் பெற்றார். கடலோரக் கவிதைகள் இளையராஜா-பாரதிராஜா-வைரமுத்து கூட்டணியின் கடைசி படமாகும்.
கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக காவிரி கலவரம் நடைபெற்ற காலம் அது. அப்போது சத்யராஜ், தமிழர் நிவாரண நிதியாக 2 லட்சம் ரூபாய்க்கும் மேல் வழங்கினார். அதற்கு நன்றி தெரிவித்து, கர்நாடகாவில் வாழ்ந்த தமிழர் ஒருவர், சத்யராஜுக்கு தான் அனுப்பிய மடலில், “புரட்சித்தமிழன்” சத்யராஜ் என்று குறிப்பிட்டிருந்தாா்.
“டேய்.. அண்ணான்னுதான் விஜய்யை கூப்பிடுவா..!” விஜய்யின் தங்கை குறித்து உருக்கமாக பேசிய ஷோபா
அப்போது, திருமதி பழனிச்சாமி படத்தில், சத்யராஜ் நடித்து வந்ததால் இந்த அடைமொழி சத்யராஜுக்கு நன்றாக இருப்பதாகக் கருதிய அப்படத்தின் தயாரிப்பாளர், முதன்முதலாக, அப்பட டைட்டிலில், இந்த அடைமொழியுடன் சத்யராஜ் பெயர் இடம்பெறுமாறு செய்தார்.
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த படங்களிலும், இந்த அடைமொழிப்பெயர் இடம்பெற்றது. சத்யராஜ் இதை விரும்பவுமில்லை; ஆரம்பத்தில் கண்டுகொள்ளவுமில்லை. எனினும், நாளடைவில், இந்த அடைமொழிப்பெயரைப் பயன்படுத்த வேண்டாமென்று கூறிவிட்டார். அதனைத் தொடர்ந்து அவரது நடிக்கும் படங்களில் அவருக்கு டைட்டில் கார்டில் புரட்சித் தமிழன் என்று போடுவது நிறுத்தப்பட்டது.
மேலும் பாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ் நடித்த படமான வேதம் புதிது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. இதில் வரும் சாதி ரீதியான பெயரும், கருத்துக்களும் கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் பெரியார் கொள்கைகள், கடவுள் மறுப்பு போன்றவற்றில் தீவிர பற்றாளராக இருக்கும் சத்யராஜ் பெரியார் படத்தில் நடித்ததற்காக சம்பளம் எதுவும் பெறவில்லை. இப்பட விழாவில் கி.வீரமணி பெரியார் தனக்கு அளித்த மோதிரத்தை சத்யராஜுக்கு அன்பளிப்பாக அளித்தார்.
தமிழ் சினிமாவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த முதல் நடிகரும் இவர்தான். மேலும் மணிவண்ணன் இயக்கிய கணம் கோர்ட்டார் அவர்களே படத்தில் 13 கெட்டப்களில் வந்தும் ஆச்சர்யப்படுத்தியிருப்பார்.