இன்று ஒரு படத்தில் நடிக்கவே சான்ஸ் தேடி கோடம்பாக்கத்து வீதிகளில் இன்றும் ஆல்பத்தை கையில் வைத்துக் கொண்டு அலைந்து திரிந்து கொண்டிருக்கும் சினிமா பிரியர்களுக்கிடையில் ஒப்புக் கொண்ட படங்களே நடித்து முடித்து வெளிவராத படங்களே டஜன் கணக்கில் இருக்கும் ஒரு நடிகர் தான் ராமராஜன்.
மதுரைக்காரரான ராமராஜன் அவர் ஊரில் உள்ள ஒரு தியேட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது சினிமா மோகத்தால் சென்னை வந்து இயக்குநர் ராம.நாராயணனிடம் உதவியாளராகச் சேர்ந்து சில படங்களை இயக்கியிருக்கிறார். பின்னர் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து கிராமத்து நாயகனாக மாறினார்.
கரகாட்டக்காரன் என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமா இதுவரை செய்த அத்தனை சாதனைகளையும் அடித்து நொறுக்கி ஒரே இரவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரின் வளர்ச்சிக்கு இளையராஜா தனது பாடல்களால் ஹிட் கொடுத்து பெரும் பங்காற்றினார்.
இந்தப் படத்துல ரஜினி நடிச்சிருந்தா எப்படி இருக்கும்? தட்டித் தூக்கி ஹிட் கொடுத்த கேப்டன்..!
தொடர்ந்து கிராமத்து சாயல் படங்களில் நடித்தும், கிராமத்து ஹிட் பாடல்களைக் கொடுத்தும் கிராம மக்களின் நாயகனாக ராமராஜன் மாறினார். இன்றும் தமிழகத்தில் ஏதாவது ஒரு பேருந்தில் இவர் பாடல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும். 1990-களில் சினிமாவின் உச்சத்தில் இருந்த ராமராஜன் நிறைய படங்களை நடிக்க ஒப்புக் கொண்டார்.
இவற்றில் பல திரைப்படங்கள் வராமலே இருந்துள்ளன. சூட்டிங் ஆரம்பித்து பாதியில் நின்று போன படங்களும் உண்டு. அப்படிப்பட்ட படங்கள் என்னென்ன என்று பார்க்கலாமா… வேலா, காவலன், தங்கநிலா, தர்மன் (இரட்டை வேடம்), ராமர் படை, வள்ளல் மகன், பெத்தவ மனசு, சத்திய தாய், மதுரை தங்கம், கும்பாபிஷேகம், நீ ஒரு தனி பிறவி, காங்கேயன் காளை, கண்ணுபட போகுது, பல்லவன் பாண்டியன் (இரட்டை வேடம்), தம்பிக்கு தாய் மனசு, நான் உங்கள் பக்கம், நம்ம ஊர் சோழவந்தான், கூவுங்கள் சேவல்களே, மண்ணுக்கேத்த மைந்தன்.
இவற்றில் மதுர தங்கம், கும்பாபிஷேகம் போன்ற படங்கள் அறிவித்ததுமே நின்று போய்விட்டன. அதே நேரத்தில் தர்மன், வேலா, காவலன், தம்பிக்கு தாய் மனசு, மண்ணின் மைந்தன் ஆகிய படங்கள் சூட்டிங் ஆரம்பித்து சிறிது நாள்கள் கழித்து நின்று போய் விட்டன.
காவலன் படத்தில் வைக்கிறேன்னு வைக்கிறேன்னு சொல்லிக்கிட்டு வைக்காமத்தான் போனீங்களேன்னு ஒரு பாடல் வெளியானது. இந்தப் பாடல் இரட்டை அர்த்தத்துடன் வெளியானது. அப்போது இளம் ரசிகர்கள் மத்தியில் பாடல் ரொம்ப டிரெண்டிங்கில் இருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. படம் வெளியாகவில்லை. ராமராஜன் மிடுக்காக போலீஸ் வேடத்தில் நடித்து இருந்தார்.
அதே போல மண்ணுக்கேத்த மைந்தன் படத்திலும் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இருந்தாலும் படம் ஏனோ வரவில்லை. இந்தப்படத்தில் ஜோடியாக குஷ்பு நடித்தார். அன்றைய காலகட்டத்தில் இந்தப் படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகி இருந்தால் ராமராஜன் நிச்சயம் இன்னும் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வந்திருப்பார் என்றால் மிகையாகாது.