வெறும் 4.50 சம்பளத்தில் தனது சொந்த ஊரான ராமநாதபுரம் கீழக்கரையை விட்டு விட்டு சென்னைக்கு வந்து பிழைப்பு நடத்தியவர் ராஜ்கிரண். சிறுவயதில் ஐபிஎஸ் அதிகாரியாக ஆசைப்பட்டவர் குடும்ப வறுமை காரணமாக 16 வயதிலேயே பிழைப்பு தேடி சென்னை வந்து சினிமா விநியோகக் கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்கிறார். அங்கே தனது தொழில் திறமையால் விரைவிலேயே தன்னை வளர்த்த முதலாளிகளின் ஆசியோடு புதிதாக சினிமா விநியோகக் கம்பெனியை தொடங்கினார்.
ஏசியன் காதர் என்றால் வெற்றிப்படம் என்று திரையுலகில் பேச தொடர்ந்து நல்ல படங்களை விநியோகித்தார். பின்னாளில் திடீரென தொழில் நஷ்மடைய தன்னுடைய சினிமா கம்பெனியை இழுத்து மூடினார். பின் ராஜ்கிரண் முதலில் பணியாற்றிய முதலாளிகளே, அவருக்கு மீண்டும் உதவி செய்கிறார்கள்.
அதன்படி படம் ஒன்றைத் தயாரிக்க நினைக்கிறார். ஏசியன் காதர் ராஜ்கிரணாக அறிமுகம் ஆகிறார். ஏசியன் பிக்சர்ஸ் நிறுவனம், ரெட் சன் ஆர்ட் நிறுவனமாக உயிர்பெற்றது. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தானே தயாரித்து, ஹீரோவாகவும் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இவருக்கு மட்டும் இந்தப் படம் அறிமுகம் அல்ல. காமெடி கிங் வடிவேலுவையும் இந்தப் படத்தில் அறிமுகம் செய்தார்.
விநியோகஸ்தராக சினிமா வாழ்க்கையை துவங்கியவர் தயாரிப்பாளராக சில படங்கள், பிறகு நடிகராக படங்கள் நடிக்க ஆரம்பித்தார். அடுத்த நகர்வாக, அரண்மனைக் கிளி படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். வேட்டியை மடித்து இவர் அடிக்கும் ஸ்டைல் ஆகட்டும், கறி விருந்து சாப்பிடும் காட்சிகளாகட்டும் இன்றும் நாம் யதார்த்த வாழ்வில் ராஜ்கிரணை பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
மெட்ராஸ் பாஷையின் நாயகன் லூஸ் மோகன் : இப்படித்தான் இந்தப் பெயர் இவருக்கு வந்துச்சா?
எல்லாமே என் ராசாதான், மாணிக்கம், பாசமுள்ள பாண்டியரே என 90களில் சில படங்கள் நடித்தவரை, இன்னும் உச்சாணியில் கொண்டு வைத்தது 2000களில் வெளியான சில முக்கிய படங்களே. அப்படி இவர் நடிப்பில் மிக முக்கியமான படம் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா. பெரியவர் கதாபாத்திரத்தில் உறுதியான நடிப்பைக் கொடுத்தார். இதற்கு முன் இந்தப் கதாபாத்திரத்தில் சிவாஜி நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். ராஜ்கிரண் இருந்தாலே அந்தப் படம் வெற்றிதான் என்னும் அளவிற்கு தன்னுடைய அனுபவ நடிப்பால் அனைவரையும் புருவம் உயர்த்த வைக்கிறார்.
சண்டக்கோழி படத்தில் பெரிய மனிதராக இவர் காட்டிய மாஸ் இன்றும் கிராமத்துப் பெருசுகளை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். மேலும் வேங்கை படத்திலும், காஞ்சனா படத்திலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். எமோஷனலான தந்தை சீனுக்கு ராஜ்கிரணை விட்டால் தற்போது தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகரும் கிடையாது. தவமாய் தவமிருந்து, கிரீடம், கொம்பன், பாண்டவர் பூமி, முனி போன்ற படங்கள் இவரது நடிப்புக்குத் தீனி போட்ட படங்கள் எனலாம்.
தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு வாய்ப்புக் கொடுத்த ராஜ்கிரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தான் இயக்கிய பா. பாண்டி படத்தில் அவரை மீண்டும் ஹீரோவாக்கி அழகு பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தோல்விகளில் துவண்டு 40 வயதிற்குப் பின் ஹீரோவாக நடித்து தற்போது வெற்றிக் கொடி நாட்டிவரும் ராஜ்கிரண் இளைஞர்களுக்கு இன்ஸிபிரேஷனாகத் திகழ்கிறார்.