இயக்குநர் மிஷ்கின் திரைப்படங்கள் என்றாலே நடிகர்களின் முடி கூட பேசும். அந்த அளவிற்கு வசனங்களைக் குறைத்து உடல்மொழியில் நடிகர்களை நடிக்க வைப்பவர். எந்தக் காட்சியாக இருந்தாலும், சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் வந்தோம் நடித்தோம் என்றில்லாமல் அந்தக் கதபாத்திரங்களை நினைவு கூற வைப்பார்.
அப்படியாக அஞ்சாதே படத்தில் பிரசன்னா, பாண்டியராஜன், மற்றும் ஒரு மொட்டை நடிகர், யுத்தம் செய் படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர்ன் நடிப்பு தனித்துவமாக இருக்கும். நந்தலாலா படத்தில் தானே நடித்து அந்தக் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்தார்.
இப்படி நடிகர்களைச் செதுக்கும் இயக்குநராக விளங்கும் மிஷ்கின் ஒரு வில்லன் நடிகரை எமோஷனல் அப்பாவாக நடிக்க வைத்து அவரின் மறுபக்கத்தைக் காட்டிய படம் தான் பிசாசு. நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் புதல்வன் நவரசவேள் ராதாரவியை பிசாசு படத்தில் இறந்த பெண்ணின் அப்பாவாக நடிக்க வைத்து ரசிகர்களின் நெஞ்சத்தைக் கரைய வைத்தார்.
சாதாரணமாக ராதாரவி என்றாலே முரட்டு நடிப்பு, கற்பழிப்புக் காட்சி, வில்லத்தனமான முகம், ஹீரோக்களை துவம்சம் செய்வது என்று தமிழ் சினிமாவில் காட்டிய இயக்குநர்களுக்கு மத்தியில் பிசாசு படத்தில் அவரின் வேறொரு நடிப்பினைக் காட்டியிருப்பார்.
பிசாசு படத்தில் ராதாரவியை எப்படி தேர்வு செய்தீர்கள் என்று அனைவரும் கேட்க, அப்போது மிஷ்கின் இதுவரை அவரை வில்லனாகவே பார்த்து பழகி விட்டோம். இந்தப் படத்தில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரைத் தேர்வு செய்திருகிறார். அதன்படி பிசாசு படத்தில் நடிப்பதற்காக மிகவும் மெனக்கெட்டாராம் ராதாரவி. ஆனால் அதற்குமுன் ராதாரவி கதாபாத்திரத்தில் சிவக்குமாரை நடிக்க வைக்க முயற்சித்தாராம் மிஷ்கின். இயக்குநர் பாலாவிடம் கேட்டபோது அவர் நடிக்க மாட்டார் என்று கூறியதால் அதன்பின் ராதாரவியைத் தேர்வு செய்திருக்கிறார் மிஷ்கின்.
அதுவும் கிளைமேக்ஸ் காட்சியில் இறந்த தன் பெண்ணை ஐஸ் தொட்டியில் பாதுகாத்து வைத்திருந்த காட்சிகளில் எல்லாம் சில மணிநேரங்கள் அந்த ஐஸ் தொட்டியிலேயே இருந்து நடித்துக் கொடுத்தாராம்.
வைரமுத்து வரிகளை மாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்.. கிழக்குச் சீமையிலே தங்கச்சி பாடல் பிறந்த கதை
மேலும் பிசாசு படத்தைப் பார்த்தவர்களுக்கு ராதாரவியின் நடிப்பு எப்படி என்று விளங்கியிருக்கும். தன்மகளை ஹீரோவின் வீட்டிற்குள் தேடும் போது அங்கும் இங்கும் தவழ்ந்து தவழ்ந்து செல்லும் காட்சிகளில் நிஜ அப்பாக்களை அழ வைத்திருப்பார். மேலும் அழுது புலம்பும் அந்தக் காட்சிகளும் ராதாரவியின் நடிப்புக்குத் தீனி போட்டதாக இருந்தது.
அதுமட்டுமன்றி கிளைமேக்ஸ் காட்சியில் இறந்த தன் மகளை ஐஸ் தொட்டியிலிருந்து மேல்நோக்கித் தூக்கும்போது அவர் பதறும் காட்சிகளும், எரிக்கும் போது அழும் காட்சிகளும் இப்படி ஒரு ராதாரவியை நாம் மிஸ் பண்ணிட்டோமே என்று ஏங்க வைத்திருப்பார். பிசாசு படத்தில் மிஷ்கின் ராதாரவியை தேர்வு செய்ததற்காகவே ஒரு சபாஷ் போடலாம்.