வைரமுத்து வரிகளை மாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்.. கிழக்குச் சீமையிலே தங்கச்சி பாடல் பிறந்த கதை

தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை பாசத்தைப் பிரதிபலிக்கும் விதமாக எத்தனையோ படங்கள், பாடல்கள் வந்திருந்தாலும் இந்த மூன்று படங்களை ரசிகர்கள் என்றென்றும் மறக்க முடியாது. ஒன்று நடிகர்திலகம் – சாவித்ரியின் பாசமலர், இரண்டு ரஜினி – ஷோபாவின் முள்ளும் மலரும், மூன்றாவதாக அமைந்த படம் ராதிகா – விஜயக்குமாரின் கிழக்குச் சீமையிலே. இந்த மூன்று படங்களுமே அண்ணன் தங்கை பாசத்தை அற்புதமாக எடுத்துக்காட்டியிருக்கும் தலை சிறந்த திரைப்படங்கள்.

இவற்றில் 1993-ல் வெளியான கிழக்குச் சீமையிலே திரைப்படம் பாரதிராஜாவுக்கு மற்றுமொரு பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதுவரை இளையராஜாவுடன் பணிபுரிந்த பாரதிராஜா கிழக்குச் சீமையிலே படம் முதல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிய ஆரம்பித்தார். கிழக்குச் சீமையிலே படப் பாடல்கள் இது ஏ.ஆர்.ரஹ்மான் இசையா என்று வியப்படையத் தோன்றும் அளவிற்கு கிராமத்து சப்ஜெக்டில் அதன் மண்மனம் குறையாமல் வெஸ்டர்னைக் கலந்து அற்புதமான பாடல்களைக் கொடுத்திருப்பார்.

அப்படி அண்ணன்-தங்கை பாசத்தை உணர்த்தும் ஒரு பாடல்தான் கத்தாழங் காட்டுவழி பாடல்.. கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில் மதுரை-தேனி வட்டார வழக்கில் இயற்றப்பட்ட பாடல். இந்தப் பாடல் அதுவரை பாசமாக பிறந்த வீட்டில் வளர்ந்த தங்கை திருமணம் முடிந்து புகுந்த வீடு செல்லும் போது, பிறந்த வீட்டில் எப்படி வளர்ந்தாள் என்பதை வைரமுத்து அற்புதமாக பதிவு செய்திருப்பார்.

இந்தப் பாடலுக்கு முதலில் இயற்றப்பட்ட வரிகள் இதான்.

வலது கண்ணைப் பிரிஞ்சு போன இடதுகண்ணே
அண்ணன் உசிரு இங்க அரைஉசிரு ஆனதம்மா
நீ விளையாண்ட தாழ்வாரம் வெறிச்சோடிப் போனதம்மா
குருணை போட்டு நீ வளர்த்த கோழி கூட அழுகுதம்மா

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

என்று கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.

சிவாஜி முதல் விஜய், அஜீத் வரை மாற்றப்பட்ட படங்களின் கிளைமேக்ஸ்.. மாஸ்ஹிட் ஆன வரலாறு

ஆனால் டியூன் போட்டுக் கொடுத்த ரஹ்மானுக்கு வைரமுத்து எழுதிய வரிகள் சரியாக மெட்டு அமையாததால் பாடலை மாற்றித் தருமாறு கேட்டிருக்கிறார். அதன்பின் வைரமுத்து எழுதிய வரிகள் தான்

கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டிகட்டி போறவளே வாக்கப்பட்டு போறவளே
என்று எழுதிக்கொடுக்க ஏ.ஆர்.ரஹ்மான் பின் இசையமைத்தார். இப்படித்தான் இந்தப் பாடலான உருவானது. இன்னும் இந்தப்பாடலைக் கேட்கும் ஒவ்வொரு அண்ணணுக்கும் தான் பாசமாக வளர்த்த தங்கை புகுந்த வீடு செல்லும்போது கண்களில் நீர் வராமல் இருக்காது. அதேபோல் தான் தாய்மாமன் பெருமையைக் கூறும்

மானூத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே
பொட்டப்புள்ள பொறந்ததுனு பொலிகாட்டில்
கூவும் குயிலே
தாய் மாமன் சீர்சுமந்து வாராண்டீ

போன்ற பாடலும் மிகப் பிரபலம் அடைந்து இன்றும் விஷேசவீடுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...