இயக்குநர் இமயம் கே.பாலசந்தரால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. தனது மேனரிசத்தாலும், தனித்துவ நடிப்பாலும் ஹீரோக்களையே ஓரங்கட்டி விடுவார். இவர் இருந்தாலே அந்தப் படம் வெற்றிதான் என்னும் அளவிற்கு இன்றும் சினிமாவில் கோலோச்சி வருகிறார்.
ஆசை திரைப்படம் இவருக்கு சினிமாவில் பெரிய திருப்புமுனையைக் கொடுக்க தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தினார். அதன்பின் கில்லி கொடுத்த வெற்றி இவரை கிராமத்து ரசிகர்களிடத்திலும் நிலைநிறுத்தியது. முத்துப்பாண்டியாக கில்லியில் இவர் காட்டிய கெத்து படத்தில் அப்ளாஸ் வாங்கும். மேலும் அபியும் நானும், மொழி, சந்தோஷ் சுப்ரமணியம், காஞ்சிவரம் போன்ற படங்களில் தனது தனித்துவ நடிப்பை காட்டியிருப்பார் பிரகாஷ்ராஜ்.
நடிகர் பிரகாஷ்ராஜ் அவ்வப்போது அரசியலில் அதிரடி கருத்துக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாற்றி விடுவார். தற்போது அது போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அண்மையில் பேட்டி ஒன்றில், செய்தியளார் நீங்களும், கமல்ஹாசனும் மிகச்சிறந்த நடிகர்கள். ஆனாலும் அரசியலில் தோற்று விட்டீர்களே..! அப்படியானால் உங்களை விட சிறந்த நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்களா என்று கேட்க, அதற்கு பிரகாஷ்ராஜ், “பிரதமர் மோடி இருக்கிறாரே. அவர் மிகச்சிறந்த பேச்சாளர், சிறந்த ஃபெர்பாமர் தனக்கென காஸ்ட்டியூம் டிசைனர், ஹேர் ஸ்டைல் டிபார்ட்மெண்ட் என அவர் வைத்திருக்கிறாரே“ என்று கூறியுள்ளார்.
சிவாஜியிடம் பாடுவதற்காக கண்டிஷன் போட்ட டி.எம்.எஸ் : இப்படித்தான் கூட்டணி உருவாச்சா?
பிரகாஷ் ராஜின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வர அவரை நெட்டிசன்கள் கமெண்ட்டுகளில் வறுத்தெடுக்கின்றனர். பிரதமரை இவ்வாறு விமர்சிப்பது தவறு என்றும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தன் நண்பரும் எழுத்தாளருமான கௌரி லங்கேஷ் படுகொலைக்குப் பிறகு அரசியலில் தீவிரமாக நுழைந்த பிரகாஷ் ராஜ் கர்நாடகாவைச் சேர்ந்தவராவார். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெங்களூருவில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
அதன் பின் நேரடி அரசியலில் இருந்து விலகி இருக்கும் பிரகாஷ் ராஜ், தன் அரசியல் கருத்துகளையும், விமர்சனங்களையும் சமூக வலைதளங்களிலும், பேட்டிகளிலும் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.