மிஷ்கின் படத்தில் வேண்டா வெறுப்பாக நடித்த பாண்டியராஜன்.. படத்தின் வெற்றியால் கனிந்த நட்பு

By John A

Published:

சித்திரம் பேசுதடி படத்திற்குப் பின் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் அஞ்சாதே. முதல்படத்தில் ஹீரோவாக நடித்த நரேன் கூட்டணி இந்தப் படத்திலும் தொடர்ந்தது. அதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்த பிரசன்னாவை சைக்கோ வில்லனாக அறிமுகப்படுத்தினார் மிஷ்கின்.

அஜ்மல், விஜயலட்சுமி உள்ளிட்டோரும் நடித்திருப்பார்கள். படத்தில் இடம்பெற்ற முக்கிய கதாபாத்திரம் என்றால் அது பாண்டியராஜன் தான். அதுவரை இயக்குநராகவும், காமடிப் பட நடிகராகவும் விளங்கிய பாண்டியராஜன் இந்தப் படத்தில் ஏற்றது பிரசன்னாவுக்கு அசிஸ்டெண்டாக வில்லன் லோகு அவதாரம்.

லோகு கதாபாத்திரம் இவ்வளவு கொடூரமானதா என்று யோசிக்கத் தோன்றும் அளவிற்கு பாண்டியராஜன் தனது நடிப்பின் மற்றொரு முகத்தினைக் காட்டியிருப்பார். அஞ்சாதே படத்தின் கதையை இயக்குநர் மிஷ்கின் பாண்டியராஜனிடம் சொல்ல பாண்டியராஜனோ ஹீரோ என்ற கண்ணோட்டத்திலேயே கதையைக் கேட்டிருக்கிறார். அதன்பின் இல்ல சார் நீங்கள் தான் வில்லன் என்று கூறிய பின் பாண்டியராஜன் என்னை மக்கள் வில்லன் நடிகராக ஏற்றுக் கொள்வார்களா? என்று கேட்டிருக்கிறார்.

அதென்ன 8 அடுக்கு மாளிகை.. கண்ணதாசன் தத்துவப் பாடலில் இப்படி ஓர் விளக்கமா? மெய்சிலிர்த்த இயக்குநர்

கண்டிப்பாக இந்தப் படம் உங்களுக்கு திருப்புமுனையைக் கொடுக்கும் சார் என்று மிஷ்கின் உத்திரவாதம் கொடுத்திருக்கிறார். அதன்பின் மற்றொன்றையும் சொல்லியிருக்கிறார் மிஷ்கின். அதாவது படத்தில் பாண்டியராஜன் மீசையை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அப்போது பாண்டியராஜன் நான் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை மீசையை எடுத்ததில்லை.

அதெல்லாம் முடியாது என்றிருக்கிறார். அப்போது மிஷ்கின் அதான் சார் வேணும். இதுவரை நீங்கள் மீசையை எடுத்ததில்லை. இந்தப் படத்திற்காக அதான் வேண்டும் என்று கூறவே வேறு வழியின்றி மீசையை எடுத்திருக்கிறார் பாண்டியராஜன்.  வேண்டா வெறுப்பாக படத்திலும் நடித்திருக்கிறார்.

ஆனால் படம் வெளியாகி மூன்றாவது நாளே பாசிடிவ் விமர்சனங்கள் வந்தது. பிரசன்னா கதாபாத்திரமும், பாண்டியராஜன் கதாபாத்திரமும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்தது. நகைச்சுவை ஹீரோவாகவே பாண்டியராஜனைப் பார்த்த ரசிகர்கள் முதன் முறையாக அவரின் வில்லத்தனத்தையும் ரசித்தனர். லோகு கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. குறிப்பாக கத்தாழ கண்ணால பாடல் இவரை 2கே கிட்ஸ் ரசிகர்களிடமும் சென்று சேர்த்தது.

படத்தின் வெற்றிக்குப் பின் பாண்டியராஜன் மிஷ்கினைச் சந்தித்து மோதிரம் ஒன்றைப் பரிசாக வழங்கியருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.