1991-ம் ஆண்டு இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய புதுநெல்லு புதுநாத்து திரைப்படம் மூலம் தமிழ்சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நெப்போலியன். இவரின் உண்மையான பெயர் குமரேசன். நடிகர் நடிகைகளுக்கு பெயர்களை மாற்றி அவர்களுக்கு சினிமாவில் நிலையான ஒரு இருப்பிடத்தை உருவாக்கியவர் பாரதிராஜா. அதேபோல்தான் குமரேசனையும் நெப்போலியனாக மாற்றினார்.
முதல் படத்திலேயே 60 வயது முதியவர் வேடம். ஆனால் அப்போது அவருக்கு வயது 26. என்னடா இது முதல் படத்திலேயே இப்படி ஒரு வேடமா என்று மன உளைச்சலில் இருந்தவருக்கு புதுநெல்லு புதுநாத்து நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
அடுத்ததாக இவர் நடித்த படங்கள் வில்லன் கதாபாத்திரங்களாக அமைய தமிழ்சினிமாவிற்கு புது வில்லன் கிடைத்து விட்டார் என்றிருந்த நிலையில் சீவலப்பேரி பாண்டி இவருக்கு ஹீரோ அந்தஸ்தைக் கொடுத்தது. தொடர்ந்து வந்த கிழக்குச் சீமையிலே இவருக்கு சினிமாவில் முக்கிய இடத்தைக் கொடுத்தது. எனினும் பல படங்களில் குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அமைச்சர் கே.என்.நேருவின் நெருங்கிய உறவினராக இருப்பதால் தி.மு.கவில் ஐக்கியமானனார். பெரம்பலூர் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு 2009 மன்மோகன் சிங் அமைச்சரவையில் இணையமைச்சராக பதவி வகித்தார்.
மேலும் நடிப்பு, அரசியல் மட்டுமல்லாது ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்தியா மற்றும் அமெரிக்காவில் செயல்படும் இவரது ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற ஐடி கம்பெனியில் பல ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மகனுக்கு ஏற்பட்ட பாதிப்பு
நடிகர் நெப்போலியனுக்கு இருமகன்கள். இதில் மூத்த மகன் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நடமாட இயலா நிலையில் இருந்தார். இதனால் அமெரிக்காவில் இந்நோய்க்காக சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாததால் திருநெல்வேலி அருகில் இந்நோய்க்காக பாரம்பரிய முறைப்படி சிகிச்சை அளிக்கும் வைத்தியரிடம் சென்ற போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் தனது மகனுக்கு மறுவாழ்வு கிடைத்ததை எண்ணி நெப்போலியன் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளானார்.
உருவான மயோபதி மருத்துவமனை
மகனுக்கு அளித்த வைத்தியரிடம் போதிய வசதிகள் இல்லாததால் அதே பகுதியில் இதுபோன்ற நோயால் பாதித்தவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்கும் நோக்கில் உருவானது தான் மயோபதி மருத்துவமனை.
கண்ணதாசன் காலம் முதல் அனிருத் காலம் வரை : வாலிபக் கவிஞரான வாலி
தனது மகனுக்கு ஏற்பட்ட பாதிப்பால் ஒரு பெற்றோராக தான் எண்ணிய கஷ்டங்களை இனி வேறு எந்த பெற்றோரும் அனுபவிக்கக் கூடாது என்ற நோக்கிலும் இந்நோயால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் இலவச சிகிச்சை மேற்கொள்ளவும் இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறார். இந்தியா முழுவதும் இம்மருத்துவமனையின் சேவையை அறிந்து பலர் தங்கி சிகிச்சை பெற்றுச் செல்வது தனிச்சிறப்பு.
இந்த மருத்துவமனையில் தசைசிதைவு நோய், முடக்கு வாதம், பக்க வாதம், விபத்துக்களால் நடமாட முடியாதவர்களுக்காக தரமான இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. நடிகர் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட நிலையில் இவரது அண்ணன் இந்த மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்.