கண்ணதாசன் காலம் முதல் அனிருத் காலம் வரை : வாலிபக் கவிஞரான வாலி

தமிழ் சினிமாவில் நன்கு அறிமுகமான பாடலாசிரியர்கள் சிலர் மட்டுமே என்று கூறலாம். பாடகர்கள்,  இசையமைப்பாளர்கள் புகழ்பெறும் அளவிற்கு பாடலாசிரியர்கள் புகழ் பெறுவதில்லை. எம்.கே. தியாகராஜபாகவதர் காலம் முதல்தொட்டு அதன் பின் வந்த கண்ணதாசன், புலமைப்பித்தன், பிறைசூடன், வைரமுத்து, பா.விஜய், அறிவுமதி, நா.முத்துக்குமார், தாமரை, சிநேகன் போன்ற எண்ணற்ற பாடலாசியர்கள் இருந்தபோதிலும் என்றும் இளமை குறையாமல் இளசுகளின் பல்ஸ்-ஐ எகிற வைக்கும் பாடல்களை இயற்றியவர்தான் கவிஞர் வாலி.

திருச்சி மாவட்டத்தில் திருப்பராய்த்துறை என்னும் ஊரில் பிறந்து ஸ்ரீரங்கத்தில் வளர்ந்தவர்தான் ரங்கராஜன் என்கிற வாலி. ஆனந்த விகடன் இதழில் ஓவியங்கள் வரைந்த மாலி என்ற ஓவியர் மீது கொண்ட பற்று காரணமாக ரங்கராஜன் என்ற தனது இயற்பெயரை வாலி என்று மாற்றிக் கொண்டார். பின்னர் வாலி என்ற பெயரே நிலைத்து விட்டது.

ஆரம்பத்தில் ஓவியங்கள் வரைவது, சிறுகதைகள் எழுதுவது, பத்திரிக்கைகளில் கட்டுரைகள் மற்றும் வானொலிக்கு நாடகங்கள் எழுதுவது என்று ஓடிக் கொண்டிருந்த வாலியின் வாழ்க்கை சென்னை வந்த பிறகு தமிழ் அன்னை இவரை அரவணைத்துக் கொண்டாள். நாகேஷ்-ன் அறிமுகமும் இவரை திரைத்துறையில் கால் பதிக்க வைத்தது. ‘நல்லவன் வாழ்வான்‘ என்ற திரைப்படத்தில் இவர் தனது முதல் பாடலான

சிரிக்‍கின்றாள்! -இன்று
சிரிக்‍கின்றாள்!’

என்ற பாடலை இயற்ற அன்றிலிருந்து வாலிக்கு தொடர்ந்து ஏறுமுகம் தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் -ன் புரட்சிப் பாடல்களில் பெரும்பாலானவை வாலியின் வரிகளில் உதித்தவை தான். அதில் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்த காலத்தில் ஆட்சியையே கைப்பற்றும் அளவிற்கு ஹிட் ஆகி குறிப்பிடத்தகுந்த பாடல் தான் ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்..‘ என்ற பாடல்.

இன்றும் அந்த பாடலை நாம் கேட்டால் புல்லரித்து நரம்புகள் புடைப்பது உறுதி. இவ்வாறாக புரட்சிப் பாடல்களை எழுதிய வாலி காதல் ரசம் சொட்டச் சொட்ட அதன் பின் வந்த படங்களில் பாடல்களை இயற்ற வாலியின் பாடல்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உருவானது. இவ்வாறாக வாலியின் தமிழால் வெற்றி பெற்ற படங்கள் பல நூறு. புரட்சித் தலைவருக்கு அடுத்தபடியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் பாடல்கள் இயற்ற ஆரம்பித்தார் வாலி. அந்த பாடல்களும் வாலியின் தமிழ்ப் பெருமையை பேச வாலி – MSV கூட்டணி வெற்றிக் கொடி நாட்டியது.

Vali vs MGR

வாலி – இளையராஜா கூட்டணி 

அதன்பின் இசைஞானியுடன் வாலி மெட்டமைத்த பாடல்கள் 80களின் பொற்காலமாக திகழ்ந்தது. ரஜினி, கமல் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கும் அறிமுக நாயகர்களுக்கும் பல ஹிட் பாடல்களை இந்தக் கூட்டணி கொடுத்தது.

வாலிபக் கவிஞர் ஆனது எப்படி?

90களின் ஆரம்பத்தில் இசைப்புயலும், வைரமுத்துவும் கலக்கிக் கொண்டிருக்க மீண்டும் தன் தமிழ்த் திறமையை இசை உலகிற்கு காட்டினார் வாலி. எனக்குத் தான் வயசாச்சு என் தமிழுக்கு அல்ல என்பது போல் காதலர் தினம், பூவே உனக்காக, நினைத்தேன் வந்தாய், யூத், மின்னலே, தீனா, மன்மதன், நியூ, சிவாஜி, பில்லா (அஜித்), சில்லுனு ஒரு காதல் என இவரது தமிழால் உருவாகாத ஹிட் பாடல்களே இல்லை என்னும் அளவிற்கு 15000 பாடல்களுக்கு மேல் இயற்றி 90s கிட்ஸ்களின் பல காதல் தேசிய கீதங்களுக்கு சொந்தக்காரரானார். பல திரைப்படங்களில் நடித்தும், திரைக்கதை வசனமும் எழுதியுள்ளார். 

இன்றும் நாம் தினசரி கேட்கும் பக்திப் பாடல்களான ‘கற்பனை என்றாலும்’ முருகன் பாடல்கள் வாலியின் வரிகளில் உருவானவையே..

இவரது பாடல்களில் இளமை துள்ளும். காதல் ரசம் வடியும். காதலால் மனம் உருகும். புரட்சி வரிகளால் நரம்புகள் புடைக்கும். சோகத்தில் கண்கள் குளமாகும். இப்படி நவரசங்களும் சொட்டச் சொட்ட பாடல்கள் இயற்றிய வாலி வயது மூப்பு காரணமாக கடந்த 2013-ல் பூவுலக வாழ்விற்கு விடையளித்து தமிழன்னை வசமே சென்று விட்டார்.

இவர் வாங்காத விருதுகளே இல்லை என்னும் அளவிற்கு பத்ம ஸ்ரீ முதல் தேசிய விருது வரை இவரை அலங்கரித்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...