நாடக அனுபவத்தால் தமிழ்த்திரை உலகிற்குக் கிடைத்த முத்து… மிதமான நடிப்பில் உருக வைத்த முத்துராமன்!

By Sankar Velu

Published:

கதாநாயகன், நகைச்சுவை நடிகர் என தொடங்கி தமிழ்சினிமாவில் 1960 முதல் 1970 வரை வெற்றி நடை போட்டவர் நடிகர் முத்துராமன்.

இயல்பான நடிப்பு, தெளிவான தமிழ் உச்சரிப்பு, தனித்துவமான குரல் வளம் இவை தான் முத்துராமனை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாகக் கொண்டு போய் சேர்த்தது.

பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் போதே நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். பெற்றோர்கள் விரும்பாததால் குடும்பத்தை விட்டு வெளியேறி நாடக கம்பெனிகளில் ஏறி வாய்ப்பு கேட்கத் தொடங்கினார். அதன்பலனாக சிறு சிறு வேடங்கள் கிடைத்தன.

Mutguraman 2 1
Muthuraman 2

கிடைத்த வேடங்களில் இவரது நடிப்பு செம மாஸாக இருந்தது. இவரது நடிப்பையும், குரல் வளத்தையும் கண்ட காரைக்குடி வைரம் அருணாச்சலம் செட்டியார் இவரைப் பாராட்டிக் கொண்டே இருந்தார். அவர் நடத்திய ஏழைப் பெண், தாகசாந்தி, குடும்ப வாழ்க்கை, புயலுக்குப் பின், எதிர்பார்த்தது, அன்னை உள்பட பல நாடகங்களில் முத்துராமன் நடித்து வந்தார்.

அதன்பின் ராமநாதன், குலதெய்வம் ராஜகோபால் என நாடக நடிகர்களுடன் இணைந்து வைரம் ராஜ சபா என்ற பெயரில் நீதிபதி, சந்திப்பு, கடமை, கட்டபொம்மன் என பல நாடகங்களை அரங்கேற்றினார்.

தொடர்ந்து கலைமணி நாடக சபா நடத்தினார். இதில் மனோரமாவும் நடித்துள்ளார். சகஸ்ரநாமத்தின் நாடகங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் எஸ்எஸ்ஆர். நாடகங்களில் தொடர்ந்து நடித்துள்ளார். அப்போது மணிமகுடம், முத்து மண்டபம் நாடகங்கள் மக்கள் மத்தியில் செம மாஸாக இருந்தன.

Ethirneechal
Ethirneechal

மகாகவி பாரதியின் தனித்துவமான கவிதை வரி நாடகத்தில் நடித்த முத்துராமன் பலரது கவனத்தையும் ஈர்த்தார். திரை உலகிலும் வாயப்பு தேடி தீவிரமாக முயற்சி செய்தார். அறிஞர் அண்ணா கதை எழுத, கருணாநிதி வசனம் எழுதிய ரங்கூன் ராதா படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் தோன்றி தமிழ்த்திரை உலகில் அறிமுகமானார் முத்துராமன்.

எம்ஜிஆருடன் அரசிளங்குமரி படத்தில் நடித்து அசத்தினார். நெஞ்சில் ஓர் ஆலயம், சுமைதாங்கி, போலீஸ்காரன் மகள், சர்வர் சுந்தரம், காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம், காசே தான் கடவுளடா, எதிர்நீச்சல், ஊட்டி வரை உறவு, மயங்குகிறாள் ஒரு மாது, வாணி ராணி, மூன்று தெய்வங்கள் என பல படங்கள் மக்கள் மத்தியில் அவரை சிறந்த நடிகராக்கின.

வாணி ராணியில் காமெடியில் பின்னிப் பெடல் எடுத்திருப்பார். மூன்று தெய்வங்கள் படத்தில் திருடனாகவும், எதிர்நீச்சல் படத்தில் பாலக்காட்டு மலையாளம் பேசியும், நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலவீனமானவராகவும் நடித்து அசத்தியிருந்தார்.

Sooryakanthi
Sooryakanthi

ஜெயலலிதாவுடன் இவர் நடித்த சூரியகாந்தி முத்துராமனுக்கு பெரும்புகழைப் பெற்றுத் தந்தது. திரையுலக வாழ்க்கையில் அவருக்கு இது ஒரு மைல் கல். சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் கே.ஆர்.விஜயாவை ஒரு தலையாகக் காதலிப்பது தெரியாமல், காதலிக்கும், அவருக்கும் இடையில் சிக்கியவராக நடித்து அசத்தியிருந்தார்.

NOA
NOA

நடிக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற மிதமான நடிப்பைக் கொடுத்து கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டி விடுவதில் வல்லவர் முத்துராமன். காலத்திற்கும் அழியாத பல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கினார்.

Karthik 1
Karthik

இவரது மகன் நவசர நாயகன் கார்த்திக்கும் தனக்கென தனி பாணி நடிப்பைக் கொண்டு வந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பெற்று விட்டார்.