தமிழ்சினிமா உலகில் மூவேந்தர்களாக இருந்த எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் மூவருக்கும் மிக நெருக்கமாக இருந்தவர் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன். அவருக்கு நட்பு வட்டம் அதிகம். திறமையானவர்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்காகவே அந்த நட்பைப் பயன்படுத்தினார்.
அவர் மட்டும் இல்லேன்னா கவிஞர் வாலிக்குத் திரையுலகில் பாட்டு எழுத வாய்ப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். வாலி மாதிரி அவரால் பயன்பெற்றவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தான் முத்துராமன்.
இவரது விஷயத்தில் மட்டும் ஒரு சின்ன மாறுதல். அவருக்கு வாய்ப்புத் தேடித்தரணும்னு வி.கோபாலகிருஷ்ணன் நினைக்கவே இல்லையாம். ஆனாலும் அவரது நல்ல குணம் காரணமாக அப்படி அமைந்துவிட்டது என்று தான் சொல்லணும்.
‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை ஸ்ரீதர் எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று நினைத்தார் வி.கோபாலகிருஷ்ணன். அதனால் தனது நாடகத்தைப் பார்க்க வருமாறு அவரை வற்புறுத்தி அழைத்தார். அந்த நாடகத்திலே முத்துராமன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலே நடித்து இருந்தார்.
நாடகத்தைப் பார்த்த ஸ்ரீதர் முத்துராமனின் நடிப்பிலே தன் மனதைப் பறிகொடுத்தார். உடனே நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்கு முக்கியமான கதாபாத்திரத்தில் அவரை நடிக்க ஒப்பந்தம் செய்வது என முடிவெடுத்தார்.
முத்துராமன் எத்தனையோ படங்களில் நடித்து இருந்தாலும் அவரது திரையுலக வாழ்விலே திருப்பத்தை உண்டாக்கிய படம் நெஞ்சில் ஓர் ஆலயம் தான். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தியது வி.கோபாலகிருஷ்ணன் தான்.
ஸ்ரீதரை அந்த நாடகத்தைப் பார்க்க வற்புறுத்தி அழைத்ததால் தான் அவர் வந்தார். அப்படி அழைக்கவில்லை என்றால் அந்த வாய்ப்பு முத்துராமனுக்குக் கிடைத்திருக்காது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் முத்துராமன் நடிப்பில் வானம்பாடி, போலீஸ்காரன் மகள், காதலிக்க நேரமில்லை, அன்புத்தங்கை, சர்வர் சுந்தரம், போக்கிரி ராஜா, குரு ஆகிய படங்கள் முக்கியமானவை. அலட்டல் இல்லாத அருமையான அழகான நடிப்புக்குச் சொந்தக்காரர் யார் என்றால் அவர் முத்துராமன் தான்.
அவரது மகன் தான் நவரச நாயகன் கார்த்திக். அவருடைய மகன் கௌதம் கார்த்திக்கும் தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.