நடிக்கவே இஷ்டம் இல்லாமல் நடித்த நவரச நாயகன்.. சூப்பர் ஹிட் படமாக மாறிய வரலாறு

By John A

Published:

நவரச நாயகன் கார்த்திக் தனது முதல் படத்திலேயே பாரதிராஜாவின் பட்டறையில் கூர்தீட்டப்பட்டு அலைகள் ஓய்வதில்லை படத்தில் முத்தான நடிப்பை வழங்கியிருந்தார். தொடர்ந்து கார்த்திக் பல ஹிட் படங்களில் நடிக்க மௌனராகம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. அதன்பின் வந்த வருசம் 16, அக்னி நட்சத்திரம், பொன்னுமணி, அமரன், கிழக்கு வாசல், தெய்வ வாக்கு, முத்துக்காளை, கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

இதனால் பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக மாறினார் கார்த்திக். மேலும் கார்த்திக் நடித்த படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைய பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பினார் கார்த்திக். இந்நிலையில் இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் 1998-ல் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் திரைப்படத்தில் நடித்தார். கார்த்திக்குடன் அஜீத், ரோஜா, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆரம்பத்தில் இந்தப்படத்தில் நடித்த போது கதை தான் ஏற்கனவே நடித்து வெளியான நந்தவனத் தேரு படம்போல் இருப்பதாக எண்ணினாராம் கார்த்திக்.

எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்.. கள்ளக்குறிச்சிக்குப் போங்க.. தளபதி விஜய் போட்ட அதிரடி உத்தரவு

இதனால் ரமேஷ் கண்ணாவிடம் இந்தப் படம் நந்தவனத்தேரு படம்போல் உள்ளது. ஏற்கனவே இப்போதுதான் இதுபோன்ற கதையில் நடித்தேன். ஆனால் அந்தப் படம் பிளாப் ஆகியிருக்கிறது. எனவே விக்ரமனிடம் சொல்லுங்கள் என்றிருக்கிறார். ரமேஷ் கண்ணா இதை விக்ரமனிடம் சொல்ல அவரோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் படத்தை அங்குலம் அங்குலமாகச் செதுக்கியிருக்கிறார்.

படம் 1998 சுதந்திர தினத்தன்று வெளியானது. படம் பூவே உனக்காக படத்தினைப் போல் மாஸ் ஹிட் ஆனது. குறிப்பாக குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வருகை தந்தனர். கார்த்திக் மென்மையான நடிப்பும், அஜீத்தின் கெஸ்ட் ரோலும், விக்ரமனின் வசனங்களும், இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் மெலடியும் படத்தினை மாபெரும் வெற்றிப் படமாக்கியது.

விருப்பமே இல்லாமல் நடித்த கார்த்திக் படம் தோல்வியாகும் என நினைக்க, ஆனால் படம் வெளிவந்து அவருக்கு இன்னும் அதிக ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.