தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச ஹீரோக்களான எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் ஒரு காலத்தில் கலக்கி வந்த போது, பல ஹீரோக்கள் அதிகம் காணாமலே போனார்கள். இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கு மத்தியில் ஒரு சில நடிகர்கள் தங்கள் திறமையின் காரணமாக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஜெய்சங்கர்.
பெரிய ஹீரோக்கள் படங்களுடன் ஜெய்சங்கரின் முதல் படமான இரவும் பகலும் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் அடுத்தடுத்து நிறைய ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் ஜெய்சங்கருக்கு கிடைத்தது. வெள்ளிக்கிழமை என்றாலே ஜெய்சங்கர் படங்கள் ரிலீஸ் ஆகும் அளவிற்கு நிறைய படங்களில் அவர் நடித்து வந்தார். ஒரு பக்கம் குடும்ப படங்கள் ரூட்டில் போன ஜெய்சங்கர், மறுபக்கம் ஜேம்ஸ் பாண்ட் கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும் அதிகம் நடித்து வந்தார்.
நடிப்பில் ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பி இருந்தாலும் இன்னொரு பக்கம் மனித நேயமிக்க மனிதர் என்றும் பெயர் எடுத்தவர் ஜெய்சங்கர். முடிந்தவரை தன்னாலான உதவியை பிறருக்கு செய்து வந்த ஜெய்சங்கர், தனக்கு சம்பள பாக்கி இருந்தாலும் கூட அதை கேட்டு வாங்கமாட்டாரம். ஒரு வேளை அவருக்கு சம்பளமாக கொடுக்கும் காசோலைகள் வங்கியில் பணமில்லை என திரும்பி வந்தாலும் கூட அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் அப்படியே விட்டுவிடும் ஜெய்சங்கர், சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை கூட எடுக்கமாட்டார் என்றும் தகவல்கள் கூறுகின்றது.
அப்படி இருக்கையில், நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான SAC-க்கு கார் ஒன்றை கொடுத்து ஜெய்சங்கர் உதவிய சம்பவம், பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது. எண்பதுகளில் சிறந்த இயக்குனராக வலம் வந்த SA சந்திரசேகர், ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை இயக்கி உள்ளார் SA சந்திரசேகர், மூன்று படங்கள் இயக்கிய பிறகும் ஸ்கூட்டர் தான் பயன்படுத்தி வந்துள்ளார்.
அப்படி ஒரு முறை கோடம்பாக்கம் அருகே தனது மனைவி சோபா மற்றும் மகன் விஜய்யுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார் SAC. அவர்களின் பின்னால் காரில் வந்த ஜெய்சங்கர், சந்திரசேகரை பார்த்ததும் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்கு வா என சொல்லிவிட்டு போனார். இதனையடுத்து ஜெய்சங்கர் வீட்டுக்கு SAC போக, அங்கே நின்று கொண்டிருந்த ஃபியட் காரை எடுத்து கொண்டு செல்லும் படி கூறியுள்ளார்.
தன்னிடம் பணம் இல்லை என கூறி SAC மறுக்கவே, பணமில்லாமல் காரை எடுத்துக் கொண்டு போகும் படி ஜெய்சங்கர் கூறியதாகவும், பணம் கிடைக்கும் போது கொடுத்தால் போதும் என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆறு மாத காலத்தில் மாதம் பத்தாயிரம் ரூபாய் வீதம், காருக்கான கடனையும் SAC கழித்துள்ளார்.