கொட்டாச்சியில் இசையமைத்து புதுமை செய்தவர்.. பூவே உனக்காக படத்துல இவர கவனிச்சு இருக்கீங்களா?

By Bala Siva

Published:

பூவே உனக்காக என்ற திரைப்படம் நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்த படம் என்று நிச்சயம் சொல்லலாம். இந்த திரைப்படத்தில் வீடு தேடிக் கொண்டிருக்கும் போது பாடகராக ஊரையே தூங்க விடாமல் அலற வைக்கும் கதாபாத்திரத்தில் மீசை முருகேசன் என்பவர் பாடகர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

நிச்சயம் அந்த கதாபாத்திரத்தை படம் பார்த்த யாராலும் மறந்து விட முடியாது. இப்படி பல நடிப்புத் திறன் மற்றும் இசைக் கலைஞராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் தான் மீசை முருகேசன். இவர் இசைத்துறையில் பல சாதனைகள் மற்றும் புதுமைகளை செய்ததுடன் தேங்காயின் கொட்டாச்சியிலும் இசையை உருவாக்கி புரட்சி செய்தவர்.

இவர் சிறு வயதிலேயே கொட்டாச்சி என்று கூறப்படும் தேங்காய் ஓட்டின் மூலம் இசையை உருவாக்குவதில் பிரபலமாக இருந்தார். அந்த காலத்தில் கே பி சுந்தராம்பாள், எம் கே தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட கலைஞர்களின் படங்களில் அவர் பணிபுரிந்துள்ளார்.

குறிப்பாக நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற த்ரில் காட்சிகளுக்கு கொட்டாச்சி மூலம் இசையமைத்தவர் இவர்தான். அதேபோல் எம்ஜிஆர் நடித்த ‘அன்பே வா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ என்ற பாடலில் குதிரை கால்களின் ஓசைக்கு இசைத்தவர் இவர்தான். இவர் சுமார் 25 இசைக்கருவிகளை வாசிக்கும் திறமை வாய்ந்தவராக இருந்ததுடன பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.

meesai murugesan1

குறிப்பாக எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா, குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். மீசை முருகேசன் இசையமைப்பாளராக மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்  சுமார் 100 படங்களுக்கு மேல் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

கடந்த 1985 ஆம் ஆண்டு சிவக்குமார் நடித்த ’சுகமான ராகங்கள்’ என்ற திரைப்படத்தில் தான் மீசை முருகேசன் அறிமுகமானார்  அதன் பிறகு அவர் ’ஆண் பாவம்’ ’தழுவாத கைகள்’ ’ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ ’ஊமை விழிகள்’ போன்ற படங்களில் நடித்தார். நதியா நடித்த ‘உயிரே உனக்காக’  படத்தில் முருகேசன் முதலியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

meesai

இதனை அடுத்து ’சின்னத்தம்பி பெரியதம்பி’ ’மங்கை ஒரு கங்கை’ ’உன்னால் முடியும் தம்பி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். சகலகலா சம்பந்தி என்ற படத்தில் பாடி பில்டராகவும் புதுப்பாடகன் என்ற படத்தில் குஞ்சிதபாதம் என்ற கேரக்டரிலும் நடித்திருப்பார்.

2008 ஆம் ஆண்டு சேரன் நடித்த ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு அவர் வேறு திரைப்படங்களை நடிக்கவில்லை.  நடிகர் மற்றும் இசைக்கலைஞர் மீசை முருகேசன் கடந்த 2014 ஆம் ஆண்டு உடல் நல குறைவு காரணமாக காலமானார். 85 ஆவது வயதில் அவர் காலமான நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.