உனக்கு சினிமா தான் கரெக்ட்.. டப்பிங் கலைஞரின் வாழ்க்கையையே மாற்றிய பாலச்சந்தர்..

By Bala Siva

Published:

பாடகராக வேண்டும் என்ற கனவுடன் சினிமாவுக்குள் நுழைந்து நடிகராகவும் மாறி இருந்தவர் அச்சமில்லை கோபி. தூர்தர்ஷனில் நாடகம் ஒளிபரப்பான போது தொலைக்காட்சியின் முதல் நடிகர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இவர் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அச்சமில்லை அச்சமில்லை என்ற திரைப்படத்தில் டப்பிங் கலைஞராக அறிமுகமானதால் அவருக்கு அச்சமில்லை கோபி என்ற பெயரும் உருவானது.

கோபாலகிருஷ்ணன் என்ற இயற்பெயரை கொண்ட அச்சமில்லை கோபி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ரயில்வேயில் வேலை பார்த்த அதிகாரி. சிறு வயதில் நன்றாக படித்த இவரை பெரிய அதிகாரியாக ஆக்க வேண்டும் என்பதுதான் அவரது தந்தையின் கனவாக இருந்தது. ஆனால் கோபி இளையராஜாவின் குரூப்பில் இணைந்து பாடல்களை பாட வேண்டும் என்று விரும்பினார். அதே வேளையில், அவருக்கு வி குமார் உள்பட ஒரு சில இசையமைப்பாளர்களிடம் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அவர் நடிகராகவும் ரூட்டை மாற்றி எடுத்த நிலையில், திரையுலகில் பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். படிக்காத பண்ணையார், வேலைக்காரன், புதியவன், இவர்கள் இந்தியர்கள், ஊரை தெரிஞ்சுகிட்டேன், நல்லவன்,  காலையும் நீயே மாலையும் நீயே, வேடிக்கை என் வாடிக்கை, வரவு நல்ல உறவு, பணக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

achamillai gopi1

இவர் நடித்த பெரும்பாலான தொலைக்காட்சி தொடர்கள் அனைத்துமே தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடர்கள் தான். தனது நடிப்பால் அச்சமில்லை கோபி பார்வையாளர்களையும் கவர்ந்திருந்தார். அக்ஷயா, எங்கே பிராமணன், வண்ணக் கோலங்கள்,  மாங்கல்யம், சொர்க்கம், தீர்க்க சுமங்கலி, உள்பட பல சீரியல்களில் நடித்தார்.

தனியார் தொலைக்காட்சிகள் வந்த பிறகும் அவர் ஒரு சில சீரியல்கள் நடித்திருந்தார். மேலும் இவர் ஏராளமான நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். ரவீந்திரன், பாலகிருஷ்ணா, கோவிந்தா, ரகுமான், விஜயராகவன், அருண்பாண்டியன், நாகார்ஜுனா, ஜெகபதி பாபு, சுரேஷ் கோபி, அனுபம் கெர், நசுருதீன் ஷா, நாசர் உள்பட பல முக்கிய நடிகர்கள் அந்த லிஸ்டில் அடக்கம்.

ஆரம்ப கட்டத்தில் ஏஜிஎஸ் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவர்  மத்திய அரசு அலுவலர்கள் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஊக்குவிக்கப்பட்டதால் அவர் நாடகங்களில் நடிக்க தொடங்கினார். இவரது நாடகத்தை பாலச்சந்தர் பார்த்தபோது தான் நீ ஏன் அலுவலகத்தில் வேலை செய்கிறாய், சினிமாவுக்கு வந்துவிடு என்று உற்சாகம் கொடுத்ததை அடுத்து சினிமாவில் வந்தார்.

பொய்க்கால் குதிரை படத்தில் ரவீந்தருக்கு டப்பிங் பேசிய கோபி, அதன் பிறகு தில்லுமுல்லு, கல்யாண அகதிகள், அச்சமில்லை அச்சமில்லை, வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் டப்பிங் பேசி உள்ளார். கிட்டத்தட்ட தமிழில் மட்டும் இவர் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அச்சமில்லை கோபி ஒரு தொழிலதிபராக இருக்கிறார். வெளிநாடுகளில் காற்றாலை மின்சார தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றது. இவருக்கு இரண்டு மகள்கள், இருவருமே கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்து தற்போது இருவருமே வெளிநாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.