தமிழ் திரை உலகில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் படங்கள் உள்பட பல திரைப்படங்கள் இயக்கிய ஏசி திருலோகசந்தர் ஒரு கட்டத்தில் கடன் அதிகமாகிவிட்டதை அடுத்து அந்த கடனிலிருந்து மீள்வதற்காக ‘பத்ரகாளி’ என்ற சொந்த படத்தை எடுத்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் திடீரென இந்த படத்தின் நாயகி ராணி சந்திரா விமான விபத்தில் இறந்து விட்டதால் அவர் மிகவும் சோர்ந்து போனார். அதன்பின் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பதை பார்ப்போம்.
எழுத்தாளர் மகரிஷி எழுதிய கதையை வாங்கி ‘பத்ரகாளி’ என்ற டைட்டிலில் திரைப்படத்தை இயக்க திருலோகசந்தர் முடிவு செய்தார். ஆரூர் தாஸ் வசனம் எழுத, இசைஞானி இளையராஜா இசை அமைக்க, சிவகுமார் மற்றும் ராணி சந்திரா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, பவானி, சுகுமாரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
எம்ஜிஆர் – தேவிகா இணைந்து நடித்த ஒரே படம்.. எம்ஜிஆர் – கமல் இணைந்து நடித்த ஒரே படமும் இதுதான்..!
மனநலம் பாதிக்கப்பட்ட நாயகி தனது நான்கு வயது குழந்தையை யாரும் தொடக்கூடாது என்று கூச்சல் போட்டு அந்த குழந்தை சாவதற்கு தற்செயலாக காரணமாவார். நடு இரவில் குழந்தையை குளிப்பாட்டுவார், குழந்தை அழும்போது முதுகில் அடிப்பார், மூன்று சக்கர சைக்கிளில் குழந்தையை உட்கார வைத்து சுத்தி விடுவார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த குழந்தை கிணற்றில் விழுந்து இறந்து விடும்.
மனநிலை சரியில்லாத மனைவியை கட்டிக் கொண்ட நாயகன் மிகுந்த சிரமத்தில் இருப்பார். அதனை அடுத்து அவருடைய அம்மாவின் வற்புறுத்தல் காரணமாக இரண்டாவது திருமணம் செய்து கொள்வார். நாயகனின் இரண்டாவது மனைவியையும் முதல் மனைவி மனநிலை சரியில்லாத காரணத்தினால் தாக்குவார். அதன் பிறகுதான் அவளை நிரந்தரமாக பிரிய வேண்டிய நிலை நாயகனுக்கு ஏற்படும்.
இந்த நிலையில் விவாகரத்துக்கு பின் நாயகியை தற்செயலாக பார்க்கும் நாயகன், அவரிடம் அமைதியாக பேசுவார். நான் என் அம்மாவின் தொல்லை தாங்க முடியாமல் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என்றும் உன் மீது இன்னும் நான் அன்பு வைத்திருக்கிறேன் என்றும் கூறுவார். மேலும், வா உன்னை வீட்டில் இறக்கி விடுகிறேன் என்று சொன்னபோது நீங்கள் உங்கள் வழியில் போங்கள், நான் என் வழியில் போகிறேன் என்று பேசிவிட்டு சென்று விடுவார்.
சிவாஜிக்கு ‘நவராத்திரி’.. எம்ஜிஆருக்கு ‘நவரத்தினம்’.. ஏ.பி.நாகராஜனின் 2 வித்தியாசமான படங்கள்..!
இந்த நிலையில்தான் சட்டத்தின் பிடியில் சிக்காத ஒரு கொலைகாரனை தற்செயலாக நாயகி சந்திப்பார். அந்த கொலைகாரனை பத்ரகாளியாக மாறி ஆவேசமாக தாக்கி அந்த கொலைகாரனின் கொடும் செயலுக்கு முடிவு கட்டுவார். குடும்ப பெண்ணாக, மனநிலை சரியில்லாதவராக இருந்த ஒரு பெண் பத்ரகாளியாக மாறி எப்படி சமூகத்தை சீரழிக்கும் ஒரு கொலைகாரனின் கொடுஞ்செயலை முடிவுக்கு கொண்டு வந்தார் என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக இருக்கும். இந்த படத்தின் நாயகனாக சிவகுமார் மற்றும் நாயகியாக ராணி சந்திரா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எடுப்பதற்கு முன்பே நாயகி ராணி சந்திரா விமான விபத்தில் இறந்து விட்டார். இதனால் ஏசி திருலோகசந்தர் இடிந்துவிட்டார். கிட்டத்தட்ட படம் முடிவடையும் நிலையில் இப்படி ஆகிவிட்டதே என்று அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து சிவகுமார் உள்ளிட்டோர் அவருக்கு ஆறுதல் கூறி படத்தை முடிக்க ஏதாவது ஒரு வழியை கண்டுபிடிங்கள் என்று கூறினர்.
அப்போதுதான் ஒரு திரைப்படத்தில் காபரே டான்ஸ் ஆடிய ஒரு பெண் கிட்டத்தட்ட ராணிசந்திரா போலவே இருப்பது அவருக்கு ஞாபகம் வந்தது. இதனை அடுத்து அந்த பெண்ணை அழைத்து வந்து சில டெக்னிக் ஷாட்டுகளை எடுத்து, லாங் சாட்டுகளை மட்டுமே வைத்து கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து முடித்திருப்பார். படம் பார்த்த யாருமே கிளைமாக்ஸ் காட்சியில் நடித்தது வேறு ஒரு நடிகை என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
டெக்னாலஜி அதிகமாக இல்லாத அந்த காலத்திலேயே திருலோகசந்தர் மிக திறமையாக சில காட்சிகளை எடுத்து அந்த படத்தை வெற்றி படமாக்கினார். படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஒரே படத்தில் திருலோகசந்தரின் கடன் அனைத்துமே தீர்ந்து விட்டது. ஆனால் இந்த படத்தின் நாயகியின் மறைவு அவரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது.
இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஒருசில ஆண்டுகள் கழித்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெற்றி பெற்றது.
இந்த படத்தின் வெற்றிக்கு அப்போது வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இருந்த இளையராஜாவும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது. குறிப்பாக, ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ என்ற பாடல் இன்றும் பிரபலமாக உள்ளது. அதேபோல், ‘கேட்டேளா அங்கே’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகியது.
சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?
ஒரு திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு நட்சத்திரம் இறந்துவிட்டால் எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை யோசித்து மிக திறமையாக சமாளித்து படத்தை வெளியே கொண்டு வந்த திருலோகசந்தரின் திறமையை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.