நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது திரையுலக வாழ்வில் எத்தனையோ கேரக்டரில் நடித்திருந்தாலும் அவரை ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிக்க வைத்த ஒரே இயக்குனர் ஏ எஸ் பிரகாசம் தான். சிவாஜி கணேசன் நினைத்து கூட பார்க்காத கேரக்டரில் அதாவது இயக்குநர் கேரக்டரில் அவரை ஏஎஸ் பிரகாசம் நடிக்க வைத்தார். அந்தப் படம் தான் சாதனை.
கடந்த 1986 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி சாதனை திரைப்படம் வெளியானது. சிவாஜி கணேசன் ஜோடியாக கே.ஆர். விஜயா நடித்திருக்க, இந்த படத்தில் பிரபு சிவாஜியின் மகனாக நடித்திருப்பார். மேலும் முக்கிய கேரக்டரில் நளினி நடித்திருப்பார்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்த படத்தில் ஏழு பாடல்கள் உண்டு. அதுமட்டுமின்றி ஒரு காட்சியில் இளையராஜா நடித்திருப்பார். இந்த படத்தின் இங்கே நான் கண்டேன் என்ற பாடல், ஓ வானம்பாடி என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர் – சிவாஜி..!
இந்த படத்தின் கதையின்படி இயக்குனரான சிவாஜி கணேசன் தெருவில் போகும் ஒரு பிச்சைக்காரியான நளினியை தனது படத்தின் நாயகி ஆக்குவார். அவர் மிகச்சிறந்த நடிகையாக ஒளிர்ந்து கொண்டு வரும் நிலையில் தான் தனது சாதனை படம் ஒன்றை எடுக்க அவர் முடிவு செய்வார்.
அந்த படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்த போதுதான் சிவாஜியின் அனைத்து படங்களிலும் நளினியே நடிக்கின்றாரே என அவரது மனைவி கேஆர் விஜயா சந்தேகப்படுவார். தன்னால் தனது இயக்குனரின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக நளினி திரை உலகை விட்டு வெளியேறி விடுவார்.
இதனை அடுத்து நீண்ட வருடங்களுக்கு கழித்து சிவாஜிகணேசன் மீண்டும் அதே சாதனை படத்தை எடுக்க முயற்சிக்கும் போது தனது மகன் பிரபுவை அவர் நாயகன் ஆக்குவார். அப்போது அவர் நாயகியை தேடிக் கொண்டிருக்கும்போது தான் நளினியின் மகள் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆவார்.
அந்த படத்தில் பிரபு மற்றும் நளினியின் மகள் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் உண்மையிலேயே காதலிப்பார்கள். ஆனால் அந்த காதலுக்கு பெற்றோரிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்று தெரிந்த அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கும் ஒரு அதிர்ச்சி முடிவு தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.
இந்த படம் பாசிட்டிவ் ரிசல்ட்களை பெற்று மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் பல திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. சிவாஜி கணேசன் இதுவரை நடிக்காத இயக்குனர் கேரக்டரில் நடித்ததை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். ஒரு இயக்குனர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக அழகாக தனது நடிப்பில் வெளிப்படுத்தியிருப்பார்.
சிவாஜியின் நவராத்திரி படத்தை வைத்து தான் எம்.ஜி.ஆருக்கு நவரத்தினம் படம் எடுத்த இயக்குனர்..
போதும் விடுங்க என்ற டயலாக்கை அவர் நளினிக்கு விதவிதமாக நடித்து காட்டும் காட்சியை ரசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். சிவாஜிக்கு அடுத்தபடியாக நளினி சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். நளினி திரையுலக வாழ்வில் இந்த படம் ஒரு அத்திப்பூ என்று சொன்னால் அது மிகை ஆகாது. மொத்தத்தில் சாதனை திரைப்படம் வசூலிலும் சாதனை செய்தது.