1990-2000 காலகட்டங்களில் குஷ்பு, மீனா, ரேவதி என நடிகைகள் தங்களது அழகாலும் நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கட்டிப் போட தனது கண்களாலேயே ரசிகர்களைக் கிறங்கடித்தவர் நடிகை சிவரஞ்சனி. உமா மகேஸ்வரி என்னும் பெயர் கொண்ட சிவரஞ்சனி கார்த்திக் அவரது பெயரிலிலேயே நடித்த மிஸ்டர் கார்த்திக் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தைத் தயாரித்தது நடிகர் சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் சுமாராக ஓடினாலும் இப்படத்தின் ஹீரோயினான சிவரஞ்சனி இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். அழகான பூனைக் கண்களும், ரெட்டை ஜடையும், தாவணியும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சிவரஞ்சனி கனவு தேவதையாகத் திகழ்ந்தார். இன்றும் ஏதோ ஒரு பேருந்தில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தாலாட்டு படத்தில் அர்விந்த் சாமியுடன் இவர் குத்தாட்டம் போட்ட மெதுவா தந்தி பாட்டுக்கு தாளம் போடாத இளைஞர்களின் கைகளே இல்லை.
கேப்டன் விஜயகாந்த்தைப் பார்த்து அருண் விஜய் எடுத்த அதிரடி முடிவு: மகிழ்ச்சியில் திளைத்த படக்குழு
தொடர்ந்து பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். முரளியுடன் இவர் நடித்த தங்கமனசுக்காரன் படம் பட்டிதொட்டியெங்கும் இவரைப் பிரபலப்படுத்தியது. இப்படத்தின் பாடல்கள் கிராமப்புறங்களில் இன்றும் திருவிழா, கல்யாண நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகிறது. தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்த சிவரஞ்சனி, தெலுங்கு சினிமா பக்கம் தாவினார். அதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் நடித்தார். நடிக்க வந்த 10 ஆண்டுகளுக்குள்ளாகவே 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
புகழின் உச்சியில் இருந்த போதே தெலுங்கு நடிகர் ஸ்ரீ காந்த்தை காதலித்துக் கரம் பிடித்தார். அதன்பின் நடிப்புக்கு 1998-ல் முழுக்குப் போட்டார். அதன்பின் சினிமாவை விட்டு அறவே ஒதுங்கிய சிவரஞ்சனி தற்போது ஆந்திராவில் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நடிகர் ஸ்ரீகாந்த் வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் திருப்பதியில் செய்தியாளர்களிடம் கேப்டன் விஜயகாந்த் மறைவு குறித்து இரங்கலும், அவருடன் தான் ராஜதுரை படத்தில் நடித்ததையும் நினைவு கூர்ந்து பேசினார் சிவரஞ்சனி. தற்போது இவர் தனது மகன் மற்றும் மகளை திரைத்துறையில் கால்பதிக்க முயற்சிகள் செய்து வருகிறார்.