60 ஆண்டுகள் சினிமாவில் சம்பவம் செய்தவர்.. நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் பெயரில் காக்கா இணைந்த கதை!

By Bala Siva

Published:

பொதுவாக சினிமாவில் தோன்றும் சில நடிகர்கள் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் அவர்கள் ஏற்றெடுத்த ஒரு சில கதாபாத்திரங்கள், காலம் கடந்து மனதில் நிலைத்து நிற்கும். அந்த வகையில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் பழம்பெரும் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன், உடல் நலம் பாதிக்கப்பட்டவராக மருத்துவமனையில் இருந்தபடி கேரம் போர்டு ஆடும் காட்சிகள் மற்றும் அவரது எமோஷனல் காட்சிகள் பலர் மனதையும் கரைய வைத்துள்ளது.

தமிழ் திரை உலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக இருந்த இவர், கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் நடிகராக ஜொலித்ததுடன் கலைவாணர், என்.எஸ். கிருஷ்ணன் முதல் கமல்ஹாசன், பிரபு உட்பட பல பிரபலங்களுடன் இவர் நடித்துள்ளார். கடந்த 1925 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர் காகா ராதாகிருஷ்ணன். இவர் சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்க தொடங்கினார். தனது திரையுலக வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

என் எஸ் கிருஷ்ணன் நடித்த நல்லதம்பி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் நடிகராக அறிமுகமானார். அறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் கேரக்டர் குறிப்பிடும் வகையில் இருந்தது.

kaka radhakrishnan2

இதனை அடுத்து மங்கையற்கரசி என்ற திரைப்படத்தில் நடித்தார். பி யு சின்னப்பா மற்றும் கண்ணாம்பாள் நடித்த இந்த படத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் ஒரு மரத்தில் ஏறி காக்கா பிடிப்பது போன்ற காட்சியில் நடித்திருப்பார். இதனால் அவரது பெயருடன் காக்கா என்ற வார்த்தையும் ஒட்டிக்கொண்டது.

1950ல் மற்றும் 60களில் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். பி யு சின்னப்பா, எம் கே தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட சிலரின் படங்களில் நடித்துள்ள ராதாகிருஷ்ணன், அதன் பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி உள்பட பலருடைய படங்களில் நடித்துள்ளார். ஆனால் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அதாவது 1963ஆம் ஆண்டுக்கு பின்னர் அவர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை.

தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ’குணா’ என்ற திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார். அதனை அடுத்து ’தேவர் மகன்’ படத்தில் சிவாஜி கணேசனின் சகோதரனாக நடித்து அசத்தி இருப்பார்.

kaka radhakrishnan1

அதன் பிறகு 90களில் ஓரளவுக்கு சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிரபுவின் வியட்நாம் காலனி, மிஸ்டர் மெட்ராஸ், அஜித் நடித்த பவித்ரா, விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, பிரபுதேவா நடித்த மனதை திருடிவிட்டாய் போன்ற படங்களில் நடித்தார். கடந்த 2000 ஆண்டு ’என் உயிரினும் மேலான’ என்ற திரைப்படத்தில் ஜீவாவின் தாத்தாவாக நடித்திருப்பார்.

காகா ராதாகிருஷ்ணன் 2012 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி தனது 86வது வயதில் வயது முதிர்வு காரணமாக காலமானார். கிட்டத்தட்ட 60 வருடங்கள் திரையுலக சேவை செய்த காகா ராதாகிருஷ்ணன் அவர்களின் நடிப்பு ரசிகர்கள் மனதை விட்டு நீங்காது என்பது குறிப்பிடத்தக்கது.