3 மனைவி, 7 குழந்தைகள்… சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோக்கள் வியக்கும் ஹீரோவாக வாழ்ந்த டி. எஸ் பாலையா குறித்த பல தகவல்கள்!

Published:

ஒரு படத்தின் கதாநாயகன் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவருடன் இணைந்து நடிக்கக் கூடிய வில்லன் நடிகரோ அல்லது குணச்சித்திர நடிகரோ ஹீரோக்களுக்கு ஈடுகொடுத்து நடிக்கும் போது தான் அந்த காட்சிகள் சிறப்பாக பேசப்படும்.

வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் அதை சரிவிகித நகைச்சுவையோடு கலந்து கொடுத்து தமிழ் திரை உலகில் கொடிகட்டி பறந்த நடிகர் பாலண்ணா என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் டி.எஸ் பாலையா. கதாநாயகன், வில்லன், காமெடியன், குணச்சித்திரம் என எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர் டி.எஸ். பாலையா.

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக மாறும் நடிகர்களுக்கு முன்னோடி இவர் தான். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூண்டாங்கோட்டை என்ற கிராமம் தான் டி.எஸ். பாலையாவின் சொந்த ஊரு ஆகும். சின்ன வயதில் சராசரிக்கும் சற்று குறைவான உயரத்தில் இருந்த பாலையாவை சக நண்பர்கள் கேலி செய்துள்ளனர்.அதனால் எல்லாரும் புகழ கூடிய வகையில் வாழ்க்கையில் உயர வேண்டும் என சின்ன வயதிலே நினைக்க தொடங்கியுள்ளார்.

அப்போது ஒருநாள் அவர் ஊருக்குள் சர்க்கஸ் நிகழ்ச்சி நடக்க, அதை பார்த்த பாலையா சர்க்கஸ் கலைஞர்களின் ஒவ்வொரு சாகசமும் முடிந்ததும் ரசிகர்களிடையே பலத்த கைதட்டலையும் கவனித்துள்ளார். இது அவரின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனே சர்க்கஸ் நடத்துபவரிடம் சென்று தனக்கு ஏதாவது வேலை உள்ளதா என பாலையா கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இல்லை என மறுத்துள்ளனர்.

எப்படியாவது ஒரு சர்க்கஸ் கம்பெனியில் சேர வேண்டும் என முடிவு எடுத்த பாலையா மதுரையில் தனக்கு தெரிந்த சர்க்கஸ் நிறுவனத்தில் சேர்த்து விடுவதாக நண்பர் ஒருத்தர் ஆசை வார்த்தை கூற அவர் உடனே சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக்கிட்டு மதுரைக்கு சென்றுள்ளார். நள்ளிரவு என்பதால் பாலையாவும் அவர் நண்பரும் ரயில் நிலைய பிளாட்பாரத்திலேயே தூங்கியுள்ளனர். ஆனால் காலையில் எழுந்த பாலையாவுக்கு அதிர்ச்சி, கூட வந்த நண்பனும் இல்ல, கொண்டுவந்த பணப் பையும் இல்லை.

என்ன செய்வது என்று அறியாது இங்கும் அங்கும் அலைந்து திரிந்து ஒரு வழியாக ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார் பாலையா. அவருடைய லட்சியமாக இருத்த சர்க்கஸில் சேர முடியாவிட்டாலும் பரவில்லை ஏதாவது ஒரு துறையில் சேர்ந்து புகழ் பெற நினைத்து நாடகத்தில் சேர முடிவெடுத்தார். மதுரையில் புகழ் பெற்ற பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர நினைத்தார்.ஆனால் பாய்ஸ் கம்பெனியில் இருந்து விலகி பல நடிகர்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அங்கு பாலையாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தவர் கந்தசாமி முதலியார். அவர் வசனம் எழுதிய சதிலீலாவதி படத்தில் பாலையாவுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எலி சார் டங்கன் இயக்கிய அந்தப் படத்தில் முதல் முதலாக வெள்ளிதிரையில் வில்லனாக அறிமுகமானார் பாலையா.

சதிலீலாவதி பாலையாவின் திரை வாழ்க்கையில ஆச்சரியமான தொடக்கம். காரணம் எம்ஜிஆர், எம். கே ராதா,கே. எ தங்கவேலு என அனைத்து நடிகர்களுக்கும் அறிமுக படமும் அதுதான். முதல் படத்திலேயே நல்லதொரு பேரை வாங்கினார் டி எஸ் பாலையா. மேலும் பி யு சின்னப்பா நடித்த ஆரியமாலா, ஜெகதல பிரதாபம் போன்ற படங்களிலும் வில்லனாக நடித்தார் பாலையா. இளம் வயதில் பல கஷ்டங்களை அனுபவித்த பாலையா நடிகராக மாறிய பின் ஓரளவுக்கு செழிப்பாக மாறினார்.

குறிப்பாக திருமண விஷயத்தில் கொஞ்சம் தாராளமாக இருந்தார். மூன்று திருமணங்கள் செய்து விட்டார். இப்படி தொடர் திருமணம் மற்றும் 7 குழந்தைகள் என இருந்த அவருடைய வாழ்வில் ஒரு கட்டத்தில் வெறுப்பு ஏற்பட்டு சாமியாராக போக முடிவு செய்து தலைமறைவாக வாழ்ந்துள்ளார்.

சினிமாவில் பெரும் புகழோடு இருந்த ஒருவருடைய திடீர் தலைமறைவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாண்டிச்சேரிக்கு பட வேலையாக சென்றிருந்த மாடன் தியேட்டரின் உரிமையாளர் டி. ஆர் சுந்தரம் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த சாமியாரை பார்த்து பாலையா மாதிரி தெரிகிறது என அவரை கண்டுபிடித்து அவரை வலுக்கட்டாயமாக தன்னோடு காரில் அழைத்து சேலம் வந்து சேர்ந்தார்.

அடுத்த நாளே படத்தில் நடிக்க வைத்துள்ளார். அதை தொடர்ந்து மாடர்ன் தியேட்டர் தயாரிப்பில் சித்ரா படத்தில் பாலையா கதாநாயகனாகவும் நடித்துள்ளார். வீரா படத்தில் எம்ஜிஆருக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்து கல்கத்தாவுக்கு படப்பிடிப்புக்காக சென்ற போது பாலையாவும் அங்கு வந்திருந்ததால், எம்ஜிஆர்க்கு ஒதுக்கப்பட்ட அந்த பாத்திரம் பாலையாவுக்கு சென்றுள்ளது. எம்ஜிஆருக்கு பாலையா கூட வரக்கூடிய சின்ன கதாபாத்திரம் கிடைத்தது.

சிவாஜியின் நவராத்திரி படத்தை வைத்து தான் எம்.ஜி.ஆருக்கு நவரத்தினம் படம் எடுத்த இயக்குனர்..

அந்த கதாபாத்திரத்தில் அன்று பாலையா நடித்த மாதிரி என்னால் நிச்சயமாக செய்திருக்க முடியாது என நான் ஏன் பிறந்தேன் என்கிற சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் எம்ஜிஆர். மணமகள் படத்தில் பாலையாவின் அற்புதமான நடிப்பை பாராட்டி தன்னுடைய விலை உயர்ந்த காரை அவருக்கு பரிசளித்தார் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன். இப்படி நடிகர்கள் விரும்பும் நடிகராக இருந்தவர் பாலையா.

அதை தொடர்ந்து வந்த படங்களில் எம்ஜிஆர், சிவாஜி, எஸ் எஸ் ஆர் செய்த பகுத்தறிவு கதாபாத்திரங்களுக்கு முன்னோடியாக இருந்தது, இவர் நடித்த வேலைக்காரி என்ற படத்தில் நடித்த பகுத்தறிவு கதாப்பாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலையா நடித்த முக்கிய படங்களில் ஒன்று அவர் நாகேசுக்கு தந்தையாக நடித்த காதலிக்க நேரமில்லை படம். நாகேஷ் ஒரு பேய் பட கதையை விவரிக்க அதற்கு பாலையா தரும் ரியாக்ஷன் இன்றைக்கும் பேசப்பட்டு வருகிறது. காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் செய்ய நினைத்த மனோபாலா அதற்கான உரிமத்தை வாங்க இயக்குனர் ஸ்ரீதரை சந்தித்து பேசினார்.

ஹீரோவாக யார் நடிக்க உள்ளதாக ஸ்ரீதர் கேட்டுள்ளார். அதற்கு முத்துராமன், ரவிச்சந்திரன் கேரக்டருக்கு இரண்டு இளம் ஹீரோக்கள் நடிக்க வைப்பதாக மனோபாலா கூறினார். ஹீரோவா யாரை நடிக்க வைக்க போகிறாய் என மறுபடியும் கேட்டுள்ளார் ஸ்ரீதர். ஒன்னும் புரியாத மனோபாலாவிடம் டேய் டி எஸ் பாலையா கேரக்டருக்கு யார் நடிக்கிறார் என கேட்டுள்ளார். அவர் அளவு நடிக்கிறதுக்கு ஆள கொண்டு வா ரீமேக் ரைஸ் தரேன் என கூறியுள்ளார். பாலையாவை போல நடிக்கும் நடிகரை கண்டுபிடிக்க முடியாது காரணம் காலத்தை வென்ற மகத்தான கலைஞன் டி எஸ் பாலையா.

 

மேலும் உங்களுக்காக...