2025-ஆம் ஆண்டு இந்திய திரையுலகிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாக அமைந்தது. பிரம்மாண்டமான வெளியீடுகள், அரசியல் மாற்றங்கள் மற்றும் மறக்க முடியாத தருணங்கள் என 10 முக்கிய நிகழ்வுகள் இதோ:
1. தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம்
2025-ஆம் ஆண்டின் மிகப்பெரிய பேசுபொருள் நடிகர் விஜய் தான். தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தியதுடன், தனது கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்தார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போதே அவர் விலகி அரசியலுக்கு சென்றது இந்திய அளவிலான செய்தியானது.
2. அஜித்தின் 2 படங்கள் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி அடுத்தடுத்து ரிலீஸ்..!
பல கால காத்திருப்புக்கு பிறகு, அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் 2025-ல் வெளியாகின. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரே ஆண்டில் அஜித்தின் இரண்டு படங்கள் வெளியானது அவரது ரசிகர்களை பெரு உற்சாகத்தில் ஆழ்த்தியது. விடாமுயற்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் குட் பேட் அக்லி வசூலில் சாதனை செய்தது.
3. ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜின் ‘கூலி’
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. இருப்பினும் இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறாதது ரசிகர்களுக்கும், படக்குழுவினர்களுக்கும் ஏமாற்றம் தான்.
4. கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ (Thug Life)
மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு உருவான ‘தக் லைஃப்’ திரைப்படம் 2025-ல் வெளியானது. சிம்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இப்படம் தொழில்நுட்ப ரீதியாக இந்தியச் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. ஆனால் வசூலில் மிகப்பெரிய பிளாப் திரைப்படம்.
5. மலையாள திரையுலகின் ஆதிக்கம்.
கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோக், மோகன்லால் நடித்த எம்புரான் 2, மோகன்லால் நடித்த ‘துடரும்’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சாதனை செய்தது.
6. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டமான ஆக்ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான ‘SSMB 29’ படப்பிடிப்பு 2025-ல் தொடங்கியது. ஹாலிவுட் தரத்தில் உருவாவதால், இந்திய சினிமாவே இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து நின்றது.
7. விஷால் – சாய் தன்ஷிகா புதிய பந்தம்
திரையுலகின் நீண்ட கால ‘பேச்சிலராக’ இருந்த நடிகர் விஷால், இந்த ஆண்டு தனது திருமண அறிவிப்பின் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். நடிகை சாய் தன்ஷிகாவுடன் அவருக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ‘யோகிடா’ திரைப்பட விழாவின் போது, தாங்கள் இருவரும் மணம் முடிக்க போவதை முறைப்படி அறிவித்தனர். விஷாலின் பிறந்த தினமான ஆகஸ்ட் 27 அன்று இவர்களது நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்றது. இவர்களது திருமணம் 2026-ஆம் ஆண்டு கோலாகலமாக திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
8. போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர்கள்
இந்த ஆண்டு கோலிவுட்டை உலுக்கிய ஒரு கசப்பான சம்பவம், போதைப்பொருள் தொடர்பான கைது நடவடிக்கை ஆகும். நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கொக்கைன் பயன்படுத்திய புகாரில் சிக்கி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், நீண்ட விவாதங்களுக்கும் வழிவகுத்தது.
9. மறைந்த கலைத்துறை ஜாம்பவான்கள்
2025-ஆம் ஆண்டு பல மூத்த கலைஞர்களை திரையுலகம் இழந்தது. குணச்சித்திர நடிகர் ராஜேஷ், ‘அபிநய சரஸ்வதி’ என போற்றப்படும் பழம்பெரும் நடிகை பி. சரோஜா தேவி, ஏவிஎம் நிறுவனத்தின் தூணாக விளங்கிய தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் ஆகியோர் இந்த ஆண்டில் காலமானார்கள். இவர்களின் மறைவு தமிழ் சினிமாவிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
10. லண்டனில் இளையராஜாவின் சிம்பொனி சாதனை
இசைஞானி இளையராஜா தனது இசை பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லை எட்டினார். இவர் உருவாக்கிய ‘Valiant’ எனும் சிம்பொனி இசை கோர்ப்பு லண்டனில் மிகப்பிரம்மாண்டமாக அரங்கேற்றப்பட்டது. இந்த உலகளாவிய சாதனையை போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு அவருக்கு சிறப்பு பாராட்டு விழாவினை நடத்தி கௌரவித்தது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

