தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் பல நட்சத்திரங்கள் பயன்படுத்தப்படாமல் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெறாமல் இருந்த கலைஞர்கள் உண்டு. அந்த வகையில் மிக முக்கியமானவர் பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ என்ற ஒரே திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நடிகர் சத்தியஜித். அதன் பிறகு எந்த படத்தில் பெரிய வாய்ப்பு கிடைக்காமல் இன்று வரை அவருடைய திறமைக்கு சரியான மதிப்பு கொடுக்காமல் இருப்பது துரதிஷ்டமாக கருதப்படுகிறது.
16 வயதினிலே திரைப்படம் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படங்களில் மிக முக்கியமான படைப்பாகும். தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றெடுத்த இந்த திரைப்படத்தில் மயிலு என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீதேவியை காதலிக்கும் டாக்டர் கதாபாத்திரத்தில் வருபவர் தான் நடிகர் சத்தியஜித்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சத்யஜித், கடந்த 1959 ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயதிலேயே கலையின் மீது ஆர்வம் கொண்ட அவர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால் அவர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் சினிமா பக்கம் போவதையும் அவருடைய பெற்றோர் விரும்பவில்லை.
இதையடுத்து வேறு வழியில்லாமல் பெற்றோர் சொன்ன வேலையை பார்த்துக் கொண்டிருந்த சத்யஜித், ஒரு கட்டத்தில் வீட்டின் எதிர்ப்பை மீறி சினிமாவில் சேர வேண்டும் என்பதற்காக சென்னை வந்தார். வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் சென்னை வந்த அவர் திரைப்பட பயிற்சி கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பயின்றார். பெற்றோர் ஒரு கட்டத்தில் தேடி அவரை வீட்டுக்கு வருமாறு அழைத்தபோது வர முடியாது, நான் சினிமாவில் சாதிப்பேன் என்று கூறினார்
இந்த நிலையில் திரைப்பட பயிற்சி கல்லூரியில் பயின்ற போது அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக கடந்த 1977 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் கமல்ஹாசன் நடித்த ’நான் பிறந்த மண்’ என்ற படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் ஒரு கேரக்டர் அவருக்கு கிடைத்தது. ஆனால் அந்த படத்தின் மூலம் அவரை யாராலும் அடையாளம் காணப்படவில்லை.
இந்த நிலையில் தான் திரைப்பட பயிற்சி கல்லூரியில் அவர் முதல் மாணவராக தங்க பதக்கம் பெற்றார். அது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியான போது தான் இயக்குனர் பாரதிராஜா தனது 16 வயதினிலே டாக்டர் கேரக்டருக்கு அவர் சரியாக இருப்பார் என்று முடிவு செய்தார். அவரை நேரில் பார்த்தபோது தான் கற்பனையில் செய்து வைத்திருந்த டாக்டர் கேரக்டரை நேரில் பார்த்தது போல் இருந்ததாக கூறி அவரை அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.
பதினாறு வயதில் இருக்கும் ஸ்ரீதேவியை காதலித்து கைவிட்ட ஒரு விதமான வில்லன் கேரக்டரில் அவர் சிறப்பாக நடித்திருப்பார் என்பதும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த சில காட்சிகள் அந்த படத்தின் ஹைலைட்டான காட்சிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் படத்திலிருந்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வித்தியாசமான டயலாக் டெலிவரி செய்த சத்யஜித்தை ரசிகர்களுக்கு பிடித்து விட்டது. இவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பெரிய நடிகராக வருவார் என்று ஊடகங்களும் விமர்சனம் எழுதின.
ஆனால் 16 வயதினிலே படத்திற்கு பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் எந்த கேரக்டரும் தமிழ் சினிமா இயக்குனர்கள் கொடுக்கவில்லை. ஏழாவது மனிதன், அறுவடை நாள், பிக்பாக்கெட் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தாலும் எந்த படமும் அவரை பதினாறு வயதினிலே போல் அடையாளம் காட்டவில்லை.
இதனால் ஒரு கட்டத்தில் டிவி சீரியலில் நடிக்க தொடங்கினார். கன்னடத்தில் சில படங்களில் நடித்தார். ஆனால் கடைசிவரை அவருக்கு திருப்புமுனையை கொடுக்கும் படம் கிடைக்கவில்லை என்பது துரதிஷ்டமான ஒன்று.
அதனால்தான் அவர் திருமணமாகி தன்னுடைய இரண்டு குழந்தைகளை சினிமா பக்கமே செல்லாமல் பார்த்துக் கொண்டார். அவருடைய மகன் மற்றும் மகள் இருவரும் தங்களது படிப்புக்கேற்ற நல்ல வேலையை தேடிக் கொண்டார்கள் என்பது அவருக்கு திருப்தியான ஒன்றாக இருந்தது.
16 வயதினிலே படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து, திறமை இருந்தும் இப்போதும் வரை தனது நடிப்பு தீனி கொடுக்கும் கேரக்டர் அவருக்கு கிடைக்கவில்லை. இனிமேல் கிடைத்தால் கூட நடிக்க தயாராக இருக்கிறார். இனிமேலாவது அவரை இயக்குனர்கள் பயன்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.