ஒவ்வொரு நடிகருக்கும் 100வது படம் என்பது முக்கியமான ஒன்று அவர்கள் கடந்து வந்த படங்களில் உச்சபட்சத்தை எட்டியதன் அடையாளம் என்பதே 100வது படம்.
தற்போதைய காலங்களில் முக்கிய ஹீரோக்களின் 100வது படம் வருவதென்பது குதிரைக்கொம்பான விசயமாக உள்ளது ஏனென்றால் இவர்கள் வருடம் ஒரு படம் அல்லது இரு படம் மட்டுமே நடிக்கிறார்கள் இவர்கள் 100வது படத்தை எட்ட சில வருடங்கள் ஆகும் இப்போதுதான் அஜீத், விஜய் போன்ற நடிகர்கள் 60 சீரிஸில் நின்று கொண்டிருக்கிறார்கள் இவர்கள்தான் தற்போதைக்கு சீனியர் நடிகர்கள் இவர்கள் நடிக்க வந்து 25 வருடங்கள் ஆகி விட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அப்போதைய எம்.ஜி,ஆர், சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, முரளி, விஜயகாந்த், கார்த்திக் என பல முன்னணி நடிகர்கள் ஓரளவு 15 அல்லது 16 வருடங்களுக்குள் 100வது படத்தில் நடித்து முடித்துள்ளனர். அதிலும் நடிகர் கமல் மிக விரைவாக தனது ராஜபார்வை படத்தில் நடித்து முடித்தார். சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கிய இப்படம் போதிய கமர்சியல் அம்சங்கள் இல்லாமல் இருந்தாலும் இன்றும் பேசப்படும் படமிது அதனால் கமலின் 100வது படம் சிறப்பான படமே.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தனது 100வது படமாக அவரது ஆன்மிக குரு ஸ்ரீராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றில் நடித்தார் இது ரஜினி நடித்த வித்தியாசமான வேடம் என்ற வகையில் காலத்தால் அழியாத ஆன்மிக வரலாறு என்ற அடிப்படையிலும் இன்றும் பெருமை சேர்க்கும் படமாக உள்ளது. போதிய வசூலை இப்படம் பெறவில்லை என்பது வருத்தமான விசயம். இன்றும் போற்றப்படும் சிறப்பானதொரு படத்தில் தான் ரஜினி தனது 100வது படமாக தேர்ந்தெடுத்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ப்ளாக் ஒயிட் நடிகர்களில் சிவாஜி நடித்த நவராத்திரி வித்தியாசமான படம் இதுதான் இவரது 100வது படம்.இந்த படத்தில் ஒன்பது வேடங்களில் அந்தக்காலத்திலேயே கலக்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஏபி நாகராஜன் இயக்கி நடிகர் சிவாஜி கணேசனுக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் இது.
எம்.ஜி.ஆருக்கு நூறாவது படமாக ஒளிவிளக்கு படம் வந்தது சாணக்யா இயக்கத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலிதா நடிப்பில் வெற்றிப்படமிது. நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க உள்ளிட்ட பாடல் இப்படத்தில் பட்டைய கிளப்பியது
ஜெமினிக்கு சீதா என்ற படமும், ஜெய்சங்கருக்கு இதயம் பறக்கிறது என்ற படமும் 100வது படமாக வந்து வெளியுலகுக்கு தெரியாத 100வது படமாகி விட்டது.
முத்துராமனுக்கு பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த புன்னகை 100வது படமாக வந்தது இது பாலச்சந்தர் இயக்கத்தில் பரவலாக மக்களால் பேசப்பட்ட படம் ஆகும்.
80களில் நடிகர்களில் விஜயகாந்த்துக்கு கேப்டன் பிரபாகரன்,சத்யராஜுக்கு பிவாசு இயக்கத்தில் வாத்தியார் வீட்டு பிள்ளை,கார்த்திக்கிற்கு உள்ளத்தை அள்ளித்தா, பிரபுவுக்கு ஆர். வி உதயகுமார் இயக்கத்தில் ராஜகுமாரன் உள்ளிட்ட படங்கள் 100வது படங்களாக வந்தன.
இதில் 100வது படத்தில் எல்லா நடிகர்களையும் விட உச்சப்பட்ச வெற்றி பெற்றது கார்த்திக்கும் , விஜயகாந்தும்தான் இவர்களின் 100வது படங்கள்தான் தாறுமாறு ஹிட் ஆனது மற்ற நடிகர்களின் படங்கள் சுமாராகவே சென்றது. அல்லது விருது வாங்கும் ரேஞ்சில் நல்லதொரு கருத்தை சொன்ன படமாகவே மற்ற ஹீரோக்களுக்கு 100வது படமானது அமைந்தது.
கார்த்திக் நடித்த உள்ளத்தை அள்ளித்தா அவரே எதிர்பாராமல் மிகச்சிறந்த நகைச்சுவை ப்ளாக் பஸ்டர் படம் ஆனது இயக்கியவர் சுந்தர் சி. அது போல் விஜயகாந்த் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படமும் மிகச்சிறந்த ப்ளாக் பஸ்டர் படமாகும் இயக்கம் ஆர்.கே செல்வமணி ஆவார்.
இதில் பெரும் சோகம் நடிகர் முரளி 99 படங்கள் நடித்து முடித்து 100வது படமாக கவசம் என்ற படத்தில் நடிக்க இருந்தபோது முரளி திடீர் மரணம் அடைந்து விட்டதால் படம் ட்ராப் செய்யப்பட்டது.