ஒரு படத்தில் நடக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் கற்பனையாகவே இருக்கும். அது சினிமாவில் மட்டும் தான் நடக்கும். நிஜத்தில் நடக்காது என்பர். ஆனால், நிஜ வாழ்க்கை சம்பவங்களில் இருந்து பெரிதும் ஈர்க்கப்பட்டு சுவாரசியமான திரைக்கதையுடனும் படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.
சூரரைப் போற்று
2020ல் வெளியான சூரரைப் போற்று படம் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து அவராலேயே எழுதப்பட்ட சிம்பிளி பிளை என்ற நூலைத் தழுவி எடுக்கப்பட்டது.
கர்ணன்
2021ல் தனுஷ் நடிப்பில் வெளியான படம் கர்ணன். இது தூத்துக்குடி மாவட்டம், கொடியன்குளத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
2015ல் வெளியான படம் விசாரணை. முன்னாள் ஆட்டோ ஓட்டுனரான சந்திரகுமார் எழுதிய லாக் அப் என்ற நூலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இந்தப்படத்தில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் அவரது வாழ்க்கையில் உண்மையாக நடந்தவை.
அசுரன்
2019ல் வெளியான அசுரன் படம் தனுஷ் நடிப்பில் மெகா ஹிட் அடித்தது. இது பூமணி என்பவர் எழுதிய வெக்கை என்ற நூலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.
1968ல் கீழ்வெண்மணி கிராமத்தில் ஏற்பட்ட சாதிச்சண்டையை அப்படியே கண்முன் கொண்டு வந்தது. அதில் பலியானவர்கள் 44 பேர். அனைவரும் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தைத் தழுவி சில காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றது.
தீரன் அதிகாரம் ஒன்று
2017ல் வெளியான படம் தீரன் அதிகாரம் ஒன்று. கொலை, கொள்ளையில் ஈடுபட்டு பெரும் சவாலாக இருந்த கொள்ளைக் கூட்டத்தைக் கூண்டோடு பிடிக்கிறது காவல்துறை. அப்படிப் பிடிப்பவர் காவல்துறை அதிகாரி ஜாங்கிட்.
இவரது தலைமையில் தமிழக காவல் துறை ஆபரேஷன் பவாரியா என்ற திட்டத்தைத் தீட்டி, அதை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதையே திரைப்படமாக்கி இருக்கிறார்கள்.
குப்பி
2006ல் வெளியான படம் குப்பி. இது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னணியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். எல்டிடிஈ இயக்கத்தைச் சேர்ந்த ஒற்றைக்கண் சிவராசன் மற்றும் அவரது கூட்டத்தினர் பெங்களூருவில் பதுங்கி இருந்தபோது நடந்த சம்பவங்களை தத்ரூபமாகக் காட்சிப்படுத்தி இருந்தனர்.
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்
2012ல் வெளியான விஜய் சேதுபதி நடித்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம். இது கிரிக்கெட் விளையாடும்போது பந்து தலையில் பட்டு நினைவை இழக்கிறார் நாயகன். அவருக்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து திருமணம் செய்து வைக்கின்றனர். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சி.பிரேம்குமார். இவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் தான் இந்தப் படமாம். இது நகைச்சுவை கலந்து செம மாஸாக வந்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
பிச்சைக்காரன்
2016ல் பிச்சைக்காரன் படம் வந்தது. ஒரு பணக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம். இதை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தப் படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
வனயுத்தம்
2013ல் வெளியான படம் வனயுத்தம். இது சந்தன கடத்தல் வீரப்பனின் கதை. அதுமட்டும் இல்லாமல் கே.விஜயகுமார் ஐபிஎஸ் குழுவினராக சேர்ந்து திட்டம் தீட்டி வீரப்பனை என்கவுண்டர் செய்ததையும் எடுத்திருக்கிறார்கள்.
கல்லூரி
2007ல் வெளியான படம் கல்லூரி. இதில் தர்மபுரியில் அரசியல்வாதிகளால் பஸ் எரிக்கப்பட்டு 3 மாணவிகள் தீக்கிரையான சம்பவத்தை எடுத்துள்ளார்கள்.