சரும பராமரிப்பு என்பதன் அவசியத்தை தற்காலத்தில் அனைவரும் உணர்ந்துள்ளனர். கோடை வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாப்பதற்காக சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, முகத்தில் ஸ்கார்ப் அணிந்தபடி செல்வது என்று இந்த வெயிலில் இருந்து முகத்தை பாதுகாப்பதற்காக பலர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் சரும பராமரிப்பிற்கு இது மட்டும் போதுமா? என்று கேட்டால்… இல்லை!
இந்த கொளுத்தும் வெயிலில் நம் சருமத்தை பாதுகாக்க நாம் இன்னும் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கிளன்சிங்
கிளன்சிங் என்பது நம் முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கி நம் சருமத்தை தூய்மைப்படுத்துவதாகும். அதிகப்படியான வெப்பத்தினால் நம் சருமத்தில் ஏற்படும் வியர்வை வெளிப்புறம் உள்ள தூசு ஆகியவை நம் முகத்தில் படிந்து விடுகிறது. இந்த மாசுக்கள் முகத்தில் தேங்கினால் நம் முகத்தின் சருமத்தை இது பாதிக்கக்கூடும். எனவே கிளன்சிங் மூலம் இந்த மாசுக்களை நீக்கி சுத்தப்படுத்த வேண்டும்.
எக்ஸ்போலியட் செய்தல்
எக்ஸ்போலியட் செய்தல் என்பது நம் முகத்தில் படிந்துள்ள இறந்த செல்களை நீக்குதல் ஆகும். இந்த இறந்த செல்களை நீக்குவதன் மூலம் புதிய செல்கள் உருவாகும். எனவே நாம் முகத்தை தினமும் எக்ஸ்போலியட் செய்தல் அவசியம். மிகவும் கடினமாக முகத்தை தேய்த்து எக்ஸ்போலியட் செய்யாமல் முகத்திற்கு எந்த அளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என புரிந்து எக்ஸ்போலியட் செய்ய வேண்டும்.
சன் ஸ்கிரீன்
வெயில் காலத்தில் சன் ஸ்கிரீன் என்பது மிகவும் அவசியமான ஒன்று. சூரிய புற ஊதா கதிர்களில் இருந்து நம் முகத்தை பாதுகாத்திட சன் ஸ்கிரீன் அவசியம். சூரிய பாதுகாப்பு காரணி 30 உடைய சன் ஸ்கிரீன் நாம் வெளியில் செல்லும் பொழுது அணிந்து கொள்வது சரும பாதுகாப்பிற்கு அவசியம்.
நீர் அருந்துதல்
நம் சருமத்தை என்றும் நீர் ஏற்றத்துடன் வைத்திருக்க அதிக நீர் அவசியம் இது வெயிலில் சருமம் வறண்டு விடாதபடி பாதுகாத்து நீரேற்றத்துடன் நம் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. வெளியில் செல்லும் பொழுது எப்பொழுதும் கையில் தண்ணீர் பாட்டில் வைத்திருத்தல் மிகவும் அவசியம்.
பழங்கள்
அந்தந்த பருவ காலத்தில் கிடைக்கும் பழங்களை அதிக அளவு உட்கொள்ளுதல் சிறந்த வழி. பழங்கள் நம் சருமத்திற்கு தேவையான நீர் ஏற்றத்தை அளிக்கும். சருமத்தை பாதுகாக்கும். சில பழங்களை ஃபேஸ் பேக்காகவும் நாம் பயன்படுத்தலாம்.
குறைந்த அளவு மேக்கப்
வெளியில் செல்லும்போது முகத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவான அளவு ஒப்பனை அணிந்திருந்தால் நல்லது. நம் சருமத்தில் உள்ள துளைகள் காற்றோட்டத்துடன் இருத்தல் அவசியம். அடுக்கடுக்காய் நாம் நம் முகத்தின் மேல் ஒப்பனைகளை வைத்திருக்கும் பொழுது சருமத்திற்கு தேவையான அளவு காற்றோட்டம் இல்லாமல் சரும பாதிப்புகள் ஏற்படும். அதேபோல் மேக்கப் அணிந்து கொண்டு நாம் வெளியில் சென்றால் வீட்டிற்கு வந்த பிறகு எவ்வளவு நேரம் ஆனாலும் அசதி மிகுதியாய் இருந்தாலும் அந்த மேக்கப்பை களைத்துவிட்டு உறங்கச் செல்லவும்.