புதன் கிழமைக்கு உரிய கிரகம் புதன் ஆகும். இந்த கிழமை பெருமாள் வழிபாடு செய்ய வேண்டிய நாளாக கருதப்படுகிறது. புதன் கிரகம் பேச்சு திறன் கொடுக்க கூடியது. குழந்தைகளுக்கு சரியாக பேச வராமல் இருந்தால் அவர்கள் திருப்பதி ஏழுமலையானை வணங்கினால் விரைவில் குழந்தைகள் பேச தொடங்கி விடுவார்கள்.
புதன் கிழமையில் பிறந்தவர்கள் நன்கு பேச்சாற்றல் கொண்டவர்கள். தங்கள் பேச்சை வைத்து அனைவரையும் ஈர்த்து விடுவார்கள். இவர்களின் பேச்சும் நடைமுறைக்கு உரியதாக இருக்கும், நகைச்சுவையாகவும் இருக்கும். பேசும் பேச்சு வள வள என்று இல்லாமல் கருத்துடன் இருக்கும்.
புதன் ராசியானது கன்னி மற்றும் மிதுனம். இவர்கள் தங்கள் அறிவாற்றலை பெரிதும் பயன்படுத்திக் கொள்வார்கள். எங்கு எதை பேசவேண்டும், செய்யவேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டு செயல் புரிவார்கள். இவர்கள் மேடை பேச்சாளர், கணக்கு சம்பந்தப்பட்ட துறை, பேங்க், கணக்கு ஆசிரியர், பேச்சு சம்பந்த பட்ட துறையில் பணிபுரிவார்கள்.
இவர்கள் சொல்ல வரும் கருத்தை யார் மனதையும் புண்படுத்தாமல் சிரித்து கொண்டே சொல்லிவிடுவார்கள். பிறகு தான் சிரித்து சொன்னதை யோசித்து மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். பெரும்பாலும் இந்தக் கிழமையில் தான் எல்லா செயல்களையும் செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள். குழந்தைகளைப் படிக்க சேர்ப்பது மற்றும் தொடங்குவது இந்த கிழமையில் தான். இவர்கள் எதைக் கேட்டாலும் அதனை பற்றி தெரிந்து வைத்து கொள்வார்கள். புதன் அதிகமாக ஜாதகத்தில் பலமாக இருந்தால் இந்த அமைப்பைக் காணலாம்.
எளிதில் மற்றவர்களிடம் பழக கூடியவர்கள். நண்பர்கள் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதுமே பெரிய நண்பர்கள் வட்டம் இருக்கும். இவர்களின் அறிவான பேச்சால் இவர்களின் நட்பை பலரும் நாடி வருவார்கள். உதவி என்று கேட்டால் உதவி செய்ய தயங்க மாட்டார்கள். இவர்களிடம் சுயநலம் இருக்காது. தானும் முன்னேற்றம் அடைந்து தன்னை சுற்றி இருப்பவர்களும் முன்னேற வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக உதவியும் செய்வார்கள்.
புதன் கிழமையில் பிறந்தவர்கள் வேலை மற்றும் தொழிலில் சாதிப்பார்கள். வியாபாரம் இவர்களுக்கு தேர்ந்த கலை என்றே சொல்லலாம். யாருக்கு எதை சொல்ல வேண்டும், தேவை என்பதை புரிந்துக் கொண்டு தங்கள் தொழிலை வெற்றிகரமாக செய்ய கூடியவர்கள். சில நேரங்களில் இவர்களின் வாழ்க்கை ஏற்றம் இறக்கமாக இருக்கும். இவர்களுக்கு பெரும்பாலும் பயணங்கள் சார்ந்த வேலை பிடிக்கும். பல மனிதர்களை சந்திக்கும் துறைகளான மார்க்கெட்டிங், வியாபாரம், பேங்க் மற்றும் ஆசிரியர் போன்ற துறையில் இருப்பார்கள்.
இவர்களுக்கு வேலை, தொழிலில் இருக்கும் விருப்பம் குடும்ப வாழ்க்கையில் இருக்காது. இவர்களுக்கு பணம் சம்பாதிப்பது, பொருட்கள் சேர்ப்பது, பயணங்கள் மேற்கொள்வது போன்றவற்றில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
புதன் கிரகத்திற்குரிய நிறம் பச்சை என்பதால் இந்த நாட்களில் பச்சை பயன்படுத்தினால் வெற்றி காணலாம். கரும்பச்சை தவிர்த்து இளம்பச்சை ஆடை பயன்படுத்தினால் செய்யும் வேலை வெற்றிகரமாக முடியும்.