2025 புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த ஆண்டிலாவது மன நிம்மதி கிடைக்குமா? குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்குமா என்பது பலரது எதிர்பார்ப்பு சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் மகர ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்று பார்க்கலாம்.
மகரம்
சனி பகவானின் பயணத்தால் கடந்த ஏழரை ஆண்டு காலமாக படாத பாடு பட்டு வரும் மகர ராசிக்காரர்களே.. உங்களுக்கு பிறக்கப்போகும் புத்தாண்டில் மிகப்பெரிய நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கப்போகிறது. காரணம் ஏழரை சனி உங்களை விட்டு விலகப்போகிறது. குரு பகவானின் பார்வையும் குரு பலனும் உங்களுக்கு ஆண்டு முழுவதும் கிடைக்கப்போகிறது. ராகு கேதுவின் பயணமும் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு சாதகமாகவே உள்ளது.
விட்டு விலகும் ஏழரை சனி
சனி பகவான் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உங்கள் ராசிக்கு 3வது வீடான மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிபகவானின் இடப்பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய விடுதலையை தரப்போகிறது. ஏழரை சனி காலம் முடிவடையப்போகிறது. இனி தொட்டதெல்லாம் ஜெயமே என்று சொல்லும் அளவிற்கு வெற்றிகள் தேடி வரப்போகிறது. சனிபகவான் 3வது வீட்டில் பயணம் செய்யும் காலம் உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையப்போகிறது. வருமானத்தை பல வழிகளிலும் கொட்டிக்கொடுக்கப்போகிறார். சொத்து சுகங்களை வாரி வழங்கப்போகிறார் சனி பகவான்.
குரு பெயர்ச்சி
குரு பகவான் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதோடு 11ஆம் வீடு, 9ஆம் வீடுகளின் மீது குருபகவானின் பார்வை கிடைப்பதால் அற்புதங்கள் நிகழப்போகிறது. பணம் பலவழிகளில் இருந்தும் வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் அதிகம் செல்வீர்கள். மே மாதத்தில் குரு இடப்பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குருவின் பார்வை பலத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.
குரு பார்வையால் நன்மை
குரு பகவான் அக்டோபர் மாதத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான கடக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி பயணம் செய்வார். குருபகவானின் பார்வை நேரடியாக உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம், 3வது வீடான முயற்சி ஸ்தானத்தின் மீதும் குருவின் பார்வை படப்போவதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எத்தனையோ தடைகளை கடந்து வந்திருப்பீர்கள் இன்றி வெற்றி மீது வெற்றிகளை தரப்போகிறார் குரு பகவான்.
ராகு கேது பெயர்ச்சி
ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3வது வீட்டிலும் கேது உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டிலும் 2025ஆம் ஆண்டின் முற்பகுதியில் பயணம் செய்கின்றனர். ராகு யோகத்தை வாரி வழங்க போகிறார். தைரியத்துடன் புது தெம்புடன் எதையும் எதிர்கொள்வீர்கள். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். 2025ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு ராகு பகவான் குடும்ப ஸ்தானத்திற்கும் கேது உங்க ராசிக்கு ஆயுள் ஸ்தானத்திற்கும் வருவது சிறப்பு. திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அதே நேரத்தில் உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.
பரிகாரம்:
2025 ஆம் ஆண்டில் மகர ராசிக்காரர்களின் நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். உற்சாகத்துடன் 2025ஆம் ஆண்டினை வரவேற்கத் தயாராகுங்கள். செவ்வாய்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள் நல்லதே நடைபெறும்.