நாடகம் முதல் சினிமா வரை… கிசுகிசுப்பில் சிக்காத நவரச திலகம் முத்துராமன் திரையுலக பயணம்..!!

நடிகர் முத்துராமன் மகன் கார்த்திக் நவரச நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படும் நிலையில் அவரது தந்தை முத்துராமனுக்கு நவரச திலகம் என்ற பட்டத்தை திரையுலக ரசிகர்கள் கொடுத்தார்கள் என்றாலும் அதற்கேற்றபடி அவர் நடிப்பில் நவரசத்திலும் சிறந்து விளங்கினார்.

நடிகர் முத்துராமன் தமிழ் திரை உலகில் கடந்த 60கள் மற்றும் 70களில் பிரபலமாக இருந்தார். அவர் கதாநாயகனாகவும் இரண்டாவது கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் கடைசியில் ஒரே ஒரு படத்தில் வில்லனாகவும் நடித்தார்.

கடந்த 1929 ஆம் ஆண்டு தஞ்சாவூர் சேர்ந்த ஒரத்தநாடு என்ற பகுதியில் பிறந்தவர் முத்துராமன். சிறு வயதிலேயே கலை மீது ஆர்வம் கொண்டவர் வைரம் நாடக சபாவில் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளார். அவருடன் நாடகத்தில் நடித்தவர்கள் தான் மனோரமா, குலதெய்வம் ராஜகோபால் உள்ளிட்டோர்.

பாரதிராஜாவின் என் உயிர் தோழன்… பாராட்டப்பட்ட மறைந்த நடிகர் பாபுவின் நடிப்பு..!!

அதன் பிறகு அவர் எஸ் எஸ் ராஜேந்திரனின் எஸ்எஸ்ஆர் நாடக மன்றம் உள்பட பல நாடக மன்றங்களில் நடித்தார். இந்த நிலையில் தான் அவருக்கு திரையுலக வாய்ப்பு வந்தது. கடந்த 1956 ஆம் ஆண்டு ரங்கோன் ராதா என்ற திரைப்படத்தில் வழக்கறிஞராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே அவர் நாடக அனுபவம் இருந்ததால் சிறப்பாக நடித்ததை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது.

images 72

நடிகர் முத்துராமனுக்கு திருப்புமுனையை கொடுத்த படம் என்றால் அது கடந்த 1962 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சில் ஒரு ஆலயம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் அவர் தனது மனைவியின் முன்னாள் காதலர் தனக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் என்பதை அறிந்து அவர் உருக்கமாக நடித்திருப்பார். முத்துராமன், கல்யாணகுமார், தேவிகா ஆகிய மூன்று பேருமே போட்டி போட்டு நடித்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அவர் எம்ஜிஆர் உடன் அரசிளங்குமரி உள்பட ஒரு சில படங்களில் நடித்தாலும் சிவாஜியுடன் தான் அவர் நிறைய படங்கள் நடித்துள்ளார். சிவாஜியுடன் அவர் இரண்டாவது கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

அன்னை இல்லம், பழனி, திருவிளையாடல், நெஞ்சிருக்கும் வரை, திருவருட்செல்வர், ஊட்டி வரை உறவு, காவல் தெய்வம், ராமன் எத்தனை ராமனடி, இரு துருவம், தங்கைக்காக, சவாலே சமாளி, மூன்று தெய்வங்கள் உள்பட பல படங்களில் சிவாஜியுடன் அவர் நடித்திருப்பார். அதேபோல் கதாநாயகனாகவும் அவர் பல படங்கள் நடித்துள்ளார் என்பதும் அவற்றில் நத்தையில் முத்து, நெஞ்சில் ஒரு ஆலயம் உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்ற படங்கள் ஆகும்.

பாலச்சந்தர் இயக்கத்தில் ஒரு சில படங்களில் முத்துராமன் நடித்திருந்தார். அனைத்து படங்களும் அவரது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பாக அமைந்தது. குறிப்பாக பாமா விஜயம், எதிர்நீச்சல் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள்.

நடிகர் முத்துராமன் ஜெயலலிதாவுடன் நடித்த சூரியகாந்தி என்ற திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது என்று கூறலாம். தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் மனைவியால் ஏற்படும் மன அழுத்தத்தை அவர் தனது நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். கடைசியில் மனம் திருந்தி ஜெயலலிதாவுடன் ஒன்று சேர்ந்து வாழும் காட்சியிலும் அவர் நடிப்பு சிறப்பாக இருந்திருக்கும்.

முன்னணி நடிகர்கள் இணைந்த ஒரே படம்….. ஹிட் அடிக்காமல் போனதே…..!!

முத்துராமன் நடிகைகளுடன் மிக நெருக்கமாக நடிக்க மாட்டார் என்பதால் ஒரு கண்ணியமான நடிகர் என்று திரையுலகில் போற்றப்பட்டு வந்தார். அவர் நடிகை காஞ்சனா உடன் மட்டும் 19 படங்களில் நடித்திருந்தார் என்றாலும் எந்த ஒரு கிசுகிசுவிலும் அவர் சிக்கவில்லை. கேஆர் விஜயாவுடனும் அவர் அதிக படங்களில் நடித்துள்ளார்.தேவிகா மற்றும் ஜெயலலிதா உடனும் சில படங்கள் நடித்திருந்தார்.

இந்த நிலையில் எம்ஜிஆர் சிவாஜி மட்டுமின்றி அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினி கமல் ஆகிய இருவருடனும் சில படங்களில் முத்துராமன் நடித்தார். கமலஹாசன் நடித்த நீயா என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அவர் குரு என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் கமல்ஹாசனின் அப்பாவாக நடித்திருந்தார்.

ரஜினியுடன் அவர் போக்கிரி ராஜா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் வில்லன் கேரக்டரில் நடித்து அசத்திருப்பார். ஆனால் இந்த படம் தான் அவருடைய கடைசி படமாக அமைந்தது.

கடந்த 1981 ஆம் ஆண்டு ஆயிரம் முத்தங்கள் என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்று இருந்த நிலையில் நடை பயிற்சியின்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சில நிமிடங்களில் காலமானார்.  காலமானபோது அவருக்கு வெறும் 52 வயது தான்.

தமிழ் சினிமாவின் அப்பா நடிகர்.. எஸ்.வி. ரங்காராவ் திரைப்பயணம்..!!

முத்துராமன் உடல்நிலையில் மிகுந்த அக்கறையுடன் இருந்து வந்தாலும் திடீரென நெஞ்சுவலி காரணமாக அவர் மறைந்தது அவரது குடும்பத்தாருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. எம்ஜிஆர் சிவாஜி உள்பட பல பிரபலங்கள் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். நடிப்புலகில் ஒரு ஒப்பற்ற நடிகராக இருந்த முத்துராமனின் பெயரைக் காப்பாற்றும் வகையில் அவரது மகன் கார்த்திக் மற்றும் பேரன் கௌதம் கார்த்திக் நடித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews