16 ஐபிஎல் சீசன்களாக சிஎஸ்கேவுக்கு வராத சோதனை.. 12 மேட்சில் முடித்து விட்ட ருத்துராஜ்..

ஐபிஎல் சீசன் என வந்து விட்டாலே இரண்டு அணிகளின் மீது தான் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் என இரண்டு அணிகள், ஐபிஎல் தொடரை கட்டி ஆண்டு வரும் நிலையில் இந்த சீசன் அவர்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை என்று கூறிவிடலாம். 12 போட்டிகள் மட்டுமே ஆடி முடித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் உள்ளது.

இதில் வெற்றி பெற்றாலும் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது என்ற நிலையில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி அதிக விமர்சனத்தையும் சந்தித்திருந்தது. இதேபோல தோனி தலைமையில் ஆடிவந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் ருத்துராஜ் தலைமையில் களமிறங்கி இருந்தது. முதல் பாதி போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்திருந்த சென்னை அணிக்கு கடைசியாக ஆடிய ஆறு போட்டிகள் கை கொடுக்கவே இல்லை.

இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்ட அவர்கள் மீதமிருந்த நான்கு போட்டியிலும் தோல்வி அடைந்திருந்தனர். இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் அவற்றில் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நெருக்கடியான நிலையும் உருவாகியுள்ளது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தாலும் அவர்களின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவே இல்லை. பேட்டிங்கில் எப்படி தொடக்க ஜோடி இதுவரை சென்னை அணிக்கு சிறப்பாக அமையவில்லையோ அதேபோல பந்து வீச்சிலும் பதிரானா மற்றும் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகியோர் மட்டும் தான் தொடர்ந்து விக்கெட்டுகளை குவித்து வந்தனர்.

துஷார் தேஷ்பாண்டே சமீபத்தில் நடந்த சில போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தாலும் மற்ற பவுலர் பங்களிப்பு சிறப்பாக இல்லாததன் காரணமாக தொடர்ந்து தோல்விகளையும் தழுவி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். சமீபத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 231 ரன்கள் எடுக்க பின்னர் ஆடிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

10 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் மட்டுமே சென்னை எடுத்ததால், குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியின் சிறப்பம்சமாக குஜராத் அணியின் தொடக்க வீரர்களான கில் மற்றும் சுதர்சன் சதமடித்து அசத்திருந்தனர். இதன் காரணமாக பல சாதனைகளும் புதிதாக உருவாக்கப்பட்ட நிலையில் தான், சென்னை அணி இந்த சீசனில் மிகவும் மோசமான ஒரு சம்பவத்தையும் தற்போது செய்துள்ளது.

கடந்த 16 சீசன்களில் சிஎஸ்கே அணிக்கு எதிராக மொத்தமாக ஒரே ஒரு சதம் மட்டும் தான் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடப்பு சீசனில் 12 போட்டிகளை ஆடியுள்ள சென்னை அணிக்கு எதிராக இதுவரை நான்கு எதிரணி வீரர்கள் சதமடித்துள்ளனர்.

பேட்டிங் மற்றும் பவுலிங் மட்டுமில்லாமல் ஃபீல்டிங்கில் வரையில் மோசமாக செயல்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் நான்கு சதங்களை விட்டுக் கொடுத்துள்ளது அந்த அணி ரசிகர்களை இன்னும் துன்பத்தில் ஆழ்த்தி உள்ளது என்றே சொல்லலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...