கொரோனா வந்து விட்டது மிக கொடுமையான நோய் இந்த உலகத்தில் பரவிவிட்டது பலரும் இறக்கிறார்கள் அப்பாவிகளும் இறக்கிறார்கள் இதுதான் சமயம் என சில நாத்திக குரூப்ஸ் கடவுள் இல்லை என செய்தி பரப்ப களமிறங்கி விட்டது. இது அவர்களின் அறியாமைதான்.
இந்த உலகத்தில் பிறந்த எல்லோரும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தாலும் பதட்டத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் இப்போது யாரை வணங்குகிறோம், ஆத்மார்த்தமாக நம்புகிறோம் என்றால், இந்த இக்கட்டான நேரத்திலும் பணி செய்யும் மருத்துவர்களை தெய்வங்களாக கருதுகிறோம் செவிலியர்கள் , காவல்துறை என அனைவரையும் தெய்வங்களாக கருதுகிறோம். அதில் மாற்றுக்கருத்தில்லை.
கடவுளை நம்பாதவன், நம்புபவன் இருவருமே இந்த விசயத்தில் ஒற்றுமையுடன் மருத்துவபணியாளர்களை தெய்வங்களுடன் ஒப்பிட்டு பேசி வருகிறோம் இதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் நடக்கும் இந்த பதட்டமான நிகழ்வுகளை வைத்து கடவுள் இல்லை என முடிவுக்கு வர முடியாது. வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால் புதிதாக ஒரு 10 சதவீத மக்கள் நாத்திகவாதிகளாகி விட்டனர் இது உண்மை. என்ன கடவுள் அவனுக்கு சக்தி இருந்தா இப்படி செய்வானா என ஆங்காங்கே அங்கலாய்ப்புகளை பார்க்க முடிகிறது.
ஆனால் மனிதனின் தவறுகளால் தான் இக்கொடூரங்களும் கோரங்களும் நடக்கிறது. தான் மட்டும் வாழ வேண்டும் என்ற மிக அதிகமான மண்டைக்கனம் தான் மனிதனை தற்போது வாட்டுகிறது.
வெயில் நேரத்துல கொஞ்சம் பறவைகளுக்கு மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றி வையுங்க என்று யாராவது சமூக அக்கறையுடன் பதிவிட்டால் உடனே இரண்டு பேர் சென்று எங்களுக்கே தண்ணி இல்ல இதுல பறவைக்கு தண்ணியா என சிலர் கமெண்ட் போடுவான்.
தெருநாய்களுக்கு பிஸ்கட் வாங்கி கொடுப்பதில் இருந்து ஆதரவற்றோர் வறியவர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்வது வரை எத்தனையோ நல்ல மகாத்மாக்கள் இந்த உலகில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் செய்யும் நல்ல செயல்களால்தான் நாம் இன்று வரை அனைத்து பாதிப்புகள் பிரச்சினைகளிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறோம் .சுருக்கமாக சொன்னால் இவர்களால் தான் இந்த உலகம் தப்பி தவறி வாழ்ந்து கொண்டிருக்கிறது.
மதுக்கடையே கதி என கிடப்பான் . ஒரு முறை ஆல்கஹால் உள்ளே சென்றவுடன் திரும்பவும் வாங்கி வாங்கி குடிக்கணும்னு நினைப்பான் உடலை கெடுத்துக்கொள்வான்.ஆனால் ரோட்டோரத்தில் பசியுடன் படுத்திருக்கும் ஒரு வறியவருக்கு இரண்டு இட்லி வாங்கி கொடுக்கலாமே என்று நினைக்க மாட்டான். கையில் வைத்திருக்கும் காசையெல்லாம் குடிக்கே செலவழித்து விடுவான்.
இரண்டு நாட்களுக்கு முன் கூட சமூகவலைதளங்களில் இரண்டு பதிவுகள் வைரலானது. காரைக்காலில் ஒரு சிலர் நாலைந்து தெருநாய்களை துடிக்க துடிக்க கொல்கிறார்கள். அதை வீடியோ எடுத்த பக்கத்து வீட்டு பெண்ணின் கதறலை கூட கேட்கவில்லை. அவர் வீட்டு ஆட்டை நாய் கடித்து விட்டதாம் அதனால் செய்கிறார்களாம். இவர்கள் ஆட்டை மனிதாபிமானத்துடன் வளர்த்து தன் பிள்ளைகளில் ஒருவராக கடைசி வரை இருக்க வைக்க போகிறார்களா என்ன? கசாப்புக்கடைக்காரன் வந்தால் தூக்கி கொடுத்து விடுவார்கள் ஏதோ ஆட்டை காப்பாற்ற மனித நேயத்துடன் செயல்பட்டு நாயை கொன்றதாக சொல்வார்கள் அத்தனையும் மனிதனின் சுயநலம்.
மற்றொரு பதிவு; சிவகங்கை மாவட்டத்தில் வாகன கடன் வாங்கிய நபர் ஒருவர் அந்த பணத்தை செலுத்த முடியாததால் அவரை கடத்தி வந்து மிரட்டுகின்றனர் வாயில் பூட்ஸ் காலால் பலமுறை மிதிக்கின்றனர். லேசாக தண்ணீர் கொடுக்கின்றனர். குரல்வளையில் காலை வைத்து அழுத்துகின்றனர் இது போல செய்வதெல்லாம் மனித நேயமா என்பது தெரியவில்லை.
இது போல விசயங்களால் தீய அதிர்வலைகள் பெருகுகிறது. தற்போதைய கொரோனா கொடூர சூழல் எல்லாம் நடக்கிறது. அதை மனிதன் புரிந்து கொள்வதில்லை.
தெய்வ சன்னதிகள் எல்லாம் பூட்டப்பட்டது என்றால் தெய்வங்கள் மனிதன் என்ற கொடூரனிடம் இருந்து சிறிது நாட்கள் விலகி இருக்கிறது.
இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி இருப்பதே கடவுள்தான் . பணம் மனிதனுக்கு தேவைதான் பண்டமாற்று முறை மாறி பணம் வந்த பிறகு அநியாய செயல்கள் பெருகிவிட்டது.மணல் கடத்தல், உணவு கலப்படம்,காட்டை அழித்தல், விலங்குகளை அழித்தல், தெருநாய்களை விஷம் வைத்து அழித்தல், தானியங்களை தின்கிறது என மயிலுக்கு விசம் வைத்தல் என அநியாயம் அக்கிரமங்கள் தொடரத்தான் செய்கிறது.
இதை சமூக அக்கறையுடன் சொல்பவர்களின் கருத்து யாராலும் மதிக்கப்படுவதில்லை. இந்த உலகம் அனைத்து உயிருக்கானது என்ற அடிப்படையில்தான் இந்த பூமியை இயற்கையை இறைவன் படைத்துள்ளான். அனைத்து தவறுகளையும் செய்து விட்ட மனித இனத்துக்கு இறைவன் தற்போது தண்டனை கொடுத்து வருகிறான் என அறிந்து கொள்ளலாம்.
மனிதனால் அதகளம் செய்யப்பட்ட விலங்குகள் பறவைகளை தெருவில் மனிதன் என்ற கொடூரனின் நடமாட்டமின்றி இறைவன் பாதுகாப்பாக வைத்துள்ளான் அவை எல்லாம் வழக்கம் போல் ஜாலியா இருக்கின்றன. விலங்குகள் பறவைகளிடம் சென்று கேட்டுப்பார் அதற்கு வாய் இருந்தால் கடவுள் இருக்கிறான் என்று சொல்லும்.
உன்னைப்போல தேவைக்கு கடவுளை பயன்படுத்தி விட்டு கடவுள் கொடுத்த நல்ல விசயங்களை வைத்து சுயநலமாக தவறான வழியில் பணம் சேர்த்து ,தீயவைகளை செய்து தவறான வழிக்கு செல்வது விலங்குகள் இல்லை.
மனிதா நீ செய்த அடாவடிகளாலும் அக்கிரமங்களாலும்தான் இந்த கொடூரத்தை அனுபவிக்கிறாய் என்பதை உணர்ந்துகொள்.
கர்மாவின் படிதான் இந்த உலகம் இயங்குகிறது. சிறிது நாட்கள் அடைபட்டால் கடவுளே இல்லை என்று தவறான முடிவுக்கு வராதே.
கம்ப்யூட்டரில் வைரஸ் ஏறி விட்டால் அதன் இயக்கம் நின்று விடும் விண்டோஸ் வைரஸ் பழுதாகி விட்டால் உடனே 300 ரூபாய் கொடுத்து ஓஎஸ் என ஆபரேட்டிங்க் சிஸ்டத்தை மாற்றுகிறோமல்லவா உடனே புதிய கம்ப்யூட்டர் போல ரெஃப்ரெஷ் ஆகி வேலை செய்கிறதல்லவா?
அதுபோலத்தான் மனிதன் என்ற கொடிய வைரஸால் இறைவழிபாட்டுத்தலங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி மூடப்பட்டுள்ளது/ தற்போது வந்துள்ள கொரோனா என்ற ஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தால் சிறிது காலம் கோவில் நடை மூடிக்கிடந்து மனிதனின் வாசனையே இன்றி கடவுள் ரெஃப்ரெஷ் ஆகி விடுவார். அக்காலங்களில் நல்லவர் வாழ்வர் தீயவர் வீழ்வர் இது சத்தியம்.