கரும்பு ஏந்திய முருகன் – அறிவோம் ஆலயம்

ஆண்டிக்க்கோலத்தில், பாலகனாய், போர்க்கோலத்தில், கல்யாணக்கோலத்தில் என விதம் விதமா கையில் வேலோடு தரிசித்திருப்போம். கொஞ்சம் வித்தியாசமாய் கரும்போடு இருக்கும் முருகனை தரிசிக்கனுமா?! அப்ப பெரம்பலூர் அருகில் செட்டிக்குளத்தில் பார்க்கலாம். ராஜராஜசோழனுக்கு  தஞ்சாவூரும் , ராஜேந்திர…

463a7627dc6811d8622ac44aafc41cff

ஆண்டிக்க்கோலத்தில், பாலகனாய், போர்க்கோலத்தில், கல்யாணக்கோலத்தில் என விதம் விதமா கையில் வேலோடு தரிசித்திருப்போம். கொஞ்சம் வித்தியாசமாய் கரும்போடு இருக்கும் முருகனை தரிசிக்கனுமா?! அப்ப பெரம்பலூர் அருகில் செட்டிக்குளத்தில் பார்க்கலாம்.

ராஜராஜசோழனுக்கு  தஞ்சாவூரும் , ராஜேந்திர சோழனுக்கு கங்கைகொண்ட சோழபுரமும் சோழ தேசத்தின் தலைநகராகத் இருந்ததுன்னு நம் எல்லோருக்குமே தெரியும். அதேபோல், பராந்தகச்சோழன் காலத்தில் உறையூர் தலைநகராக விளங்கியது என்பது நமக்குத் தெரியும்தானே!? அப்படி, உறையூரை தலைநகராகக் கொண்டு சோழ மன்னன் ஆட்சி செய்த காலம் அது! இந்த ஊரைச் சேர்ந்த வணிகர் ஒருவர், வடக்கு நோக்கி பயணப்பட்டார். வழியில், இரவு நேரம் வந்தது. அங்கே இருந்த கடம்ப வனத்தில் தங்கிச் செல்ல முடிவெடுத்தார். 

கையில் வணிகத்துக்காக கொண்டு வந்த பொன்னும் பொருளும் இருந்ததால், பாதுகாப்பு கருதி அருகிருந்த அரசமரத்து கிளையில் ஏறி படுத்துக்கொண்டார். நீண்ட தூரம் நடந்து வந்த களைப்பில் நன்றாக தூங்கிவிட்டார். நள்ளிரவில், எதோ சத்தம் கேட்டு விழித்த போது, கடம்பவனத்தின்  ஓரிடத்தில் போரொளி வீசியது. அவ்வொளியின் மத்தியில் இருந்த சிவலிங்கத்தை தேவர்கள் போல் தோற்றமளித்த சிலர் பூஜை செய்வதைக் கண்டார். இதுபற்றி மன்னன் பராந்தகசோழனிடம் தகவல் தெரிவித்தார். அச்சமயத்தில் குலசேகரபாண்டிய மன்னன், விருந்தினராக அங்கு வந்திருந்தான். இரு மன்னர்களும் அங்கு வந்தனர். இரு மன்னர்களுடன், சேவகர்களூம், வணிகரும் கடம்பவனம் வந்தனர். 

d4f168f1a0698faf1297fb8a59874bd7

வணிகர் குறிப்பிட்டபடி அங்கு எந்த சிவலைங்கமும் கண்ணுக்கு தென்படவில்லை. வனம் முழுக்க அனைவரும் தேடினர். அப்போது, கையில் கரும்புடன் வந்த முதியவர் ஒருவர் அவர்களிடம் சிவலிங்கத்தைக் காட்டினார். பிறகு மறைந்து விட்டார். மன்னர்கள் வியந்து நின்றபோது, அருகிலிருந்த குன்றின்மீது முதியவர், கையில் வைத்திருந்த கரும்புடன் முருகனாகக் காட்சி கொடுத்தார். தான் விருந்தாளியாக வந்தபோது தரிசனம் கிடைக்கப்பெற்றதால் மகிழ்ந்த குலசேகரபாண்டியன் அந்த மலையில் முருகனுக்கும், லிங்கம் இருந்த இடத்தில் சிவனுக்கும் கோயில் எழுப்பினான். இதுவே இக்கோவிலின் தலவரலாறு

சரியாக மலைமீது 240 படிகளை ஏறிச்சென்றால் வரும் மலைக்கோவிலில் உச்சிக்குடுமியுடன் முருகன் கருவறையில் காட்சியளிக்கிறார். உற்சவர் கையில் கரும்பு இருக்கிறது. கரும்பு பார்ப்பதற்கு கரடு முரடாக இருந்தாலும், உள்ளே இனிமையான சாறு இருக்கும். இதைப்போல, பார்ப்பதற்கு கரடு முரடானவராக மனிதன் தோற்றமளித்தாலும், நற்குணம் கொண்ட நல்ல மனம் இருக்க வேண்டுமென்பதை கரும்பைக் கையில் வைத்திருப்பதன் மூலம் இவர் உணர்த்துகிறார்.  மலைக்கு நேரேயுள்ள ஊருக்குள் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. சித்திரை மாதப்பிறப்பன்று படிபூஜை நடக்கும்.

790b987de172d63bd25b33d017aaee20-1

இந்த ஊருக்கு செட்டிக்குளம் என பெயர் வந்தது எப்படியெனவும் ஒரு கதை இருக்கு.. பொதிகை சென்ற அகத்தியர் இங்கே வரும்போது, முருகன் வளையல் விற்கும் செட்டியாராக அவருக்கு காட்சி தந்தார்.  அன்றிலிருந்து இந்த ஊருக்கு  “செட்டிகுளம்’ எனப்பேர் வந்துஅது.   இந்த ஊருக்கு வடபழநிமலை எனவும் மற்றொரு பெயர் உண்டு.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாதாந்திர சஷ்டியன்னிக்கு முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து குழந்தைவரம் வேண்டுக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் கரும்புத்தொட்டிலில் குழந்தையைப் படுக்க வைத்து கோவிலை வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

இக்கோவிலுக்கு திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் ரோட்டில் 44 கி.மீ., தூரத்திலுள்ள ஆலத்தூரில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ.,சென்றால் செட்டிகுளத்தை அடையலாம். சென்னையில் இருந்து வருபவர்கள் பெரம்பலூரில் இருந்து திருச்சி செல்லும் ரோட்டில் 15 கி.மீ.,கடந்தால் ஆலத்தூரை அடையலாம். ஆலத்தூரில் இருந்து பஸ் குறைவு. ஆனா ஷேர் ஆட்டோ உண்டு.

இன்று சஷ்டி தினம். முருகனை மனமுருகி வணங்கி வேண்டும் வரம் பெறுவோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன