சிறு குழந்தைகள் பலருக்கு கல்வி சரியாக வருவதில்லை. சில குழந்தைகளுக்கு எவ்வளவுதான் சொல்லி கொடுத்தாலும் அவர்களுக்கு உடனே அதை கிரகித்துக்கொள்ளக்கூடிய சக்தி என்பது இருக்காது. சில பெற்றோர்களுக்கு சின்ன வயதில் குழந்தை சரியாக படிக்காமல் ஞாபக சக்தி இல்லாமல் போனால் அவர்களுக்கு கவலை வந்து விடும். நம் மகனுக்கு, மகளுக்கு படிப்பு வராமல் போய்விடுமோ என நினைக்கும் பெற்றோர்கள் அதிகம்.
அவர்கள் இந்த சரஸ்வதியை வழிபடலாம். தமிழ் நாட்டிலேயே சரஸ்வதிக்கென்றே தனியாக அமைந்துள்ள கோவில் இது ஒன்றே.அதுதான் கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவில்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் இக்கோவில் உள்ளது. மயிலாடுதுறை டூ திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது இந்த ஊருக்கு அருகில்தான் கோவில் உள்ளது. காரில் வருபவர்கள் பூந்தோட்டம் வந்து அருகில் உள்ள இக்கோவில் செல்லலாம். கும்பகோணத்திலிருந்தும் பூந்தோட்டத்துக்கு பேருந்து உள்ளது.
இத்தலத்தின் மூலவரே சரஸ்வதி தான். வெண்ணிற ஆடையில், வெண் தாமரையில் பத்மாசனத்தில், வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கி அமர்ந்திருக்கிறார்.
கல்விக்காக நாம் சரஸ்வதி தேவியைத்தான் வணங்குவோம் அதுவும் வீட்டில் புகைப்படம் வைத்துதான் வணங்குவோம். தமிழ் நாட்டில் சரஸ்வதிக்கென்று பழமையான பெரிய கோவில் கிடையாது இந்த கோவில் மட்டுமே உண்டு.
நவராத்திரிக்கு உங்கள் குழந்தைகளோடு இங்கு சென்று வேண்டிக்கொள்ளுங்கள் ஞானம் பெருகும் கல்வி சிறக்கும்.