யாராவது உறவினர்கள், நண்பர்கள் வந்துவிட்டால் அவர்களுக்கு கொடுக்க இனிப்பு ஏதுமில்லாத நிலையில் வீட்டிலிருக்கும் ரவை, சர்க்கரையினை வைத்தே இந்த பாயாசம் செய்து கொடுத்து அசத்தலாம். சேமியா, ஜவ்வரிசி, பாசிப்பருப்பு பாயாசம் சாப்பிட்டு அலுத்துபோனவர்களுக்கு இது மாறுதல் ருசியை தரும். விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்..
ரவை – 1 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
முதல் தேங்காய் பால் – 1 கப்
இரண்டாம் தேங்காய் பால் – 2 கப்
பாதாம் – 10
திராட்சை – 15
முந்திரி – தேவைக்கு
செய்முறை..
முந்திரி, திராட்சியினை நெய்யில் வறுத்து கொள்ளவும். ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும் . பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும். வறுத்து ஆறிய ரவையை ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு அதனுடன் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். ரவை நன்கு கொதித்ததும், அதில் சர்க்கரையை போட்டு நன்கு கிளறி விட வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்ததும், முதல் தேங்காய் பாலை ஊற்றி ஒரு கிளறு கிளறி, ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கி, அதன் மேல் முந்திரி, பாதாம், திராட்சையை தூவி பரிமாறவும்.
சூப்பரான ரவை – தேங்காய் பால் பாயாசம் ரெடி!!!
சர்க்கரைக்கு பதிலாக வெல்லமும் சேர்க்கலாம். கூடுதல் ருசி தரும். தேவைப்பட்டால் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்துக்கொள்ளலாம்.