தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் என்பது திமுக வரலாற்றிலேயே மிகக் கடினமான ஒன்றாக மாறியிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்வி, அக்கட்சியைத் தமிழகத்தின் ஆளுங்கட்சி என்ற இடத்திலிருந்து மாற்றி, முதன்மை எதிர்க்கட்சியாகக் சுருக்கியுள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இல்லாத சூழல், டெல்லியில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலும் முந்தைய நெருக்கம் இல்லாத நிலை எனப் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேதான் திமுக இன்று பயணிக்கிறது. இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்பப் புதிய சக்திகள் எழுந்துள்ள நிலையில், திமுக தலைமை தனது அடுத்தகட்ட வியூகங்களை மிகவும் கவனமாக வகுக்க வேண்டிய சூழலில் இருக்கிறது.
மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் மசோதாக்கள் குறித்த திமுகவின் அணுகுமுறை தற்போது மாறியிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், எந்தவொரு தேசியக் கூட்டணிக்கும் நிரந்தரமான ஆதரவையோ அல்லது குருட்டுத்தனமான எதிர்ப்பையோ வெளிப்படுத்தாமல் இருக்க அக்கட்சி முயல்கிறது. குறிப்பாக, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட சில மசோதாக்களுக்கு தேவைப்பட்டால் ஒரு இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கவும் திமுக தயக்கம் காட்டவில்லை என்பதை சமீபத்திய அரசியல் நகர்வுகள் உணர்த்துகின்றன. இது அக்கட்சியின் பிழைப்புவாதமாகவோ அல்லது யதார்த்தமான அரசியலாகவோ விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
அமலாக்கத்துறை மற்றும் மத்திய விசாரணை அமைப்புகளின் அழுத்தம் என்பது, எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவை அச்சுறுத்தும் ஒரு முக்கிய காரணியாகவே தொடர்கிறது. ஆட்சியில் இருக்கும்போது இருந்த பாதுகாப்பு வளையம் தற்போது பலவீனமடைந்திருக்கும் நிலையில், சட்ட ரீதியான சவால்களை எதிர்கொள்வது அக்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதுபோன்ற அழுத்தங்கள் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துமோ அல்லது தலைமையை முடக்குமோ என்ற அச்சம் தொண்டர்கள் மத்தியில் நிலவுவதை மறுப்பதற்கில்லை. ஆனால், இத்தகைய நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்வது என்பதிலேயே ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சி சோதிக்கப்படுகிறது.
தனிப்பட்ட ரீதியில் எம்.கே. ஸ்டாலினைப் பொறுத்தவரை, இது அவரது அரசியல் வாழ்வின் மிகப்பெரிய சோதனைக் காலம். 2011 முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த கொளத்தூர் தொகுதியிலேயே அவர் தோல்வியடைந்திருப்பது, அவரது தலைமைத்துவத்தின் மீதான நம்பகத்தன்மையைச் சோதிக்கும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் பலரும் தேர்தலில் தோல்வியுற்றிருப்பது, அமைப்ப ரீதியாகக் கட்சியை மீண்டும் கட்டமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. கோவையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்கள் முதல் அடுத்தகட்ட போராட்டங்கள் வரை, கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்தச் சோர்வைத் தணிக்கவும், அடுத்தடுத்த தேர்தல்களை எதிர்கொள்ளவும் ஸ்டாலின் புதிய வியூகங்களைக் கையிலெடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, திராவிட மாடல் கொள்கையைத் தாண்டி, இன்றைய இளைஞர்களின் மனநிலைக்கு ஏற்ப புதிய அரசியல் கோஷங்களை முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. கூட்டணி அரசியலில் ஏற்பட்டுள்ள பிளவுகள் மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய சக்திகளின் வரவு, திமுகவின் வாக்கு வங்கியைப் பெரிதும் பாதித்துள்ளது. இதனால், பழைய பாணி அரசியலை விடுத்து, புதிய பரிமாணத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலில் ஸ்டாலின் இருக்கிறார்.
மொத்தத்தில், திமுக தற்போது ஒரு இக்கட்டான குறுக்குச் சந்தில் சிக்கியுள்ளது. மாநில அதிகாரமும், டெல்லியில் வலுவான கூட்டணிப் பலமும் இல்லாத சூழலில், மத்திய அரசின் மசோதாக்களில் இணக்கமாக இருப்பது அல்லது எதிர்க்கட்சியாகத் தனது குரலைப் பதிவு செய்வது என ஒவ்வொன்றையும் மிகத் துல்லியமாகச் செய்ய வேண்டிய நிலையில் ஸ்டாலின் உள்ளார். “பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுவோம்” என்ற நம்பிக்கை வார்த்தைகள் தலைவரிடம் இருந்து வந்தாலும், களத்தில் உள்ள யதார்த்தம் மிகவும் கடினமானது. இந்த அரசியல் சூறாவளியில் இருந்து திமுக எப்படி மீண்டு வருகிறது என்பதுதான், தமிழக அரசியலின் அடுத்த பத்து ஆண்டுகளின் திசையைத் தீர்மானிக்கப் போகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
