இவ்வுலகில் யார் நல்லவர், யார் கெட்டவர்? பிறர் சொல் கேட்டு முடிவெடுக்கலாமா?

வாழ்க்கை என்றால் அது மேடு பள்ளங்கள் நிறைந்தது தான். இன்பமும் துன்பமும் கலந்த கலவை தான். அதுல நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை அடையாளம் காண்பது தான் நமக்கு வேலை. சில இடங்களில்…

வாழ்க்கை என்றால் அது மேடு பள்ளங்கள் நிறைந்தது தான். இன்பமும் துன்பமும் கலந்த கலவை தான். அதுல நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை அடையாளம் காண்பது தான் நமக்கு வேலை. சில இடங்களில் நெளிவு சுழிவுடன் பயணித்தால் தான் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும். கொஞ்சம் விவரமா பார்க்கலாமா…

காலம் எப்போது யாரை எந்த உயரத்தில் வைக்கும் என்று கணிக்க முடியாது. யாரையும் நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. இன்று நாம் அலட்சியமாக கருத்துபவர்களை நாளை நாம் அண்ணாந்து பார்க்கும் நிலை வரலாம். அதை உணர்ந்து எப்போதும் அடக்கத்துடன் வாழுங்கள். புகழ்ச்சியில் வளர்பவனுக்கு தான் பிறர் துணை தேவை. முயற்சியில் வளர்பவனுக்கு தன்னம்பிக்கையே துணை.

பிறர் சொல்வதை கேட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள். உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். ஏனெனில் சொல்பவர்கள் மாறலாம். உங்கள் மனம் மாறாது. வறுமையில் வாடும் பலரை பார்க்கும் போது தன்னிடம் பணம் இருந்தால் உதவி இருக்கலாம் என்ற எண்ணம் இருப்பவர்களில் பெரும்பான்மையோர் பண வசதி இல்லாதவர்களே.

நிலைமை மாறினால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது பொய். மகிழ்ச்சியாக இருந்தாலே நிலைமை மாறி விடும் என்பது நிதர்சனமான உண்மை. பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.

பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பையும் காட்டுங்கள். புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதை விடுங்கள்.

உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது. உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது. வயது ஆக ஆக தலைமுடி நரைத்து பற்கள் விழுவதற்கு பதிலாக, நாக்கே விழுந்துவிடுமாறு ஓர் ஏற்பாடு செய்தால் நாட்டில் குழப்பமே இருக்காது. மறைத்து பேசுபவன் நல்லவனாகவும், மனதில் பட்டதைப் பேசுபவன் கெட்டவனாகவும், சித்தரிக்கப்படுகின்றனர் இவ்வுலகில்.

பொறுத்தார் பூமி ஆள்வார், பொறுமையுள்ளவர் பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், எப்போதும் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்று, புகழுடன் விளங்குவார் என்பதே உண்மை.

பிரச்சனையை சந்திக்கும் போது அது தான் முடிவாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள். அது வாழ்க்கையின் வளைவான இடம் அவ்வளவுதான். வாழ்க்கையில் நெருக்கடி வருகிற போது மனிதர்கள் மறைந்து போகிறார்கள். வேடங்கள் வெளியே வருகின்றன.