தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதுமே உணர்ச்சிப்பூர்வமான, கணிக்க முடியாத திருப்பங்களைக் கொண்டது. காலம் காலமாக இங்கு இருபெரும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக மட்டுமே மேலாதிக்கம் செலுத்தி வந்துள்ளன. இந்தச் சூழலில், சினிமாத் துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்து மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்ற விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கி முழுநேர அரசியலில் இறங்கியிருப்பது ஒட்டுமொத்த அரசியல் சூழலையும் உற்றுநோக்க வைத்துள்ளது. நீண்ட காலமாக அரசியலைத் தூரத்திலிருந்து கவனித்து, திட்டமிட்டு களம் கண்டுள்ள விஜய்யை ஒரு சாதாரண, புதிய அரசியல்வாதியாக திராவிடக் கட்சிகள் எடைபோட்டுவிட்டன என்பதுதான் தற்போதைய அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. திமுக மற்றும் அதிமுகவுக்கு என்னென்ன அரசியல் தந்திரங்கள் தெரியுமோ, அத்தனையும் விஜய்க்கும் அக்குவேராக ஆணிவேராகத் தெரியும் என்பதை அவருடைய தற்போதைய அரசியல் நகர்வுகள் நிரூபித்து வருகின்றன.
விஜய் மேடைகளில் பேசும்போதும் மக்கள் முன்னிலையிலும் “நெறிமுறையான, தூய்மையான அரசியல்” என்று முன்வைக்கும் கோட்பாடு முழுக்க முழுக்க பொதுமக்களுக்கானது மட்டுமே. அவர் மக்களுக்கு நேர்மையானவராக இருப்பார், மக்கள் பணத்தைச் சுரண்டாமல் தூய்மையான நிர்வாகத்தைக் கொடுப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதே தூய்மையையும் நாகரிகத்தையும் அவர் தன்னை எதிர்க்கும் அரசியல் எதிரிகளிடமும் எதிர்பார்ப்பார் என்று நினைப்பது அரசியல் அறியாமை ஆகும். தன்னை வீழ்த்த நினைக்கும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அவர் பட்டுக்கையுறை அணிந்து அரசியல் செய்யப் போவதில்லை. “நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை என் எதிரிதான் தீர்மானிக்கிறான்” என்ற உலகப் புகழ்பெற்ற பழமொழிக்கு ஏற்ப, திமுகவும் அதிமுகவும் எந்த மாதிரியான தரைமட்ட அரசியலையோ அல்லது திரைமறைவு தந்திரங்களையோ கையாளுமோ, அதே பாணியில் இறங்கிப் பதிலடி கொடுக்க விஜய்யும் தயாராகிவிட்டார்.
அரசியல் ரீதியாகத் தன்னைச் சுற்றி வைக்கப்படும் பொறிகளையும் விமர்சனங்களையும் விஜய் எதிர்கொள்ளும் விதம் மிகவும் சுவாரஸ்யமானது. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் எழுப்பும் வீணான, மொக்கையான கேள்விகளுக்கு அவர் மைக் பிடித்துப் பதில் சொல்லி தன் நேரத்தை வீணடிப்பதில்லை. சட்டசபையிலோ அல்லது பொது மேடைகளிலோ மிக முக்கியமான தருணங்களில் மட்டுமே அளந்து பேசி, எதிரிகளுக்குப் பயங்கரமான அதிர்வலைகளை ஏற்படுத்துகிறார். குறிப்பாக, அவர் திமுக தலைவர் ஸ்டாலினை மட்டுமே தனது முதன்மை அரசியல் எதிரியாகக் கருதி, அவருடைய பேச்சுகளுக்கு மட்டுமே நேரடியாகப் பதிலடி கொடுக்கிறார். உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மற்ற இளம் மற்றும் நடுத்தர தலைவர்களை அவர் முற்றிலும் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது, அந்தத் தலைவர்களுக்கும் அவர்களின் கட்சியினருக்கும் பெரும் எரிச்சலையும் ஏமாற்றத்தையும் தந்து வருகிறது.
விஜய்யின் மிகப்பெரிய அரசியல் பலமாகப் பார்க்கப்படுவது அவர் ஊடகங்களை அணுகும் விதம் தான். பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தினமும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, ஏதாவதொரு சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறி அரசுக்கு நெகட்டிவான சூழலை உருவாக்கி வரும் நிலையில், விஜய் ஊடகங்களை முற்றிலும் புறக்கணித்துத் தள்ளி வைக்கிறார். ஒருதலைப்பட்சமாகச் செயல்படும் ஊடகங்களைக் கண்டுகொள்ளாமல் மௌனம் காப்பது அவருக்குப் பெரியளவில் சாதகமாக முடிகிறது. இந்த ‘சைலண்ட்’ அரசியல் பாணிதான் இன்னும் பல ஆண்டுகளுக்கு அவருடைய பிரதான உத்தியாக இருக்கப் போகிறது. எதிரிகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஊடகங்கள் காத்துக்கிடக்கும் வேளையில், அவர் தனது மௌனத்தின் மூலமே அவர்களின் தலைகளைப் பிச்சிக்கொள்ள வைக்கிறார்.
மக்களின் சேவையில் எந்தவொரு அலட்சியமும் இருக்கக்கூடாது என்பதில் விஜய் மிகவும் கண்டிப்புடன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் கூட, சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மக்கள் பணிகளில் அலட்சியமாக இருப்பதாக வந்த ரகசிய ரிப்போர்ட்டை அடுத்து, அவர்களை நேரில் அழைத்து முதல்வர் விஜய் வெளுத்து வாங்கியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. திமுக, அதிமுக போல் சுயநலமாகச் செயல்படாமல், மக்களுக்கு நல்லது செய்ய மட்டுமே நாம் ஆட்சிக்கு வந்திருக்கிறோம் என்ற உண்மையை அவர் தன் கட்சியினருக்குத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். சிறிய தவறுகளைக் கூட சகித்துக் கொள்ளாமல், மக்களுக்குத் தேவையானதை உடனே செய்ய வேண்டும் என்ற அவரது இந்த அதிரடி உத்தரவுகள், இதுவரை தமிழ்நாடு பார்த்திராத ஒரு புதிய முதலமைச்சரின் ஆளுமையை மக்களுக்குக் காட்டியுள்ளது.
இறுதியாக, விஜய் அரசியல் ரீதியாக என்னென்ன வியூகங்களை வகுத்தாலும், யாரைக் கட்சியில் சேர்த்தாலும் அல்லது நீக்கினாலும் அதைப் பற்றி மக்களுக்கு எவ்வித கவலையும் இல்லை. பொதுமக்களைப் பொறுத்தவரை லஞ்சமும் ஊழலும் குறைகிறதா, முறைகேடுகள் தடுத்து நிறுத்தப்படுகிறதா, அரசு கஜனாவில் பணம் சேருகிறதா, கொடுத்த வாக்குறுதிகள் முறையாக நிறைவேற்றப்படுகிறதா என்று மட்டும்தான் பார்க்கிறார்கள். மக்கள் நலம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விஜய்யின் மேல் மக்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை இப்போதைக்கு எந்தவொரு எதிர்க்கட்சியாலும் குலைக்க முடியாது. தற்போதைய அரசியல்வாதிகள் விஜய்யின் அமைதியையும் ஆக்ரோஷத்தையும் கணிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், அவர் தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
