தமிழக அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்கும், பரபரப்பான திரைமறைவு நகர்வுகளுக்கும் பஞ்சமில்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போதைய அரசியல் சூழலில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் முக்கிய மையப்புள்ளியாக மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், வரவிருக்கும் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். தனது இந்த விருப்பத்தை தவெகவின் முக்கியப் புள்ளியான அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் அவர் மிகவும் பிடிவாதமாகக் கூறி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக திருச்சி கிழக்கை மையப்படுத்தி தவெக மற்றும் விசிக இடையே ஒரு புதிய அரசியல் மல்யுத்தம் தொடங்கியுள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் தொகுதி கோரிக்கையோடு மட்டும் நின்றுவிடாமல், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சரான விஜய்யிடம் அடுக்கடுக்கான பல அதிரடி கோரிக்கைகளையும் முன்வைத்து வருகிறார். விசிகவுக்குப் பலம் வாய்ந்த பவர்ஃபுல் இலாகாக்கள் ஒதுக்கப்பட வேண்டும், அதற்கேற்ப தற்போதைய கேபினெட்டை மாற்றி அமைக்க வேண்டும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 3 மேயர் இடங்கள் வழங்கப்பட வேண்டும், அரசு வாரியப் பதவிகளில் 4 இடங்கள் விசிகவுக்கு ஒதுக்கப்பட வேண்டும் மற்றும் அரசு வழக்கறிஞர் பதவிகளில் 5 சதவீத இடஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பன திருமாவின் முக்கிய நிபந்தனைகளாக உள்ளன. இருப்பினும், முதலமைச்சர் விஜய்யும் அவரைச் சுற்றியுள்ள தவெகவின் அதிகார மையங்களும் திருமாவளவனின் இந்த அதிரடியான கோரிக்கைகளை உடனே ஏற்கத் தயாராக இல்லை என மறுப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தன் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதை ஆதவ் அர்ஜுனா மூலம் அறிந்துகொண்ட திருமாவளவன், தவெக தலைமைக்கு அரசியல் ரீதியாகச் செக் வைக்கத் தொடங்கியுள்ளார். நாங்கள் தவெக அமைச்சரவையில் நீடிக்கிறோமே தவிர, தவெகவின் நிரந்தரக் கூட்டணிக் கட்சியாக மாறுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்கிற பாணியில் அவர் பேசி வருகிறார். தனது கோரிக்கைகளுக்குத் தவெக அரசு உரிய மதிப்பு தராவிட்டால், ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறவும் தயங்க மாட்டோம் என்கிற மறைமுக மிரட்டல் தொனியையே திருமாவின் இந்த நகர்வுகள் காட்டுவதாக விசிக தரப்பினர் கருதுகின்றனர். மற்ற பதவிகள் மற்றும் கோரிக்கைகளை ஓரளவுக்கு விட்டுக் கொடுத்தாலும், திருச்சி கிழக்குத் தொகுதியில் தான் போட்டியிடும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதில் திருமா உறுதியாக உள்ளார்.
மறுபுறம், திருச்சி கிழக்கைக் குறிவைத்து தவெகவுக்குள் மற்றொரு உள்நாட்டு அரசியலும் ஓடிக்கொண்டிருக்கிறது. அண்மையில் தவெகவில் இணைந்துள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக விஐபிக்கள் பலரும், திருச்சி கிழக்குத் தொகுதியில் தங்களுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனாவிடமும் செங்கோட்டையனிடமும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக ஆலோசித்துள்ள தவெகவின் முக்கிய நிர்வாகிகள், தங்களுக்குள் மூன்று தகுதியான நபர்களின் பெயர்களை இறுதி செய்து ரகசியமாகப் பட்டியலிட்டு வைத்துள்ளனர். இந்த விருப்பப் பட்டியலை தவெக தலைவர் விஜய்யிடம் நேரில் கொண்டு சென்று விவாதிக்கவும், உள்ளூர் பிரமுகர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்துப் பேசவும் அவர்கள் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.
திருச்சி கிழக்கை மையமாக வைத்து தவெக கூட்டணியில் இப்படிப்பட்ட ரகசிய வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் வேளையில், பிரதான எதிர்க்கட்சியான திமுகவிலும் இதனைச் சுற்றிப் பலத்த அரசியல் கணக்குகள் போடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தற்போதைய சூழலில் சட்டமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதியாகப் போக முடியவில்லையே என்கிற பலத்த ஆதங்கம் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இருந்து வருகிறது. அவரிடம் மிகவும் நெருக்கமாகவும் உரிமையோடும் பழகக்கூடிய திமுகவின் மூத்த தலைவர்களிடம் பேசும் போதெல்லாம் ஸ்டாலினின் இந்த ஆதங்கம் அவரது பேச்சில் வெளிப்படையாகத் தெரிவதாகவும், ஸ்டாலின் குடும்பத்தினரிடமும் இதே எண்ணமே ஓடிக்கொண்டிருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த மனநிலையைப் புரிந்துகொண்ட திமுக மாஜி அமைச்சர் கே.என்.நேரு, “தலைவரே, நீங்கள் இல்லாத சட்டமன்றத்தை எங்களால் பார்க்க முடியவில்லை, எனவே நீங்கள் கண்டிப்பாகத் திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும்” என்று ஸ்டாலினிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். நீங்கள் சம்மதம் மட்டும் சொல்லுங்கள், தொகுதியில் மற்ற வேலைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதியளிக்கும் நேரு, இந்த விவகாரத்தில் துர்கா ஸ்டாலினிடமும் தொடர்ந்து பேசி வருகிறார். உண்மையில், திருச்சி கிழக்கில் தனது அரசியல் எதிரியான அன்பில் மகேஷுக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைத்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்தே நேரு இந்தத் திட்டத்தைப் போடுகிறார். ஸ்டாலின் போட்டியிட்டால் மட்டுமே அன்பில் மகேஷின் வாய்ப்பைத் தடுக்க முடியும், இல்லையெனில் அன்பில் மகேஷ் எப்படியாவது காய்களை நகர்த்தித் தனக்கான சீட்டை வாங்கி விடுவார் என்று கணித்துத்தான் நேரு இத்தகைய வியூகங்களை வகுக்கிறார். சட்டமன்றத்திற்குள் செல்ல வேண்டும் என்ற யோசனை ஸ்டாலினுக்கு இருந்தாலும், திருச்சி கிழக்குக் குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்பதே தற்போதைய நிலவரமாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
