அதிமுக என்ற மாபெரும் பேரியக்கத்தின் வரலாற்றையும், அதன் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையையும் உற்றுநோக்கும் எவருக்கும் ஒரு பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. புரட்சித்தலைவி ஜெய்லலிதா அவர்கள் இன்று உயிருடன் இருந்து, ஒருவேளை கட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்திருந்தாலும் கூட, இந்த இயக்கத்தில் இருந்து ஒரே ஒரு தலைவராவது கட்சியை விட்டு வெளியேற துணிந்திருப்பாரா அல்லது தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய முன்வந்திருப்பார்களா என்பதுதான் இன்று தொண்டர்கள் எழுப்பும் ஆகச்சிறந்த கேள்வியாக உள்ளது. அம்மா இருந்தவரை போயஸ் கார்டன் வாசலில் தவம் கிடந்த தலைவர்கள், இன்று எடப்பாடி பழனிசாமியின் பலவீனமான தலைமையால் அடுத்தடுத்து கட்சியை விட்டும், பதவிகளை விட்டும் விலகி ஓடுவது அதிமுகவின் ஒட்டுமொத்த ஆளுமை சரிவையே காட்டுகிறது.
ஒரு வலுவான, ஆளுமை மிக்க தலைமை இல்லாத காரணத்தினால்தான் தற்போதைய அரசியல் சூழலில் அதிமுகவுக்குள் இப்படிப்பட்ட தொடர் பின்னடைவுகளும், அவலங்களும் அரங்கேறி கொண்டிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக திறமையின்மையும், அனைவரையும் அரவணைத்து செல்ல முடியாத பிடிவாத போக்குமே மூத்த தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் அதிருப்திக்கு முதன்மை காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜெயலலிதா அவர்களின் காலத்தில் இருந்த அந்த ராணுவ கட்டுக்கோப்பும், தலைமைக்கு கட்டுப்படும் விசுவாசமும் இன்று எடப்பாடியின் கீழ் மொத்தமாக சிதைந்து, ஆளுமை இல்லாத ஒரு வெற்றுக்கூடாரமாக அதிமுக மாறியிருப்பது காலத்தின் கொடுமையாகும்.
தேர்தல் தோல்விகளுக்கு பிறகும், உட்கட்சி பூசல்களுக்கு பிறகும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிடிவாதமாக பதவியை தக்கவைத்து கொள்ள நினைப்பது கட்சிக்கு மேலும் பலவீனத்தையே சேர்க்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இப்பொழுது கூட ஒன்றும் கெட்டு போய்விடவில்லை, சுயநலத்தை ஓரங்கட்டிவிட்டு, கட்சியின் எதிர்கால நலனை கருதி எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பை தகுதியான வேறொரு ஆளுமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொண்டர்கள் மத்தியில் பலமாக ஒலிக்கிறது. கட்சியை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு, அவர் அரசியலில் இருந்தே முழுமையாக விலகிக் கொள்வதுதான் அவருக்கும், இந்த இயக்கத்திற்கும் செய்யக்கூடிய நன்மையாக இருக்கும்.
தற்போதைய அரசியல் வியூகங்களையும், எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளையும் வைத்துப் பார்க்கும்போது, இவரால் அதிமுகவை இனி ஜென்மத்திற்கும் தமிழ்நாட்டில் ஒரு ஆளுங்கட்சியாக மாற்றவே முடியாது என்பதுதான் கசப்பான உண்மையாக தெரிகிறது. தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளுக்குப் பொறுப்பேற்காமல், கட்சியைத் தன் வசம் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்று அவர் நினைப்பது தொண்டர்களின் உழைப்பை வீணடிக்கும் செயலே தவிர வேறொன்றுமில்லை. திராவிட பாரம்பரியத்தின் மாபெரும் அடையாளமாக இருந்த ஒரு கட்சியை, தொடர்ந்து மூன்றாவது இடத்திற்கும், வீழ்ச்சிக்கும் தள்ளிய பெருமை மட்டுமே எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்குக் சேரும் என்று அடிமட்டத் தொண்டர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
ஜெயலலிதா அவர்களின் ஆளுமை என்பது எதிரிகளையும் மிரள வைக்கும் ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தது, ஆனால் இன்றைய தலைமையோ சொந்த கட்சி எம்.எல்.ஏ-க்களையே தக்கவைக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மாற்று பாதையை தேர்ந்தெடுப்பது, எடப்பாடியின் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மையையே அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. உணர்வுகளையும், உழைக்கும் தொண்டர்களின் மனங்களையும் மதிக்கத் தெரியாத ஒரு தலைமை நீடிப்பதால், கட்சியின் கட்டமைப்பே தற்பொழுது அடிமட்ட அளவில் மொத்தமாக நிலைகுலைந்து போயுள்ளது.
முடிவாக, அதிமுகவின் வாக்கு வங்கியும், அதன் செல்வாக்கும் நாளுக்கு நாள் சரிந்து வரும் வேளையில், மாற்று அரசியல் சக்திகள் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. இந்த இக்கட்டான காலகட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது பிடிவாதத்தை கைவிடாமல் இருந்தால், அது தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஒரு அரசியல் இயக்கத்தின் இறுதி அத்தியாயமாக அமைந்துவிடும். எனவே, இனியாவது யதார்த்தத்தை உணர்ந்து, ஆளுமை இல்லாத இந்தத் தலைமை சுயபரிசோதனை செய்து கொண்டு, தகுதியானவர்களிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு வழிவிடுவதே அதிமுகவின் இழந்த பெருமையையும், அதன் எதிர்காலத்தையும் மீட்பதற்கான ஒரே வழியாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
