கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற்றுள்ள சூழலில், ஆளுங்கட்சியாக இருந்த திமுக அடைந்துள்ள வீழ்ச்சியும், அதற்கு பிறகு அக்கட்சி தலைமை காட்டி வரும் பதற்றமும் தமிழக அரசியல் களத்தில் விவாத பொருளாக மாறியிருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல்களும், அதில் ஏற்படும் வெற்றி தோல்விகளும் மிகவும் இயல்பானவை என்பதைப் புரிந்து கொள்ளாமல், தோல்விக்கு பிறகு திமுக புலம்பி வருவது அதன் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
ஜனநாயகத்தின் மீதும் மக்கள் தீர்ப்பின் மீதும் குறைந்தபட்ச மதிப்பும் பண்பும் இருந்தால், “மக்களைப் பார்த்து எப்படி ஸ்டாலினைத் தோற்கடிக்கலாம்?” என்று இவ்வளவு ஆதங்கத்தோடு கேள்வி எழுப்ப மாட்டார்கள். இந்த தோல்வியை சாமானிய மக்களின் முடிவாக ஏற்க மனமில்லாமல், ஒட்டுமொத்த மக்கள் மீதே கோபத்தைக் காட்டுவது திமுகவிற்குத் தான் பின்னடைவை ஏற்படுத்தும் என பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
இங்கு வேடிக்கை என்னவென்றால், தேர்தல் தோல்விக்கு தங்களின் சொந்த கட்சிக்காரர்களை கொண்டு நியாயம் கற்பிக்காமல், சினிமா துறையில் இருக்கக்கூடிய சில ‘வாடகை வாய்களை’ வைத்து திமுக தலைமை தற்பொழுது வக்காலத்து வாங்கி வருகிறது. தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் சில நடிகர்களையும், கவிப் பேரரசு என்று தம்பட்டம் அடித்து கொள்பவர்களையும் கொத்தடிமைகளை போல் பயன்படுத்தி, தவெக அரசுக்கும் மக்களுக்கு எதிராகவும் அவர்கள் கருத்துகளை பரப்ப செய்கிறார்கள். தங்களின் அதிகார பலத்தால் கலைத்துறையினரை தூண்டிவிட்டு பேச வைக்கும் இந்த உத்தி, மக்கள் மத்தியில் திமுகவின் மீதான வெறுப்பை இன்னும் பல மடங்கு வளர்க்கும் என்ற குறைந்தபட்ச அரசியல் புரிதல் கூட தற்போதைய திமுக தலைமைக்கு இல்லாமல் போனது ஏனோ என்ற கேள்வி எழுகிறது.
கடந்த காலங்களில் திமுக எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளையும் பார்த்திருக்கிறது, அதே நேரத்தில் படுதோல்விகளையும் சந்தித்திருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் எத்தனையோ முறை ஆட்சியை இழந்து, மிக கடுமையான தோல்விகளை சந்தித்தபோது கூட, இதுபோன்று ஒருபோதும் புலம்பியதே கிடையாது. தோல்விகளை தன் அரசியல் சாணக்கியத்தனத்தால் எதிர்கொண்டு, மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கை பெற அவர் உழைத்தாரே தவிர, இப்படி பொறுமை இழந்து தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்கவில்லை. ஆனால், தற்பொழுது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவால் ஏன் ஒரு தோல்வியைக் கூட தாங்கி கொள்ள முடியவில்லை என்கிற ஆதங்கம் அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடமிருந்தே எழ தொடங்கியுள்ளது.
திமுகவின் இந்த தோல்விக்குப் பிறகு, அவர்கள் நடத்தும் சில கூட்டங்களிலோ அல்லது பொது மேடைகளிலோ எதற்காக சினிமாக்காரர்களை கூட்டி கொண்டு போய் நிறுத்துகிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. தவெக-வின் தலைவர் விஜய் அவர்களின் சினிமா பின்னணியையும், அவரது அசுர மக்கள் செல்வாக்கையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக, இவர்களும் தங்களுக்கு சாதகமான சினிமா முகங்களை முன்னிறுத்த பார்க்கிறார்கள். சினிமா உலகை சேர்ந்தவர்களை வைத்து பேச வைத்தால், மக்கள் இன்னமும் அதனை ரசித்து கொண்டு சும்மா இருப்பார்கள் என்று திமுக நம்புவது அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது. இத்தகைய செயல்கள் அனைத்தும் திமுகவிற்கு ஆதரவாக மாறுவதற்கு பதிலாக, அவர்களுக்கு எதிராகவே திரும்பித் தாக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
திமுக தங்களின் தவற்றை திருத்திக் கொள்ளாமல், தங்களுக்கு இன்னும் மிஞ்சியிருக்கும் கொஞ்சம் நஞ்சம் ஓட்டுகளையும் ஒழித்துக் கட்டுவதற்காகவே வைரமுத்து, சத்யராஜ் போன்ற மூத்த சினிமா பிரபலங்களை இப்போது தேர்தல் களத்திற்கு பின்னால் இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறது. ஏற்கனவே மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் இத்தகைய நபர்களை முன்னிறுத்தி பேசுவது, திமுகவின் மீதமிருக்கும் நற்பெயரையும் கெடுக்கும் செயலாகவே முடியும். மக்கள் தற்பொழுது புதிய அரசியலையும், நேர்மையான நிர்வாகத்தையும் தேடிப் பயணிக்கும் வேளையில், பழைய முகங்களை வைத்துப் பழைய பாணியிலேயே அரசியல் செய்ய நினைப்பது தற்கொலைக்குச் சமமானதாகும்.
இறுதியாக, தமிழகத்தின் மிக மூத்த அரசியல் இயக்கமான திமுகவை வெளியில் இருக்கும் எந்தவொரு எதிர்க்கட்சியோ அல்லது மாற்று சக்தியோ நினைத்தாலும் எளிதில் அழித்துவிட முடியாது; ஆனால், திமுகவை அதன் சொந்த காரணங்களும், தற்போதைய தலைமையின் தவறான அணுகுமுறைகளும் மட்டுமே அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என்பதுதான் கசப்பான உண்மை. எதார்த்தத்தை உணர்ந்து மக்கள் தீர்ப்பை மதித்து செயல்படாமல், வன்மத்தையும் புலம்பலையும் மட்டுமே மூலதனமாக கொண்டு வாடகை வாய்களுடன் திமுக பயணித்தால், வரும் காலங்களில் தமிழ்நாட்டு அரசியல் வரைபடத்தில் இருந்தே அக்கட்சி காணாமல் போகும் நிலையை தவெக-வின் மக்கள் சக்தி உருவாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
